எதிர்பார்த்தது போல் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மோதல் மீண்டும் வெடித்தது. மெகா தொலைக்காட்சி சீரியல் போல இந்த மோதல் முடிந்தபாடில்லை. டி20 தொடரை வென்ற இலங்கை அணி கிண்ணத்துடன் அணியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் மணிக்கட்டில் நேரத்தை காட்டுவது போல் சமிக்ஞை செய்தது பங்களாதேஷ் அணியை உண்மையிலேயே கடுப்பேற்றியது.
அந்த செய்கைக்கு வரலாறு உண்டு, உலகக் கிண்ணத்தில் கிரிக்கெட் மரபையே மீறி அஞ்சலோ மத்தியூஸுக்கு பங்களாதேஷ் அணி அதிலும் அணித் தலைவராக இருந்து ஷகீப் அல் ஹசன் ‘டைம் அவுட்’ ஆட்டமிழப்புப் பெற, தொடர்ந்து பந்து வீச வந்த மத்தியூஸ், ஷகீபை ஆட்டமிழக்கச் செய்தபின் ‘டைம் அவுட்’ செய்கை செய்ய இப்போது இலங்கை அணி மீண்டும் அந்த செய்கையை கண்பித்திருக்கிறது.
இதனைப் பார்த்த பங்களாதேஷ் அணித் தலைவர் நஜ்முல் ஹொஸை ஷான்டோ, டைம் அவுட் சம்பவத்தில் இருந்து வெளியேறி இலங்கை அணி நிகழ்காலத்துக்கு வர வேண்டும் என்று அழாத குறையாக கேட்டுக்கொண்டார்.
ஆனால் டைம் அவுட் விவகாரம் இலங்கை அணிக்கு உண்மையிலேயே வலியை ஏற்படுத்தி இருந்தாலும் அதனை சுமந்துகொண்டு பங்களாதேஷ் சென்றதாகக் குறிப்பிட முடியாது. முதலாவது டி20 போட்டியின் ஆரம்பத்திலேயே டைம் அவுட்டை தூக்கிப் பிடித்தது பங்களாதேஷ் அணி தான்.
சில்ஹட்டில் கடந்த மார்ச் 4ஆம் திகதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக அவிஷ்க பெர்னாண்டோவை வீழ்த்திய ஷெரிபுல் இஸ்லாம் மணிக்கட்டை காண்பித்து டைம் அவுட் செய்கை செய்தார். அதனை அடுத்தே உசுப்பேறிய இலங்கை அணி தொடர் வெற்றிக்குப் பின்னர் மொத்தமாக பதிலடி கொடுத்தது.
ஷான்டோவுக்கு அந்த யதார்த்தம் புரியாமல்தான் இலங்கைக்கு அறிவுரை கூற வந்தார்.
இப்படித் தான் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மோதல்கள் முழுவதும் இருந்து வருகிறது. மைதானத்தில் நடுவில் நிகழ்பவை உண்மையில் பார்ப்பவர்களுக்கு வெறுமனே காட்சிகளாகத் தான் தெரிகிறது. அங்கே யார் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்களோ அவர்கள் மீது தான் கோபம் அதிகமாக இருக்கும்.
மூன்றாவது டி20 போட்டியின்போது நுவன் துஷாரவின் பந்தில் ஹட்ரிக் விக்கெட்டில் ஒன்றாக தெறஹீத் ஹிரிதோய் போல்டான பின் அரங்கு திரும்புவதற்கு முன் இலங்கை வீரர்களுடன் சண்டைக்குச் செல்ல ஐ.சி.சி. அவருக்கு அபராதம் கூட விதித்தது. ஹிரிதோய் சாதாரணமாக கோபப்பட்டிருக்க மாட்டார். என்றாலும் அந்தக் கோபத்தை வெளிப்படுத்தும் நாகரிகம் அவருக்கு புரியவில்லை.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான பகைமையின் பூர்வீகத்தை தோண்டிப் பார்த்தால் அது ‘நாகின் நடனத்தில்’தான் ஆரம்பித்தது.
2018 பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விக்கெட் வீழ்த்திய நஸ்முல் இஸ்லாம் நாகின் நடனம் அதாவது பாம்பு நடனத்தை ஆடினார். அந்தக் கொண்டாட்டம் சற்று மிகையானதாக எதிரணிக்கு கோபத்தை ஏற்படுத்துவதாகத் தான் இருந்தது. ஆனால், அது சாதாரண கொண்டாட்டமாகக் கூட எடுத்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால் இரண்டு நாள் கழித்து நடந்த போட்டியில் தனுஷ் குணதிலக்க, பங்களாதேஷ் அணியை நையாண்டி செய்வது போன்று பாம்பு ஆட்டத்தை ஆடினார். பின்னர் சுதந்திரக் கிண்ணத்தில் ஆட இலங்கை வந்த பங்களாதேஷ் அணி அந்த பாம்பு ஆட்டத்தையும் தன்னோடு எடுத்து வந்தது.
2018 மார்ச் 10 ஆம் திகதி நடந்த போட்டியில் முஷ்பீகுர் ரஹீம் இலங்கைக்கு எதிராக வெற்றி ஓட்டத்தை விளாசி, கோபத்துடன் அந்த நாகின் நடனத்தை ஆடியதை பார்ப்பதற்கு அழகாக இருக்கவில்லை. உண்மையில் அது தனுஷ்க குணதிலக்கவின் ஆட்டத்திற்கு பதில் ஆட்டமாகத் தான் இருந்தது.
தொடர்ந்து மார்ச் 16 ஆம் திகதி நடந்த போட்டியில் நடுவர் நோபோல் வழங்காததற்காக போட்டியில் இருந்து வெளியேறுவதாக ஷகீப் அல் ஹசன் எச்சரித்தது, இலங்கை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டது, அந்தப் போட்டியில் வெற்றியீட்டியபின் பயிற்சியாளர்களும் சேர்ந்து பாம்பு ஆட்டம் ஆடியது, ஓய்வறையின் கண்ணாடியை உடைத்தது என்று பங்களாதேஷ் அணி அட்டகாசம் காட்டியது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் போதியபோது இறுதிப் பந்துக்கு ஐந்து ஓட்டங்கள் எடுக்க இருந்த நிலையில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி பாம்பு ஆட்டம் ஆடியது எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று தெரியவில்லை. என்றாலும் அப்போது அரங்கில் இருந்த இலங்கை ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அது இருந்தது.
இதன் நீட்சியாக 2022இல் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டி ஒன்றில் சாமிக்க கருணாரத்ன பாம்பு ஆட்டம் ஆடியது பயங்கரமாக இருந்தது. இதனை அடுத்து பாம்பு ஆட்டம் முடிந்து டைம் அவுட் கதை தொடங்கியது.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான வரலாற்று பழைமை வாய்ந்த ஆஷஸ் கிண்ணத் தொடரை பார்த்தால் ஒரு நாகரிகமான பகைமை இரு அணிகளுக்கும் இடையில் தெரியும். ஏன் உண்மையான எதிரி நாடுகளான இந்தயா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் கூட விளையாட்டு அடிப்படையில் மாத்திரம் தான் பகைமை தெரியும். ஆப்கான் – பகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலும் மோதல் இருக்கிறது. ஆனால் மைதானத்தில் அது தெரியாது.
இதன்படி பார்க்கப்போனால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் இடையே மோதல் இடம்பெறுவதற்கு மைதானத்திற்கு வெளியில் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. இரு நாடுகளும் பிராந்திய நட்பு நாடுகள். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது கஷ்டத்திற்கு மத்தியிலும் பங்களாதேஷ் கடன் கொடுத்தது.
இதற்கு அப்பால் இரு அணிகளுக்கும் இடையில் நடக்கும் மோதல் என்பது ஒரு செயற்கையான பகைமை என்ற ரகத்தில் தான் சேர்க்க வேண்டும். தற்போது இரு அணிகளும் ஒருநாள் தொடரில் ஆடுகின்றன. இரண்டு போட்டி முடிவில் தொடர் 1–1 என சமநிலை பெற்றிருக்கிறது. தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (18) சிட்டக்ரோமில் நடைபெறப்போகிறது. ஒருவேளை அதில் பங்களாதேஷ் வென்றால், டி20 தொடர் வெற்றிக்குப் பின்னர் இலங்கை செய்ததற்கு பதிலடி கொடுப்பதற்கான சாத்தியம் அதிகம் இருக்கின்றன.
இலங்கை அணி வெற்றி பெற்றாலும் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, இந்த மோதல் நாடகத்திற்கு ‘தொடரும்’ போடுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக இருக்கின்றன.
எஸ்.பிர்தெளஸ்