Home » இறுதிக்கட்ட பயிற்சிகளில் இலங்கை அணி வாய்ப்பை இழக்கும் அணித் தலைவர் ஷரித

இறுதிக்கட்ட பயிற்சிகளில் இலங்கை அணி வாய்ப்பை இழக்கும் அணித் தலைவர் ஷரித

by Damith Pushpika
March 17, 2024 6:00 am 0 comment
தலைமை பயிற்றுவிப்பாளர் அண்டி மொரிஸ்ஸன்

இலங்கை தேசிய கால்பந்து அணியை இறுதியாக தலைமை தாங்கி வழிநடாத்திய ஷரித்த ரத்னாயக்க, இலங்கை அணி அடுத்த வாரம் விளையாடும் சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை தேசிய அணி அடுத்து இடம்பெறவுள்ள பிபாவின் சர்வதேச போட்டித் தொடரான நான்கு நாடுகள் பங்கேற்கும் நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடவுள்ளது. போட்டிகளை நடாத்தும் இலங்கையுடன் பபுவா நியுகீனியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தெற்காசிய நாடான பூட்டான் ஆகியன இந்த போட்டிகளில் மோதவுள்ளன.

எனவே, இந்தப் போட்டிகளுக்கு இலங்கை அணியை தயார்படுத்தும் நோக்கில் இலங்கையில் கழகங்களில் விளையாடும் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள லீக்களில் ஆடும் வீரர்களை இணைத்த ஒரு ஆரம்பகட்ட இலங்கை குழாம் கொழும்பில் தங்கி இருந்து தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த குழாத்தில் உள்ள வீரர்களை பரிசீலனை செய்யும் விதத்தில் உள்நாட்டு கழகங்களுடன் சில பயிற்சிப் போட்டிகளிலும் இந்த வீரர்கள் விளையாடியுள்ளனர்.

அதேபோன்று, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் அணியான மென்செஸ்டர் சிடி அணியின் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த அண்டி மொரிஸ்ஸனின் பயிற்றுவிப்பின்கீழ் தயார்படுத்தப்பட்டு வரும் இலங்கை அணி, அண்மைய போட்டிகளில் காண்பித்த திறமை வித்தியாசமானதாகவே இருந்தது.

அதே போக்கில்தான் தற்போதும் அணியில் பலவிதமான புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, தேசிய அணியை சிறந்த ஒரு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் முயற்சியில் இலங்கை கால்பந்து சம்மேளனம் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே பயிற்சிகளின்போது இலங்கை அணியை இறுதியாக வழிநடாத்திய ஷரித்த ரத்னாயக்க உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கை குழாத்தில் இணைந்த வெளிநாட்டுகழகங்களில் ஆடும் சில வீரர்கள்

இலங்கை குழாத்தில் இணைந்த வெளிநாட்டு
கழகங்களில் ஆடும் சில வீரர்கள்

இலங்கை தேசிய அணியில் பல காலம் இடம்பெற்று வரும் சிரேஷ்ட வீரரான ஷரித்த ரத்னாயக்க, அணியின் பின்களத்தில் சிறந்து விளங்கும் வீரராகவும் உள்ளார்.

குறிப்பாக, இலங்கை அணி இறுதியாக மோதிய யெமன் அணிக்கு எதிரான 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியை தலைமை தாங்கிய ஷரித்த ரத்னாயக்க, சொந்த மண்ணில் யெமனை 1-1 என சமன் செய்வதற்கான கோலைப் பெற்றுக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் முன்புற சிலுவை தசைநார் உபாதைக்கு (Anterior Cruciate Ligament Injury) உள்ளாகி தற்போது அதற்கான சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும், எவ்வாறாயினும் அவர் இன்னும் சில மாதங்களுக்கு குறித்த உபாதைக்கான சிகிக்சை மற்றும் ஓய்வைப் பெற வேண்டும் என்றும் இலங்கை கால்பந்து வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அணியில் இருக்கும் சிரேஷ்ட மற்றும் அனுபவ வீரர் சுஜான் பெரேரா ஏற்கனவே தான் அணியின் தலைமைப் பதவியில் இருந்து தற்காலிகமாக ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்த நிலையிலேயே ஷரித்த அணியின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். எனவே, தற்போது யார் இலங்கை தேசிய அணியின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி கால்பந்து ரிசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனினும், தேசிய அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஹர்ஷ பெர்னாண்டோ அல்லது அதிக போட்டி அனுபவம் கொண்ட வசீம் ராசிக் போன்ற ஒருவருக்கு குறித்த பதவி வழங்கப்படலாம் என்றும் கால்பந்து விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் ஷரித்த ரத்னாயக்க

சிகிச்சை பெற்று வரும் ஷரித்த ரத்னாயக்க

அணியின் தற்போதைய இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் சுஜான் பெரேராவே அணியின் தலைமைப் பொறுப்பை எடுத்து வழிநடாத்தவும் கூடும். காரணம் இதற்கு முன்னரும் தேசிய அணி அழுத்தங்களுக்கு மத்தியில் இருந்த வேளைகளில் அணியை வழிநடாத்திய அனுபவம் சுஜானிடம் இருக்கின்றது.

எது எவ்வாறு இருப்பினும், இலங்கை அணி குறித்த எதிர்பார்ப்பு இம்முறை எல்லோர் மத்தியிலும் அதிகமாகவே இருக்கின்றது. காரணம், வெளிநாட்டு கழகங்களுக்காக ஆடி வரும் பல வீரர்கள் இலங்கை பிரஜாவுரிமையைப் எடுத்து தற்போது இலங்கை தேசிய அணியில் அடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். எனவே, பிபாவின் தரப்படுத்தலில் 204ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு இந்த வீரர்களின் இணைவு சிறந்த ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்று பலரும் நம்பி இருக்கின்றனர்.

எனினும், வெளிநாடுகளில் தமது கழக மட்டப் போட்டிகளில் தற்போது விளையாடிக்கொண்டுள்ள வசீம் ராசிக், டிலொன் மற்றும் குளோடியோ போன்ற சில முக்கிய வீரர்கள் இந்த சர்வதேசப் போட்டிகளுக்காக தயார்படுத்தபட்டு வரும் இலங்கை அணியுடன் இன்னும் இணையவில்லை. அதேபோன்றே, இந்த போட்டிகளுக்காக விளையாடும் இறுதி வீரர்களைக் கொண்ட இலங்கையின் இறுதிக் குழாமும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போதைய பயிற்சிகள் மற்றும் வீரர்களின் தயார்நிலை என்பவற்றை கருத்தில் கொண்டு போட்டிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் இலங்கை குழாம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, மிகப் பெரிய ஒரு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் எதிர்வரும் 22ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த சர்வதேச நட்பு ரீதியிலான போட்டிகள் இலங்கை கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

****

போட்டி அட்டவணை

மார்ச் 22 – பி.ப 3 மணி  மத்திய ஆபிரிக்க குடியரசு எதிர் பூட்டான்

மார்ச் 22 – இரவு 8.45 மணி இலங்கை எதிர் பபுவா நியுகீனியா

மார்ச் 25 – பி.ப 3 மணி  மத்திய ஆபிரிக்க குடியரசு எதிர் பபுவா நியுகீனியா

மார்ச் 25 – இரவு 8.45 மணி  இலங்கை எதிர் பூட்டான்

அர்ஷாட் அன்வர்தீன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division