இந்திய மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் தமிழ் நாட்டுக்கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க தலைமையிலான கூட்டணியே தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. ஏற்கனவே தி.மு.க கூட்ணைியில் இணைந்திருந்த கட்சிகளே மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன. ஆரம்பத்தில் தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்தாலும் கூட்டணிக் கட்சிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அழைத்துப் பேசியதால் பிரச்சினையின்றி தொகுதிப்பங்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் தி.மு.க 21, காங்கிரஸ் 10, விடுதலை சிறுத்தைகள் 2 ,சி.பி.ஐ 2, சி.பி.எம் 2 ம.தி.முக – 1, இயூ.முலீ – 1. கொ.ம.தே.க – 1 என தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை இதே கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களை கைப்பற்றி வெற்றிக் கூட்டணியானது. மீண்டும் இதே கூட்டணியே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. இந்த வெற்றிக் கூட்டணியில் மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தன்னையும் இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முயற்சி எடுத்தார். ஆனால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காமல், மேல்சபை உறுப்பினர் பதவி வழங்குவதாக உறுதியளித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இன்னொரு பெரிய கட்சியான அ.தி.மு.க கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி யாரும் தேடி வராததால் இவர்களே களத்தில் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தியதில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க.வை தங்கள் அணிக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். கடந்த முறை அ.தி.மு.க பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. தேனி ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதியிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்தமுறை பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, தனித்து நிற்பதால் அ.தி.மு.கவுடன் கூட்டு வைத்துக் கொள்ள பிறகட்சிகள் தயங்குகின்றன.
பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகிறது. மக்களிடம் பெரியளவில் செல்வாக்கு இல்லாத வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், நடிகர் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கான ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும்தான். ஊழல் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தி.மு.க இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும் என்றால், அது பாரதிய ஜனதா கட்சியால் தான் முடியும் தமிழகத்தில் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்,என்று அண்ணாமாலை தனது கருத்தை முன்வைத்து தேர்தல் களத்தில் பயணித்து வருகிறார். ஆனால் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கும், பொறுப்பு மக்களிடம் தான் இருக்கிறது.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு கொடியும் இல்லாமல். கட்சியும் இல்லாமல் தவித்து வருகிறார் சட்டப் போராட்டங்கள் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பறித்து விடலாம் என்கிற எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இதனால் வருகின்ற மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை நிறுத்தும் அ.தி.முக வேட்பாளர்களை தோல்வி அடைய செய்வோம் என்கிற பரப்புரையோடு களமிறங்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் களம் கண்ட ஒ.பன்னீர்செல்வத்தை காலச்சக்கரம் அவருடனேயே கொண்டு சேர்த்து இருக்கிறது. அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி தினகரனுடன் கைகோர்த்துள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்து வருகிறார்.
ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த அரசியல் பயணம் அவருக்கு எளிதாக இருக்கவில்லை. எந்தப் பக்கம் எப்படிப் பயணிப்பது என்று தெரியாமல் தவிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படலாம். இதை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டின் இன்னொரு முக்கியமான கட்சியாக நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் , நாங்கள் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறோம், என்று அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்து விட்டார். இத்தோடு நின்று விடாமல் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார். கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்துள்ள சீமானின் தைரியமான முடிவை பலரும் பாராட்டினாலும் மக்கள் எந்தளவுக்கு ஆதரிப்பார்கள் என்பதை தேர்தல் முடிவுக்குப்பின்புதான் தெரியவரும்.
தமிழ்நாட்டில் தி.மு.க, கூட்டணிக் கட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று பரவலாகப் பேசப்பட்டாலும், ஜனநாயக பூர்வமான அணுகுமுறையைத்தான் மேற்கொண்டு வருகின்றது என்று கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் கடந்த தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிட்டன. தற்போது ஒன்றாக இணைந்துள்ளன இந்த ஒற்றுமை இந்திய அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்பலாம் என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைத்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்த சிந்தனையுடன் அமர்ந்து பேசித் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டனர் என்பது தான் உண்மை என்று கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறும்போது. எண்ணிக்கையில் அல்ல எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட தலைவர்கள் இவர்கள்.