முழுமையாகக் கொண்டு வரப்படும் மின்சார மோட்டார் சைக்கிள் இறக்குமதியினால் இலங்கையின் உள்நாட்டு இலக்ட்ரோனிக் மோட்டார் சைக்கிள் உற்பத்தி துறை பாதிக்கப்படும் ஆபத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு, 23.08.2022ம் திகதியின் 12 /- 2022ஆம் இலக்க வர்த்தமானியின் மூலம் முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் உள்நாட்டு மின்சார கோகார்ட் உற்பத்தியாளர் இருப்பதால், அரசாங்கம் மின்சார கோகார்ட் இறக்குமதி செய்வதற்கு அண்மையில் தடை விதித்துள்ளது. இது உள்ளூர் தொழில் முயற்சியாளரை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானமாகும். கடந்த காலங்களில் எந்தவித பொறுப்பும் இல்லாமல் மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த இறக்குமதியாளர்கள் திடீரென காணாமல் போனதால் இலங்கையில் மின்சார மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். எனவே மின்சார மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பும், அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் முழுமையாகக் கொண்டு வரப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்கள், குறிப்பிட்ட சில சில நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தையை ஆக்கிரமித்துள்ளமையும், அரசாங்கத்தின் எந்த வித ஒழுங்கமைப்புக்களுமின்றி அச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது.
50 வீதமான இலங்கையின் உள்நாட்டு உதிரிப்பாகங்களைத் தமது உற்பத்திகளுக்காகப் பயன்படுத்துவதாக இலங்கையின் முதலாவது, ஒரேயொரு மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் உள்நாட்டு உதிரிப்பாகங்களின் விலை அதிகம் என்பதாலும், இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களைக் கொண்டு வரும் போது சுங்க வரி செலுத்த வேண்டியிருப்பதாலும் இறக்குமதி செய்யும் மோட்டார் சைக்கிள்களுடன் போராடுவதற்கு முடியாதுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இலங்கையின் உள்நாட்டு உதிரிப்பாகங்களுடன் கூடிய முதலாவது மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலையாக கே. டி. ரைஸ் தொழிற்சாலையானது கைத்தொழில் அமைச்சின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியானது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சுங்க வரியை விட குறைவாக இருப்பதால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதோடு, உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டுமாயின் இவ்வாறு முழுமையாக இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கான சுங்க வரியை அதிகரித்தல் அல்லது இறக்குமதிக்கான தடையை விதிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்தப்படும் தரம் குறைந்த (Led Acid) பெட்டரி, குறைந்த விலையை மாத்திரம் கவனத்திற் கொண்டு இலங்கையின் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அனேக நாடுகளில் இதற்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த தரம் குறைந்த பெட்டரி குறுகிய காலத்தில் காலாவதியானதன் பின்னர் அது சுற்றாடலுடன் கலப்பதால் சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பைச் சீர் செய்வதற்குத் தேவையானவாறு அந்த இறக்குமதியாளர்களிடம் அறவிடப்படும் பொதுவான வரிக்கு மேலதிகமாக சுற்றாடல் பாதுகாப்பு நிதியை அறவிடுவது பொருத்தமானது என்றும் அந்தக் கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு, இலங்கையின் மின்சார மோட்டார் சைக்கிள் தேவையினை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதால் முழுமையாக கோகார்ட் இறக்குமதியினைத் தடை செய்ததைப் போன்று முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள் இறக்குமதியையும் தடை செய்யுமாறு உள்நாட்டு மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எம். எஸ். முஸப்பிர்