வாசகர்களின் அபிமான பத்திரிகையான தினகரன் பத்திரிகைக்கு நாளை 92 ஆவது பிறந்ததினம் ஆகும். தினகரன் பத்திரிகை தனது 92 ஆவது பிறந்ததினத்தை நாளை கொண்டாடவிருக்கும் அதேவேளை, எமது அன்பார்ந்த வாசகர்களுக்கு நன்றி கலந்த மகிழ்ச்சியை வாரமஞ்சரி ஊடாக முன்கூட்டியே நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கையின் தமிழ் தேசியப் பத்திரிகைகளில் முதல்தரமான பத்திரிகை என்று கூறக்கூடிய பெருமை தினகரனுக்கு உள்ளது. பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கைத் திருநாட்டில் தமிழ்ப் பத்திரிகையொன்று 92 ஆண்டு காலம் வெற்றிப்பயணம் மேற்கொள்வதென்பது இலகுவான விடயம் அல்ல. பல்வேறு சவால்களையும் தகர்த்தெறிந்து, சற்றேனும் சரிந்து விடாமல் 92 வருட காலமாக தலைநிமிர்ந்தவாறு பயணம் செய்து கொண்டிருக்கின்றது உங்கள் தினகரன்.
தினகரனின் இந்த வெற்றிக்கான பிரதான தூண்கள் எமது அபிமான வாசகர்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஒன்பது தசாப்த காலத்துக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாசகர்கள் அளித்து வருகின்ற அசைக்க முடியாத அபிமானமும் ஆதரவும் காரணமாகவே தினகரன் பத்திரிகை தொடர்ந்தும் வெற்றியுடன் பயணம் செய்து கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.
தினகரனின் வெற்றிக்கான உண்மையான பங்காளிகள் எமது வாசகர்களேயாவர் என்பதை இவ்விடத்தில் நன்றியுடன் பதிவு செய்கின்றோம்.
தினகரன் தனது 92 ஆவது ஆண்டு நிறைவுவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரான அமரர் டி.ஆர். விஜேவர்தனவை நன்றியுடன் நினைவுகூர வேண்டியது முக்கியமாகும். இலங்கையில் பத்திரிகைகளின் தாய்வீடாகப் போற்றப்படுகின்ற லேக்ஹவுஸ் என்ற மாபெரும் நிறுவனத்தை ஆரம்பித்த ஊடகத்துறை பிதாமகனான அமரர் டி.ஆர். விஜேவர்த்தனவின் நாமம் என்றுமே இலங்கை வரலாற்றில் நிலைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.
மும்மொழிகளிலும் பத்திரிகைகளை ஆரம்பித்து நாட்டு மக்கள் மத்தியில் தேசியப்பற்றை ஊக்குவித்தவர் அமரர் டி.ஆர். விஜேவர்த்தன ஆவார். தினகரன் பத்திரிகையை அவர் ஆரம்பித்த பின்னரே ஈழத்து இலக்கியமும், ஊடகத்துறையும் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டன. தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிய பெருமையும், இலக்கியவாதிகளை உருவாக்கிய பெருமையும் தினகரன் பத்திரிகையையே சாரும்.
92 ஆண்டுகள் கடந்த போதிலும், தினகரனின் வெற்றிப் பயணம் சுறுசுறுப்புடனேயே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பத்திரிகைத்துறையின் நவீனத்துவங்களை காலத்துக்குக் காலம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டவாறு வெற்றியுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது உங்கள் தினகரன்.
தினகரனுக்கு 92 ஆவது பிறந்ததின வாழ்த்துகளை எமது அபிமான வாசகர்களுடன் இணைந்து நாம் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, உங்களது அன்பும் ஆதரவும் என்றும் தொடர வேண்டுமென்றும் வேண்டுகின்றோம்.