தமிழ், தெலுங்கில் நடித்து வரும் சமந்தா, தசை அழற்சி பிரச்சினைக்கு ஆளானார். இதனால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகிய அவர், அதில் இருந்து குணமடைந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில், உடல் நலத்துக்காக, சினிமாவில் இருந்து விலகி இருந்தது சரியான முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “நடிப்பில் பிசியாக இருந்த நேரத்தில் ஓய்வு எடுத்தது எனது சிறந்த முடிவு. மிகவும் கடினமானதாக இருந்தாலும் அந்த நேரத்தில் அதை சரியான முடிவாகவே பார்க்கிறேன். சுய வெறுப்பு, தன்னம்பிக்கை இழந்திருந்த நான் என்னை செதுக்கி கொள்வதற்கான நேரமாக அதை எடுத்துக் கொண்டேன். 13 வருடங்களாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் நான் ஓய்வு எடுத்ததில் மகிழ்ச்சி.
நடிகையாக இருப்பதால், சில நேரங்களில் உங்கள் உலகம் மிகவும் சிறியதாகவும் உங்களைச் சுற்றி ‘ஆமா’ என்று சொல்லும் ஒரு கூட்டமும் இருக்கும். அவர்கள் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். இப்போது ட்ரோலிங் மற்றும் விமர்சனங்களை என்னால் வேறுபடுத்தி பார்க்க முடிகிறது. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு என் கண்களையும் காதுகளையும் திறந்தே வைத்திருக்கிறேன். இது ஒரு நடிகையாக எனக்கு முக்கியமானது” என்றார்.