மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. ஜி.எம். சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஸ்ரீக்கோ உதயா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் முரளி சீனிவாசன், என்.வி.கிரியேஷன் சார்பில், நாகராஜன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ளார். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். விஜயகுமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வரும் 15-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மாஸ்டர் மகேந்திரன் கூறும்போது, ’கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமென்ட்ரி எடுக்க வேண்டும் என்றார். நான் தான் படமெடுக்கலாம் என்று சொன்னேன். சரி என்றார். அவர் நண்பர்களும், குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இதில், அனைவரும் அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒர் இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் இது உருவாகியுள்ளது. கார் மெக்கானிக்காக நடித்துள்ளேன்” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.