தோமஸ் அல்வா எடிசன் நாம் பெரிதும் அறிந்திராத பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியுள்ளார். 1300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி விஞ்ஞான உலகின் மாபெரும் மேதையாக விளங்குபவர். அவரது கண்டுபிடிப்புகளில் நாம் அறிந்தது மின்குமிழ், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி, இசைத்தட்டு, மின்சார இயந்திரம் என்பனவே ஆகும். ஆனால், அவரால் கண்டுபிடிக்கப்பட்ட நாம் பெரிதும் அறிந்திராத கண்டுபிடிப்புக்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
பேசும் பொம்மை
இது எடிசனின் அதிகம் பிரபல்யமாகாத கண்டுபிடிப்பாகும். எடிசனே இப் பொம்மையை வடிவமைத்தார். இந்த பொம்மையினுள் ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கருவியினை பொருத்தி இருந்தார்.
அக் கருவியின் உதவியினால் அந்த பொம்மை ஒரு டசின் குழந்தைகளுக்கான பாடல்களை ஒப்புவிக்கும். ஒரு சில சிறு பொம்மைகளை உற்பத்தி செய்த பின்னர், அவரது நிறுவனம் அந்த பொம்மையின் உரிமையினை வேறொரு நிறுவனத்திற்கு விற்று விட்டது. ஆனால், அந்த நிறுவனம் பேசும் பொம்மைகளின் உரிமைகளை பயன்படுத்தவில்லை. அதனால், எடிசன் அந்த பொம்மைகளின் உற்பத்தியினை நிறுத்தி விட்டார். ஏற்கனவே இருந்த பொம்மைகளை அழித்து விட்டார். வேறு சிலவற்றை தனது நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் கொடுத்தார். அவற்றில் இரு பொம்மைகள் மட்டுமே இப்போது பாதுகாப்பில் உள்ளது.
பசை தடவிய காகிதம்
இது எடிசனின் கண்டுபிடிப்புகளில் ஒன்று. ஆனால், இதனை அவர் தொடர்ந்து ஆய்வு செய்யவில்லை. இரு காகிதத் துண்டுகளை ஒட்டும்போது அவரது கைகளில் பசை ஒட்டிக் கொண்டன. அதனால், அவர் தனது உதவியாளரிடம் ஒரு காகிதத்தில் பசை தடவி வைக்கச் சொன்னார். தேவைப்படும் போது காய்ந்து போன பசையில் நீரைத் தடவி பயன்படுத்தலாம் எனக் கூறினார். அது பலனளித்தது. இரண்டு துண்டு காகிதங்களும் ஒட்டிக் கொண்டன. இன்று எடிசனின் இந்த யோசனை தபால் தலைகளிலும் கடித உறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. காய்ந்து போன பசையை ஈரமாக்க நாக்கே போதுமானது. அதோடு கைகளிலும் பசை ஒட்டுவதில்லை.
ஃப்ளோரோஸ்கோபி இயந்திரம்
1895ஆம் ஆண்டு வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தார். பின்னர் எடிசன் அக் கதிர்களை பரிசோதிக்கும் வேலைக்குச் சென்றார். 1898ஆம் ஆண்டில் ஃப்ளோரோஸ்கோபிஎன்ற சாதனத்தை அவர் கண்டுபிடித்தார். இது ஒரு பொருளின் உட்புறத்தில் நகரும் படங்களைப் பெறுவதற்கு எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்த உதவியாக அமைந்தது.
காபன் ஒலிவாங்கி
இந்த சாதனம் தொலைபேசியின் உள்ளே ஒலியை மின் ஒலி சமிக்ஞையாக மாற்றும் ஒரு கருவியாகும். எடிசன் இந்த சாதனத்திற்கு 1878இல் காப்புரிமைக் கோரி விண்ணப்பித்தார். ஆனால், பலர் அவருக்கு முன்பே அதைக் கண்டுபிடித்ததாக கூறி காப்புரிமைக் கோரினார். பின்னர் வழக்குகள் இடம்பெற்று 1892இல் நீதிமன்றம் எடிசனுக்கு சார்பாக தீர்ப்பளித்தது.
போனோகிராப்
1877இல் எடிசனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சாதனம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. தனது குரலை பதிவு செய்ய விரும்புபவர் ஒரு ஊது குழலில் பேச வேண்டும். பின்னர் ஒரு பதிவு ஊசி ஒரு உலோக உருளை மீது ஒலி அதிர்வுகளை பதிவு செய்யும்.
கு. அவினாஷ்- வத்தளை