மனிதர்களின் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் அத்தியாவசியமானதாகும். இன்றைய காலத்தில் இலங்கையில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக தண்ணீரின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் மலையகத்தில் நுவரெலியா மாவட்டம் அதிக நீர் வளத்தை கொண்டுள்ள போதிலும் இம்மாவட்டத்தில் தற்போது அதிக வெயில் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நானு ஓயா கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தில் 262 குடும்பங்களை சேர்ந்த ஆயிரம் பேர் தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள தண்ணீர் இன்றி அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்ட மக்கள் இலக்கம் 11 தேயிலை மலைக்கு அருகில் ஒடும் கல் ஆற்றில் இருந்து தமது அன்றாட தேவைக்கான தண்ணீரை பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த கல் ஆற்றில் ஓடும் ஊற்று நீரை தலவாக்கலை நீர் வழங்கல் சபை ஒட்டு மொத்தமாக தலவாக்கலைக்கு கொண்டு செல்லும் முகமாக புதிய அணைக்கட்டொன்றை அங்கு அமைக்க கட்டுமாப் பணியை ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக கல்கந்தை தோட்ட மக்கள் தமது அன்றாட தேவைக்கு பெற்று கொண்ட தண்ணீருக்கு பங்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பாரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கல்கந்தை தோட்டத்தில் பூதாகரமாக கிளம்பியுள்ள இந்த தண்ணீர் பிரச்சினை தொடர்பாக அங்குள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பீதுறுதலாகலை மலைத் தொடர்களில் ஒன்றான கிறேட் வெஸ்டன் மலை உச்சியிலிருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர் கல்கந்தை தோட்டம் இலக்கம் 11 தேயிலை மலையில் அமைந்துள்ள கல் ஆற்று வழியாக ஓடுகிறது.
கல்கந்தை தோட்ட காட்டு மாரியம்மன் ஆலய அடிவாரத்தில் இந்த கல் ஆறு ஆரம்பிக்கிறது. இந்த ஆற்றினூடே பெருக்கெடுத்து ஓடும் ஊற்றுத் தண்ணீர் பாமஸ்டன் ரட்ணகிரி ஆற்றுடன் இணைந்து தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த் தேக்கதில் சங்கமிக்கிறது.
அதேநேரத்தில் இந்த கல்லாற்றுத் தண்ணீரை ஆண்டாண்டு காலமாக கல்கந்தை தோட்ட மக்கள் அணைகட்டி பாவனைக்கு தேவையான தண்ணீரை பெற்று வந்தோம்.
இந்த நிலையில் இந்த கல் ஆற்றிலிருந்து கல்கந்தை தோட்ட மக்கள் பாவனைக்கு எடுத்து கொண்ட நீருக்கு மேலதிகமாக வழிந்தோடும் நீரை 2001ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தலவாக்கலை- லிந்துலை பிரதேச மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது தலவாக்கலை நகர சபை உறுப்பினர்கள் சிலர் கல் ஆற்றுக்குச் செல்லும் பிரதான வீதியை செப்பனிட்டுத் தருவதாக வாக்குறுதியையும் வழங்கினர். ஆனால் 23 வருடங்கள் ஆகியும் வீதி செப்பனிடவில்லை.
இருப்பினும் கல் ஆற்றில் வழிந்தோடும் தண்ணீரை தலவாக்கலைக்கு கொண்டு செல்ல மனிதாபிமான ரீதியில் ஒப்பு கொண்டோம். இதையடுத்து கல் ஆற்றின் ஒரு பகுதியில் அணை கட்டி அதனூடாக பாரிய குழாய் பொருத்தப்பட்டு தண்ணீரும் தடையின்றி கொண்டு செல்லப்பட்டது.
இது இவ்வாறிருக்க 23 வருடங்களுக்கு பின் அண்மையில் தலவாக்கலை நீர் வழங்கல் சபையினர் கல்கந்தை கல்ஆற்று பகுதிக்கு வந்து அங்கு கட்டுமான பணியை ஆரம்பித்தனர்.
அதாவது இக் கல்லாற்றில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அணைக்கு அருகில் முழு ஆற்று நீரையும் தலவாக்கலைக்கு கொண்டு செல்லும் வகையில் மேலும் ஒரு அணையை அமைக்க நடவடிக்ைக எடுத்தனர்.
அதேநேரத்தில் அணையை அமைத்து அதிலும் ஒரு பாரிய இரும்புக் குழாயைப் பொருத்தி இந்த கட்டுமான பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவ்விடத்திற்கு சென்ற தோட்டத் தலைவர்கள், இவ்வாறு புதிய அணையை அமைத்து முழு ஆற்று தண்ணீரையும் தலவாக்கலைக்கு கொண்டு சென்றால் கல்கந்தை மக்களுக்கு எவ்வாறு தண்ணீர் கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் இக்கட்டுமான பணியை முன்னெடுத்த தலவாக்கலை பிரதேச நீர் வழங்கல் சபை அதிகாரிகளுக்கும் கல்கந்தை தோட்ட மக்களுக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தோட்ட தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும் திரண்டு இவ்விடத்தை கல்கந்தை தோட்ட நிர்வாக அதிகாரிக்கு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பட்சத்தில் கடந்த (05.03.2024) அன்று தோட்ட மக்கள் தமக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருமாறு அழுத்தம் கொடுத்து பணிப் பகிஷ்கரிப்புச் செய்துள்ளனர்.
அதேநேரத்தில் தலவாக்கலை பிரதேச நீர் வழங்கல் சபை, முழுமையாக ஆற்று நீரை ஆக்கிரமிக்க கட்டப்படும் அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் அங்கம் வகிக்கும் தொழிற் சங்கங்களுக்கும் நேரடியாகச் சென்று புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்கந்தை தோட்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில் மலையக மக்கள் முன்னணி தலைவர் வே. இராதாகிருஷ்ணனிடம் இவ்விடயம் தொடர்பாக முன் வைத்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டு அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கதைத்து கட்டுமான பணியை இடை நிறுத்தியதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மலையக மக்கள் முன்னணி உயர்பீட குழுவினரான முன்னணியின் பிரதி தலைவர் ஆர்.ராஜாராம், வீ.புஸ்பா மற்றும் தா.சுதாகர் ஆகியோர் கல்கந்தை தோட்டத்திற்கு கள விஜயத்தை மேற் கொண்டு நிலைமையை கண்டறிந்தனர்.
அதேநேரத்தில் ம.ம.முன்னணி தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கடந்த (05.03.2024) அன்று பாராளுமன்ற அமர்விலும் கல்கந்தை தோட்ட மக்களின் தண்ணீர் பிரச்சினையை எடுத்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் தலவாக்கலை பிரதேசத்திற்கு வழமையாக அனுப்பி வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் முழுமையாக ஆற்று நீரை ஆக்கிரமிக்க இடமளிக்கப் போவதிலைலை என்ற நியாயமான கோரிக்கையை கல்கந்தை மக்கள் முன் வைத்துள்ளனர்.
அத்துடன் கல்கந்தை தோட்டத்தில் 262 குடும்பங்கள் வாழ்கின்றன, இதில் விவசாயம் செய்பவர்கள், கால்நடை வளர்ப்போர் என கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இந்த கல் ஆற்று தண்ணீரை நம்பியே வாழ்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்த தோட்ட மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைக்கு உரிய தீர்வை சம்பந்தப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாது பெற்று கொடுக்க முன்வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
ரமேஸ் ஆறுமுகம்