பங்களாதேஷுக்கு எதிரான டி20 போட்டிகள் முடிந்துவிட்டன. இப்போது இலங்கைக்கு இருப்பது டி20 உலகக் கிண்ணம் தான். அதற்கு இடையே சர்வதேச அளவில் டி20 போட்டிகள் இல்லை. இன்னும் மூன்று மாதங்களில் அதாவது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும்.
இதற்கிடையே இந்திய பிரீமியர் லீக் போன்ற சர்வதேச லீக் போட்டிகள் தான் டி20 மட்டத்தில் நடைபெறப்போகிறது. அந்த லீக் கிரிக்கெட்டில் இலங்கையின் முழு வீரர்களும் விளையாடுவதும் இல்லை. இதனை வைத்து தேசிய அணியை தேர்வு செய்யவும் முடியாது.
அதேபோன்று ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆட்டத்தை வைத்து டி20 அணியை தேர்வு செய்யவும் முடியாது. அடிப்படையில் அவ்வாறான தேர்வு முழுமையாக பொருந்தவும் செய்யாது. எனவே, டி20 உலகக் கிண்ணத்திற்கு இப்போதைய தருணத்தில் முழு அணியும் தயாராக இருக்க வேண்டும்.
தேர்வுக் குழு தலைவர் உபுல் தரங்கவை பொறுத்தவரை, அனுபவத்துக்கு முன்னுரிமை வழங்கிய அணி ஒன்றே தேர்வு செய்யப்படும் என்கிறார். கடந்த சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், கடைசியாக பங்களாதேஷுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகளை பார்க்கும்போது தரங்கவின் கூற்று புரிந்துவிடும்.
மத்திய வரிசையில் சகல துறை ஆட்டக்காரராக அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க சேர்க்கப்பட்டது அணிக்கு பலத்தை தந்திருக்கிறது. நீண்ட காலமாக பெரும் குறையாக இருந்த மத்திய வரிசையை பலப்படுத்தும் அதே நேரம் இவர்களின் பந்துவீச்சு வரிசையின் இடைவெளியை நிரப்புவதாகவும் உள்ளது.
குறிப்பாக மத்தியூஸுக்கு பந்துவீச முடியும் என்றாலே டி20 அணிக்கு சேர்ப்பதாக தேர்வுக் குழுவினர் ஆரம்பத்திலேயே நிபந்தனை விதித்து அதற்கு மத்தியூஸ் ஒப்புக்கொண்டதை அடுத்தே அணிக்கு அழைக்கப்பட்டார் என்பதை அண்மையில் மத்தியூஸே கூறியிருந்தார்.
மறுபுறம் தசுன் ஷானக்க அண்மைக்காலமாக சோபிக்கத் தவறினாலும் அவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திசைதிருப்பக் கூடிய வீரர். எனவே, உலகக் கிண்ணத்தில் அவரை தக்கவைப்பது அவசியம் என்று தேர்வுக் குழுவினர் நினைக்கக் கூடும்.
டி20 இன் புதிய அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஒரு வீரராக உலகத் தரம் வாய்ந்தவர். இப்போது அணித் தலைவராகவும் முக்கிய பங்காற்றுவது கடந்த மூன்று போட்டித் தொடர்களையும் பார்த்தால் தெரிகிறது. என்றாலும் ஆப்கானுக்கு எதிரான கடைசி டி20 போட்டிகளில் நடுவருடன் முரண்பட்டு இரண்டு போட்டித் தடை வாங்கியது உகந்ததாக இல்லை.
‘அவ்வாறான பரபரப்பான போட்டி ஒன்றுக்கு நடுவே வனிந்து தனது அமைதியை இழந்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். என்றாலும் அணித் தலைவராக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் தெரிந்திருக்க வேண்டும். வனிந்து அணியில் முக்கியமான வீரர் என்பதோடு இது மீண்டும் மீண்டும் நடப்பதை நாம் விரும்பவில்லை ஏனேன்றால் இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டது பெரும் இழப்பாகும்’ என்று உபுல் தரங்க அணி குறித்து அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த காலங்களில் இலங்கை அணி தோல்விகளை சந்தித்தது மாத்திரம் அன்றி அணியின் நடத்தையும் மோசமாக இருந்தது. இந்த சூழலில் கடந்த காலத்தில் நடத்தை மீறலுக்காக போட்டித் தடை கூடப் பெற்ற விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்ல இலங்கை டி20 அணிக்கு அழைக்கப்பட்டது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
‘நடத்தை மிக முக்கியம். நான் திக்வெல்லவுடன் பேசினேன். அணி என்ற வகையில் அதற்கே முதலிடம் இருக்கும். ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி நான் அவருக்கு விளக்கிக் கூறினேன். ஆட்டத்திறமையை விடவும் ஒழுக்கம் முக்கியமானது’ என்றார் தரங்க.
பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதை அடுத்தே அந்த இடத்திற்கு திக்வெல்ல அழைக்கப்பட்டார். உலகக் கிண்ணம் அண்மித்திருப்பதாலேயே பல இளம் வீரர்கள் இருக்கும்போது திக்வல்ல அழைக்கப்பட்டார் என்கிறார் தரங்க.
‘(பத்தும் நிசங்க மற்றும் குசல் பெரேரா) காயங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆரம்ப வரிசையில் ஆடக்கூடிய வீரர்களை தேடினோம். இதில் ஷெவோன் டானியல், லசித் க்ரூஸ்புள்ளே மற்றும் திவல்ல இருந்தனர். ஆனால் முதல் இருவரும் இன்னும் இளம் வீரர்கள். அவர்களின் அண்மைய ஆட்டங்களை பார்க்கும்போது அவர்களை தேர்வு செய்வது கடினமாக இருந்தது.
இலங்கை அணிக்கு 10, 15 ஆண்டுகள் ஆடக்கூடிய ஷெவோன் போன்ற திறமையான வீர்கள் இருக்கிறார்கள். அவ்வாறான வீரர்களை கடினமான நேரத்தில் கைவிடுவதா? அல்லது அவர்களை தக்கவைத்து உள்ளூர் போட்டிகள், ஏ அணியில் ஆடச் செய்து அனுபவத்தை கொடுத்து பின்னர் அணிக்கு அழைப்பதா?
நாம் அணித் தலைவர், அதேபோன்று பயிற்சியாளருடன் பேசினோம், உலகக் கிண்ணத்தை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் நிரோஷனை அழைப்பதே சிறந்த தேர்வு என்று அவர்களும் நினைக்கிறார்கள்’ என்றும் தரங்க கூறினார்.
என்றாலும் பத்தும் நிசங்க, குசல் பெரேரா ஆகியோரே எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் ஆரம்ப வரிசையில் ஆட முதன்மையான தேர்வாக இருப்பார்கள். மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம மற்றும் உப தலைவர் சரித் அசலங்க சிறப்பாக செயற்படுகின்றனர்.
என்றாலும் டி20 போட்டிகளில் மத்திய வரிசையில் ஆடக் கூடிய கச்சிதமான வீரர் பானுக்க ராஜபக்ஷ என்பது எல்லோருக்கும் தெரிந்தது. என்றாலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அது பற்றி தரங்கவிடம் கேட்டபோதும்,
‘பானுக்க இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் தேசிய சுப்பர் லீக் போட்டியில் அணி ஒன்றில் இருந்தார். அந்த அணியின் முகாமையாளருடன் பேசியிருக்கும் அவர், தனக்கு ஏதோ உபாதை இருப்பதாகவும், மருத்துவர் ஓய்வெடுக்கும்படி கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் அவர் இந்தப் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியான சூழலில் அவரை தேர்வில் எடுத்துக்கொள்ள எம்மால் முடியாமல்போனது’ என்றார்.
பானுக்கவை பொறுத்தவரை இப்போது அவரது போக்கு மாறிவிட்டது. தேசிய அணியை விடவும் சர்வதேச மட்டத்தில் நடைபெறும் லீக் போட்டிகளிலேயே அவதானம் செலுத்துகிறார். அவ்வாறான லீக் கிரிக்கெட்டில் காட்டும் திறமை அடிப்படையில் தேசிய அணிக்கு அவரை தேர்வு செய்ய முடியாது என்பதே தேர்வுக் குழுவினரின் நிலைப்பாடு. உண்மையில் அவர் அண்மைக் காலத்தில் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதற்கு தயக்கம் காட்டி வருகிறார். எல்லாவற்றையும் பணத்தை வைத்து மதிப்பிட்டால் இப்படியான நிலை ஏற்படும்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன பிரதான சுழற்பந்து வீச்சாளராக செயற்பாடுவதோடு பிரதான வேகப்பந்த வீச்சாளரான துஷ்மன்த சமீர தற்போது உபாதைக்கு உள்ளாகி இருந்தபோதும் உலகக் கிண்ணம் நெருங்கும்போது உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அவருடன் டில்ஷான் மதுஷங்க, மதீஷ பதிரணவும் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக செயற்படுவதோடு அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தசுன் ஷானக்க மேலதிக பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.
உபாதைகள் இல்லாத பட்சத்தில் அடுத்த டி20 உலகக் கிண்ணத்திற்கான முழு அணியும் தயாராகிவிட்டது என்றே கணிக்க முடிகிறது.
‘அணியை தேர்வு செய்யும்போது சுழற்பந்து மற்றும் வேகப்பந்தில் சமநிலையை நாம் பேண வேண்டும். மேற்கிந்திய தீவுகளின் மந்தமான ஆடுகளங்கள் இருந்தபோதும் அமெரிக்காவில் எப்படி ஆடுகளம் இருக்கும் என்பது எமக்குத் தெரியவில்லை. முதல் சுற்றில் அமெரிக்காவில் எமக்கு மூன்று போட்டிகள் இருக்கின்றன. இதுவரை தெரிந்தமட்டில் நியூயோர்க்கில் அடிலெயிட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகளத்தில் போட்டி நடைபெறப்போகிறது. ஆடுகளங்களில் அங்கு மேற்கிந்திய தீவுகளை விடவும் வித்தியாசமாக இருக்கும்’ என்கிறார் தரங்க.
எனவே, எதிர்வரும் டி20 உலகக் கிண்ணம் என்பது இலங்கை அணிக்கு அதிகம் பரீட்சயம் இல்லாத சூழலிலேயே நடைபெறப்போவது மாத்திரம் உண்மை. என்றாலும் அதற்கு விரைவாக பழகிக் கொண்டாலேயே முன்னேற முடியும். அதற்கு தயாராக இருக்கும் அணி பொருத்தமாக உள்ளதா? என்ற கேள்விக்கான பதிலிலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது.
எஸ்.பிர்தெளஸ்