இலங்கையில் முதற் தடவையாக மின்சார முச்சக்கர வண்டிகளைத் தயாரிக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்களத்தின் பொருட்கள் களஞ்சியசாலை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
வேகா இன்ஜீனியரிங் நிறுவனத்தினால் மருதாரனை புகையிரத பொருட்கள் களஞ்சியசாலை தொகுதி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்சார முச்சக்கர வண்டிகளைத் தயாரிக்கும் மற்றும் முச்சக்கர வண்டிகளை மின்சாரத்திற்கு மாற்றும் தொழிற்சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
முழுமையாகவே இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேகா நிறுவனத்தின் ELEKTRATEQ முச்சக்கர வண்டியின் முழுமையான உற்பத்திச் செயற்பாடுகள் இந்த தொழிற்சாலையினுள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதிநவீன தொழிற்நுட்பத்தின் கீழ் தானியங்கி முறையில் செயற்படும் தகடு வெட்டுதல், வளைத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், பெட்டரி உற்பத்தி இயந்திரங்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப கருவிகளை இந்த தொழிற்சாலை கொண்டமைந்துள்ளது.
அத்துடன், தற்போது பெற்றோல் மூலம் இயங்கும் முச்சக்கர வண்டியினை இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையாகவே மின்சாரத்திற்கு மாற்றிக் கொடுப்பதற்குத் தேவையான முழுமையான வசதிகளையும் இந்த தொழிற்சாலை கொண்டுள்ளது.
தற்போது தனியார் நிதி நிறுவனத்துடன் ஒன்றிணைந்து ஒரு மாதத்திற்குள் 100 முச்சக்கர வண்டிகளை மின்சாரத்திற்கு மாற்றும் வேலைத் திட்டம் இந்த தொழிற்சாலையினுள் இடம்பெற்று வருகின்றது.
வருங்காலத்தில் மாகும்புர பல நோக்கு போக்குவரத்து மையத்தினை அண்மித்ததாக பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளை மின்சாரத்திற்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதன் போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்தியதன் மூலம், இந்த தொழிற்சாலை வளாகத்தின் உள்ளேயே மின்சாரத்திற்கு மாற்றப்பட்ட முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வது உள்ளிட்ட ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை அந்த இடத்தில் பணியாற்ற நியமிக்குமாறு அமைச்சரினால் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதேபோன்று வரும் காலங்களில் இலங்கை முழுவதிலும் உள்ள மின்சார முச்சக்கரவண்டிகளை அடையாளம் காண்பதற்காக இலக்கத் தகட்டில் விசேட நிறமொன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும், அனைத்து மின்சார முச்சக்கர வண்டிகளும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதைக் குறிக்கும் வகையில் ஒரே நிறத்தினைக் கொண்டதாக இருக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, வேகா இன்ஜீனியரிங் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹசர் சுபசிங்க, புகையிரத பொது முகாமையாளர் எச். எம். கே. டப்ளிவ். பண்டார, மோட்டார் வாகன ஆணையாளர் நிசாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
எம். எஸ். முஸப்பிர்