Home » நவீன பொருளாதாரத்துக்கேற்ற புதிய சட்டங்கள் அறிமுகம்

நவீன பொருளாதாரத்துக்கேற்ற புதிய சட்டங்கள் அறிமுகம்

by Damith Pushpika
March 10, 2024 6:10 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் “வட்ஸ் நியூ” இளம் சட்டத்தரணிகளுக்கும் இடையில் சட்ட மறுசீரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்று அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது இளம் சட்டத்தரணிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்த பதில்கள் வருமாறு,

கேள்வி: – 2021/2022 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார சரிவுகளுக்கான காரணம் என்னவென நினைக்கிறீர்கள்?

பதில்: 2021-/ 2022 பற்றிப் பெரிதளவில் விபரிக்க விரும்பவில்லை. நாம் தொடர்ச்சியாக கடன்பட்டு வந்தமையே அதற்கு காரணமாகும். கடனை முகாமைத்துவம் செய்ய முடியாமல் போன வேளையில் நாம் சரிவடைந்தோம். வருமானம் இல்லாமையே எம்மால் கடன் செலுத்த முடியாமைக்கு காரணமாகும்.

ஜனாதிபதிக்கும் "வட்ஸ் நியூ" இளம் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும் “வட்ஸ் நியூ” இளம் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

இறுதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில் இது நிகழ்ந்திருந்தாலும் அதற்கு முன்பிருந்தே கடன் வாங்கும் படலம் ஆரம்பித்திருந்தது. மற்றைய நாடுகளைப் போல் அல்லாமல் நம்மால் வர்த்தகம் செய்ய முடியாத துறைகளுக்கே கடன் பெற்றோம். குறிப்பாக வீதி அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்பட்டதாக நிர்மாணத்துறை செயற்பட்டது. ஆனால் மகாவலி போன்ற வேலைத் திட்டங்களினால் நாட்டுக்கு மின்சாரம் கிடைத்ததோடு விவசாயமும் வளர்ச்சியடைந்தது.

நாடு முகம்கொடுத்த நிலைமைக்கு அனைவரும் பொறுப்பு கூற வேண்டும். எவரும் தப்பிச் செல்ல முடியாது. நாம் இந்த நிலையிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

கேள்வி: படுகடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கும் நாடு எவ்வாறு முன்னேறிச் செல்வது?

பதில்: நாம் கடன் செலுத்த முடியாத நிலையில் இருப்பது உண்மை. அதனால் 2026/-2027 வரையில் கடன் செலுத்துகைக்கான நிவாரண காலத்தையே நாம் கோருகிறோம். 2022ஆம் ஆண்டில் 8.3% ஆகக் காணப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியை நாம் 2023 ஆம் ஆண்டில் 10.9% ஆக மேம்படுத்தினோம். அதனால் மொத்த தேசிய உற்பத்தி உயர்வடையவில்லை. 2% ஆக அது குறைவடைந்தது. இவ்வருடத்தில் 13.1% ஆக மேம்படுத்திக்கொள்ள முடியுமென நம்புகிறோம். அதனால் மொத்த தேசிய உற்பத்தி வலுப்பெறும். 2028ஆம் ஆண்டளவில் 15.2% ஆக உயர்த்திகொள்ள முடியும். 8.3% -இலிருந்து 15.2% ஆக வலுப்படுத்தப்படுவதை 175% அதிகரிப்பாக குறிப்பிட முடியும்.

முதல் தடவையாக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 6.7% உபரி ஏற்பட்டுள்ளது. அதனை நாம் 2.3% வரையில் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2022 ஆம் ஆண்டில் 10.2% ஆக காணப்பட்டது. அதனை நாம் 2028 ஆண்டளவில் 3.9% வரையில் கொண்டுச் செல்ல வேண்டும். இது இலகுவானதல்ல. அது எம் முன்பிருக்கும் சவாலாகும். அதேபோல் 2022ஆம் ஆண்டில் எமது கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 128 வீதமாகக் காணப்பட்டது. 2032 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியை 95% ஆக அதிகரித்துக்கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டில் நாம் மொத்த தேசிய உற்பத்தியில் 35% ஐ கடனாக பெற்றுக்கொண்டோம். அதனை 13% குறைக்க வேண்டியது அவசியமாகும்.

இதனை நாம் முன்னெடுத்துச் செல்ல நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன்போது ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். தற்போது எமக்கு இறக்குமதி செய்யும் அளவுக்கு போதிய அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை. நாம் போட்டித் தன்மை நிறைந்த டிஜிட்டல் – பசுமை பொருளாதாரத்திற்கு நுழைய வேண்டும்.

கேள்வி: புதிய பொருளாதாரத்தை நோக்கி நகரும் போது நாட்டின் நீதிக் கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டுமல்லவா?

பதில்: புதிய சட்டங்கள் தேவைப்படும். ஐரோப்பாவின் வர்த்த முறைமை ஒல்லாந்து காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரோமன் – ஒல்லாந்து முறைமைகள் இன்றும் எமது சட்டத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றன. 1835ஆம் ஆண்டில் வெள்ளையர்களால் புதிய பொருளாதாரம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களின் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1970 களில் தெரிவான அரசாங்கம் பொதுவுடமை பொருளாதார கொள்கையை ஏற்படுத்தியது. அதற்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 1977ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்தினார். அதற்காகவும் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதேபோன்று பசுமை பொருளாதாரத்திற்கும் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கம் கடந்த 14 மாதங்களில் 42 சட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளது. அது ஒரு வெற்றியாகும். மேலும் 62 சட்டங்களை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பதே சட்ட மாஅதிபரின் கேள்வியாக உள்ளது. அதற்காக பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது. இம்முறை செய்ய முடியாததை அடுத்த பாராளுமன்றத்தில் செய்யலாம். இந்த முறைமையை தொடர்ச்சியாக பின்பற்றினால் எதிர்காலத்தில் புதிய சட்டங்களும் புதிய பொருளாதார முறைமையும் உருவாகும்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கும் நாம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவோம். கரையோர பொருளாதாரத்தை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். தற்போதுள்ள இலங்கையின் சட்டங்களை கொண்டு அதனை நடைமுறைப்படுத்த முடியாது. கரையோர பொருளாதாரம் உள்ள பகுதிகளில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் வணிகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவற்றை நடைமுறைப்படுத்த புதிய சட்டத்தரணிகளும் அவசியப்படுவர். அதற்காக உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். எமது சட்டங்கள் உலகிற்கு விளங்குவதில்லை. நாட்டை முன்னேற்ற நாம் அந்த வழியில் செல்ல வேண்டியது அவசியம்.

அதேபோல் நாம் வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பையும் மாற்றியமைக்க உள்ளோம். அரச கூட்டுத்தாபனங்கள் அனைத்தும் நிறுவனங்களாக மாற்றப்படும். அந்த நிறுவனங்களின் சொத்துக்கள் பிரதான நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்படும். அதற்காக வர்த்தக முறைமைகளுக்கமைய நாம் செயற்பட வேண்டும்.

நிறுவனச் சட்டத்தில் பொது நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கான பொறுப்பு அவர்களைச் சாரும். தவறு நேரும் போது தண்டிக்கலாம். அதேபோல் அரச, தனியார் வர்த்தகச் சட்டங்களை அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். அரச நிதி முகாமைத்துவ சட்டம் புதிதாக கொண்டு வரப்படும். அதேபோல் அரச கடன் முகாமைத்துச் சட்டமும் கொண்டுவரப்படும்.

அதேபோல் விவசாய நவீனமயப்படுத்தலுக்கான சட்டம் புதிதாக கொண்டுவரப்படும். அதன்போது முதலீட்டுச் சபைக்கு மாறாக பொருளாதார ஆணைக்குழு ஒன்றினை நிறுவ எதிர்பார்க்கிறோம். முதலீட்டுச் சபையின் கீழ் இருந்த முதலீட்டு வலயங்களையும், புதிதாக நிறுவப்படவிருக்கும் முதலீட்டு வலயங்களையும் பொருளாதார ஆணைக்குழுவின் கீழ் நிர்வகிக்க எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் தேசிய உற்பத்திச் சபை உருவாக்கப்படும். உமது உற்பத்திறன் அதிகரிக்கப்படாவிட்டால் உலகத்தோடு போட்டியிட முடியாமல் போய்விடும். அதனையடுத்து தேசிய வர்த்தக நிறுவனம் உருவாக்கப்படும். இவற்றை தனித்தனி சட்டமூலங்களாக சமர்ப்பிப்போம். தற்போதைக்கு இவை அனைத்தும் ஒரேதடவையில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலா வர்த்தகத்துக்கான புதிய சட்டங்களும் கொண்டு வரப்படும். காலநிலை மாற்றம் குறித்த சட்டம், புதிய சுற்றாடல் சட்டம், சிங்கராஜ வனம், சிவனொளிபாத மலை, ஹோட்டன் சமவெளி, வஸ்கமுவ, வனப் பூங்கா பகுதிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். அதேபோல வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து சர்வதேச வர்த்தக மையத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கல்வித்துறையில் சில புதிய சட்டங்களைக் கொண்டுவர உள்ளோம். தொழிற்கல்வியை ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் சீர்திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எங்களிடம் 1944இல் கொண்டுவரப்பட்ட கல்விச் சட்டமே உள்ளது. அந்த நேரத்தில் நாங்கள் யாரும் பிறக்கவில்லை. எனவே, இந்த முறையை புதிய சட்டங்கள் மூலம் மாற்ற வேண்டும். நாம் ஒரு புதிய சமூகத்துக்கு, புதிய பொருளாதாரத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படாத, சிறந்த நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும்.

எமது இந்தச் செயற்பாடுகளுக்கு ஏற்பதான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. சரிந்த நாட்டை ஓரிரு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் உயர்த்த முடிந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்குள், நம் நாட்டின் வங்குரோத்து நிலை சட்டபூர்வமாக முடிவுக்கு வரும். ஆனால் வாங்கிய கடனை மீளச் செலுத்த வேண்டும். அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

இதற்கான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம். அந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றத்துக்குச் சென்று, அவற்றை ஆராய்ந்த பின்னர் நிறைவேற்ற வேண்டும். இந்த சட்டத்தை சிலர் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். ஒரு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அதை மீண்டும் ரத்துச் செய்ய முடியாது. அது தொடர்பில் செயற்படாமல் இருக்க முடியாது. சில சட்டத்தரணிகள் வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். அவ்வாறு செய்ய முடியாது.

இந்த நாட்டின் பாராளுமன்றத்தின் அதிகாரம் 1972 இல் நிறுவப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதற்கு முன் பிரித்தானிய அரசியலமைப்பு இருந்தது. ரணசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணையாளர் தொடுத்த, லியனகேவுக்கு எதிரான ராணி தொடுத்த வழக்குகள் போன்று அவற்றை மாற்ற முடியாது. அதன்படி, 1970இல், அரசியலமைப்புச் சபையொன்றை அறிமுகம் செய்து புதிய அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கான ஆணையை அன்றைய அரசு பெற்றது. அந்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் இறைமையுள்ள தேசிய ராஜ்ய சபையினால் பாராளுமன்றத்தை நிர்வகிக்க கொல்வின் ஆர் டி சில்வா ஒப்புக்கொண்டார்.

அதன்படி, பாராளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக இருந்தது. சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரம் என்பன பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. அதன் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை 1977 இல் கொல்வின் ஆர். டி சில்வா அறிமுகப்படுத்தினார். ஆங்கிலேய சட்டத்தின் பிரகாரம் நாங்கள் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

1977ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியபோது அது மாறியது. அதன்படி, மக்களின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற விடயங்கள் மாற்றப்படவில்லை. மேலும், சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் பாராளுமன்றம் என்பன முன்னிலையில் இருந்தன. மேலும் அதில் அடிப்படை உரிமைகளும் இடம் பெற்றிருந்தன. இந்தப் பணியை பாராளுமன்றம் செய்ய வேண்டும்.

ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்கும் போது, ​​அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். அது மாறவில்லை.

அதன்படி, இப்போது அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் தான் பிரதான அதிகார மையம் என்பதோடு சர்வஜன வாக்குரிமையும் முதன்மையானது. மற்ற அனைத்தும் இரண்டாம் நிலையில் உள்ளன. ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு இன்று நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன. பாராளுமன்றம் அதை ரத்துச் செய்யலாம். ஆனால் பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பாராளுமன்றத்தால் நீக்க முடியாது.

அன்று கொல்வின் ஆர். டி சில்வா பாராளுமன்றத்தில் சோசலிசத்தை கொண்டு வந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை கொண்டு வந்தது போல் நாமும் இந்த பாதையில் முன்னேற முயற்சிக்கிறோம். கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் ரோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்றவர்கள். அவர்கள் ஒரே மாதிரியாக சிந்தித்தார்கள். எனவே, பாராளுமன்றத்தின் இறையாண்மை எப்போதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்போது நாம் இங்கிலாந்து நீதிமன்றத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். இவற்றை யாரேனும் கட்டுப்படுத்த முயன்றால், அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களின் முன் இது குறித்து விசாரணை செய்யலாம். இவற்றை நிறுத்த முடியாது. மக்கள் மேலும் துன்பப்பட இடமளிக்க முடியாது.

இவற்றை மனித உரிமைகள் என்று யாராவது கூறினால், மக்களின் வாழ்வுரிமை தான் முதலாவது மனித உரிமை என்பேன். இரண்டாவது மனித உரிமை, பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதாகும். ஏனைய விடயங்கள் அதன் பின்னரே வருகின்றன. நீங்கள் விரும்பும் அரசியலை செய்யுங்கள்.

ஆனால் இந்த மாற்றம் நிகழ வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. அதனால்தான் உங்கள் பங்களிப்பை நான் கேட்கிறேன்.

கேள்வி: – ஜனாதிபதியாக கடமையாற்றும் போது உங்களுடைய சட்டத்தரணி அனுபவம் எவ்வாறு தாக்கம் செலுத்தியது?

பதில்: – இங்குள்ள அனைவரும் சட்டத்தரணிகள். ஆனால் அனைத்துச் சட்டங்களையும் அறிந்த எவரும் இல்லை. தனது துறைசார்ந்த சட்டங்களை மாத்திரமே பலரும் அறிந்திருக்கிறோம். இறுதியில் சட்ட மாஅதிபரின் ஒத்துழைப்பு அவசியம். பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டாலும் சட்ட மாஅதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளும் இயலுமை இருக்கிறது. பிரத்தியேக சட்டத்தரணிகளிடத்தில் ஆலோசனை பெறவும் முடியும். நான், ஐந்து வருடங்கள் மட்டுமே சட்டத்தரணியாக பணியாற்றினேன். அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது.

கேள்வி: 2022ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படாதிருக்க சர்வதேச வர்த்தகம் தொடர்ச்சியாக அவசியப்படும். அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு அப்பாலான வேலைத்திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா?

பதில்: சர்வதேச வர்த்தகம் என்று பார்க்கும்போது, ஒவ்வொரு நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைசாத்திடுகிறோம். அதேபோல் RCEP உடனும் ஒப்பந்தம் செய்து கிழக்காசியா மற்றும் மேற்கு ஆசியா, அவுஸ்திரேலியாவுடன் ஒப்பந்தங்களை கைசாத்திட்டு வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அதனால் சட்டத் தொழிலுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான சட்ட விவாதங்கள் எழுகின்ற போது அது தொடர்பில் தர்க்கிக்கும் வாய்ப்பு சட்டத்தரணிகளுக்கு கிடைக்கும். வருகின்ற முதலீட்டாளர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும் வாய்ப்பும் கிடைக்கும். உலக வர்த்தக அமைப்புக்களுடனும் ஒப்பந்தம் செய்துகொள்ள எதிர்பார்க்கிறோம். சுற்றாடல் மற்றும் காலநிலை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒப்பந்தங்களை செய்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அதன்போதும் சட்டத்தரணிகளுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

கேள்வி: இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், எதிர்காலத்தில் அவ்வாறான நெருக்கடிக்கு முகம்கொடுக்காமல் இருப்பதற்கும், மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதித்தமை நியாயமானதா?

பதில்: உலகின் மத்திய வங்கிகள் பலவும் சுயாதீனமாகவே செயற்படுகின்றன. நாமும் எமக்கிருக்கும் அனுபவத்துடன் அந்நிலைக்குச் செல்ல எத்தனிக்கிறோம். பல பொறுப்புக்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய இணக்கப்பாடுகளை நாம் நிறைவேற்றியுள்ளோம்.

கேள்வி: பல்வேறு காரணங்களுக்காக, பெண்களை தொழிற் படையில் இணைந்துகொள்ளாமல் இருப்பது தொடர்பான உங்களது நிலைப்பாடு எவ்வாறானது ?

பதில்: பெண்கள் தொழில் பங்களிப்பை 45% ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அது தொடர்பிலான பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. பெண்கள் தொழில் செய்யும் போது பிள்ளைகள் தொடர்பான நிலைப்பாட்டில் பிரச்சினைகள் எழும். அந்த பிரச்சினைகளுக்கு உரிய திணைக்களங்கள் தீர்வு காண வேண்டும். பெண்களின் சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது. பெண்கள் உரிமை தொடர்பிலான இரண்டு புதிய சட்டங்களையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான சட்டமூலங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி: தொழில் சட்ட மறுசீரமைப்பின் எதிர்பார்ப்பு என்ன?

பதில்: புதிய தொழில் சட்டம் எமக்கு அவசியப்படுகிறது. தற்போதுள்ள தொழில் சட்டம் காலத்துக்கு பொருத்தமானதல்ல. தொழில் சட்டத்தை உருவாக்கும் போது தொழில் தரப்பினருடன் கலந்துரையாட வேண்டியது மிக அவசியமானது. இரு தரப்புடனும் கலந்துரையாடி சரியான தீர்மானத்தை மேற்கொள்ள முடியுமென நம்புகிறோம்.

கேள்வி; நீங்கள் முன்னெடுக்கும் சட்டத் திருத்தங்கள் விசேட தேவை உடையோருக்கு எவ்வகையான பங்களிப்பைச் செய்யும்?

பதில்: விசேட தேவையுடைய சமூகத்திற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் அவை திருப்திகரமானதாக இல்லை. அதனால் சட்டத் திருத்தங்களின் போது அதற்குரிய சட்டங்களையும் தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிக்கவும் எதிர்பார்கிறோம். விசேட தேவை உடையோரைப் போன்றே கவனம் செலுத்தப்படாத பல பிரிவினர் உள்ளனர். இந்நாட்டின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் நாம் முதலில் கவனம் செலுத்தினோம். அதேபோல் ஏனைய சமூகங்கள் குறித்தும் கவனம் செலுத்தினோம். அனைத்து துறைகள் குறித்தும் அவதானம் செலுத்த ஐந்து வருடங்களாவது தேவைப்படும். அதற்காக வெளிநாட்டுப் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுகொள்ளவும் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: பலவந்தமாக கடத்தப்பட்ட வடக்கின் பிள்ளைகளை தேடித்தருமாறுகோரும் தாய்மாரின் கோரிக்கைக்கு 07 வருடங்களாகின்றன. அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லவா?

பதில்: தற்போது நாம் காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபித்துள்ளோம். அது தொடர்பில் ஆராாய்ந்தோம். தற்போதும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மற்றைய ஆணைக்குழுக்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக நீதியரசர் நவாஸ் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் அதுகுறித்த ஆணைக்குழு அறிக்கைகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அதிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்க்கிறோம்.

அவற்றில் சில அறிக்கைகள் TRC இனால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதோடு சில அறிக்கைகள் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரிக்கப்பட வேண்டியவையாகும். அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: நிறைவேற்று அதிகார முறைமையை நீக்கி வெஸ்ட் மினிஸ்டர் முறைமை போன்ற புதிய முறைமைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் உங்களது நிலைப்பாடு எவ்வாறானதாக உள்ளது?

பதில்: புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிந்திக்க வேண்டும். அந்த பொறுப்பு புதிய பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். வெஸ்ட் மினிஸ்டர் முறைக்குச் செல்வதா அல்லது இதே முறையில் வேறு பரிணாமங்களுக்குச் செல்வதா என்பது குறித்து பொது மக்கள் மத்தியிலும் சென்று கலந்துரையாட வேண்டும். அதேநேரம் நாட்டுக்கு பொருத்தமான முறைமை எதுவென்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

அது தொடர்பிலான பல்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. அனைவரும் ஒன்றுபட்டு கலந்துரையாடல் மூலம் இணக்கப்பாட்டினை எட்டினால் இலங்கையின் தேவை என்னவென்ற தீர்வு கிட்டும். நிறைவேற்று அதிகாரத்தை புறக்கணிப்பதாயின் அதற்கு மாற்று முறைமை யாதெனவும் சிந்திக்க வேண்டும். கண்மூடித்தனமாக தீர்மானங்களை மேற்கொள்வது அர்த்தமற்றது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division