காலிகுலா
கி.பி. 37ஆம் ஆண்டு உரோமாபுரி சக்கரவர்த்தியான இவர் முதல் 6 மாதங்கள் வரை மிகத் திறமையாக ஆட்சி செய்தார். பின்னர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு மிகவும் கொடூரமானவராக மாறினார். வீர விளையாட்டுக்கள் நடைபெறும் கொலோசியம் அரங்கில் ‘கொலைத் திருவிழா’ நடாத்தி மகிழ்ந்தார். அரண்மனையில் வளர்க்கப்படும் சிங்கங்களுக்கு குற்றவாளிகளையே உணவாகப் போடுவார். தன் வழிக்கு வராதவர்களை மிரட்டி அடிமைகளைப் போல் நடத்துவார்.
இறுதியில் தன்னையே கடவுள் என அறிவித்தார். உரோம் கடவுள்களின் சிலையில் உள்ள தலைகளைப் பெயர்த்து தனது தலையின் சிலையை அவற்றில் பொருத்தினார். தனக்கென ஒரு கோயிலை அமைத்து தனது உருவ சிலையை நிறுவினார். அந்த சிலையின் முன் பலரை பலி கொடுத்தார். இவரது ஆட்சியில் நான்காவது மெய்காப்பாளன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.
நீரோ
ரோமானிய சக்கரவர்த்தியான இவரது முதல் ஐந்தாண்டு கால ஆட்சி அமைதியாகவே நடந்தாலும் பின்னர் தான்தோன்றித் தனமாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார் நீரோ. தனது தாய் மற்றும் மனைவியை கொன்றார். கி.பி. 64ஆம் ஆண்டு உரோம் நகரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதற்குக் காரணம் நீரோ தான் என சந்தேகம் ஏற்படவே கிறிஸ்தவர்களைக் கொடூரமாக கொன்றார். சிலர் கம்பத்தில் கட்டப்பட்டு கொளுத்தப்பட்டனர். பலர் சிலுவையில் அறையப்பட்டனர். சிலருக்கு உடலில் விலங்குகளின் தோல் போர்த்தி தைக்கப்பட்டு சிங்கங்களின் முன் வீசப்பட்டனர்.
தீக்கிரையான ரோமை மிகவும் பொருட் செலவில் கட்ட ஆரம்பித்தார். அதற்காக பல கடுமையான வரிகளை விதித்தார். இவருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு செனட் இவரை மக்கள் விரோதி என அறிவித்தது. இவரை கைது செய்ய படைவீரர்கள் வருவதை தெரிந்து தற்கொலை செய்து கொண்டார்.
கு. அவினாஷ்- வத்தளை