பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். அண்மையில் கொண்டாடப்பட்ட சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு எமக்கு அவர் கருத்துகளைத் தெரிவித்தார்.
கே: ஒவ்வொரு மகளிர் தினத்திலும் பெண்களின் உரிமைகள், பெண்களின் துன்பங்கள் பற்றிப் பேசப்பட்டாலும் அவை இன்னும் தீரவில்லை என்றே தோன்றுகிறது. இது ஒரு திகதியுடன் மட்டுப்படுத்தப்படும் விடயமா? இதனைத் தீர்ப்பதற்கு எதுவும் செய்ய முயாதா?
பதில்: எங்களுக்கு இன்னும் நிறைய கடமைகள் இருக்கின்றன. எனவே, இதுவரை செய்துள்ள பணிகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது. மேலும், எல்லாவற்றையும் செய்து விட்டதாக நினைத்து திருப்தி அடையவும் முடியாது. இன்று பெண்கள் பலர் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், வெளிநாடுகளுக்குச் சென்று காணாமல் போய்விடுகின்றனர். சில பெண்கள் பரிதாபமாக இறக்கின்றனர். இதனால், எங்கோ ஒரு பெரிய குளறுபடி இருப்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம். இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள என்னால் தனியாக இதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாது.
எங்களிடம் பல ஏற்பாடுகள் உள்ளன. எனது அமைச்சுக்கு போதுமான ஏற்பாடுகள் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்க நிறைய பணம் ஒதுக்கப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4500 ரூபா வழங்கப்படுகிறது. மாகாண சபைகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. நமது குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், 5 வயது வரை குழந்தையை விட்டு பெண்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்ற சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்று பலர் தொழிலை விரும்புவதில்லை. பெண்கள் இன்று சுதந்திரமாக தெருக்களில் நடமாட முடியாது. பேருந்துகளில் வயது வித்தியாசமின்றி பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். எனவே பேருந்துகளில் கமராக்கள் பொருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை எப்படி நிரூபிப்பது? ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்குத் தேவையான பிஸ்கட்டுகளை வழங்க ஒரு பிஸ்கட் நிறுவனம் தயாராக இருந்தது, ஆனால் அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
இதுபோன்று தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன.
கே: இலங்கையில் பணிபுரியும் பெண்கள் வெளிநாடுகளில் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்காது என்ற குற்றச்சாட்டுப் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் பயிற்சி பெற்ற தொழிலாளர்களாக அந்தச் சேவைக்கு அனுப்பப்பட வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் நல்லது. அத்தகைய வயது குழந்தைகள் இருக்கும்போது, பெற்றோர் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு சமாளிக்க முடியும். இன்று வெளிநாடு செல்லும் பல பெண்களுக்கு மின்சாதனங்களின் பயன்பாடு பற்றி எதுவும் தெரியாது. அதனால், வெளிநாட்டில் பலவிதமான தொல்லைகளுக்கு ஆளாகி நிராதரவாக உள்ளனர். சிலர் பெண்களை வெளிநாட்டுக்கு சுற்றுலாவுக்க அனுப்புவது போன்று வீட்டு வேலைக்கு அனுப்புகின்றனர்.
மேலும், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்களை அரசு தலையிட்டு அழைத்து வர வேண்டும். ஆனால் இதனைச் செய்வதற்கு எமது அமைச்சுக்கு அதிகாரம் இல்லை. வெளிவிவகார அமைச்சின் ஊடாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கே: பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
பதில்: திருமண வயது வரம்பை மாற்ற வேண்டும். இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அமைச்சரவைப் பத்திரங்களை அமைச்சரவை அமைச்சரே தயாரிக்க வேண்டும். இதை அமைச்சரவை அமைச்சர் முன்வைக்க வேண்டும். இவ்வாறானதொரு கடிதத்தை இந்த அமைச்சின் செயலாளர்கள் அனுப்புவதில்லை. 18 வயதுக்குப் பிறகு ஒரு பெண் தான் விரும்பிய ஒருவரை மணந்து வாழ்நாள் முழுவதும் வாழத் தடை இல்லை. பிறகு குழந்தை பிறக்கும் வரை அழகாக இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்ற பிறகு, இந்த குழந்தைகளுக்கு உணவளிக்கவும், பால்மாவை வாங்கிக் கொடுக்கவும் அவர்களுக்கு சிரமம் ஏற்படும். எமது நாட்டில் பெண்கள் சொந்தக்காலில் நிற்பவர்களாக மாற்றமடைய வேண்டும்.
கே: தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இளம் பெண்களின் உழைப்பு மலிவு விலைக்கு சுரண்டப்படுகிறது. இளைய தலைமுறையினருக்கான உயர் வேலைவாய்ப்புகளுக்கான அணுகல் மரபுரிமையாக இருக்க வேண்டும், இல்லையா?
பதில்: பொருளாதார நெருக்கடி ஏற்பட முன்னரும் இந்த நிலைமை காணப்பட்டது. நம் காலத்தில் இளம் வயதிலேயே திருமணம் பற்றிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் சமூக ஏற்றத் தாழ்வுகள் அவர்களுக்குப் பிரச்சினைகளாக வந்தன. பெண் ஒரு சமையலறை தாதியாகவும், ஒரு தாயாகவும் மாற்றப்பட்டாள். ஆனால் இந்த உலகத்தில் பெரிய வேலை வீட்டில் இல்லத்தரசி. அவள் எவ்வளவு முயற்சி எடுக்கிறாள் என்று பாருங்கள். வீட்டு வேலைக்காக இரவு வரை அதிக முயற்சி எடுக்கிறாள். அந்தப் பெண்ணின் மீது நாம் எவ்வளவு அக்கறை கொள்கிறோம்? உழைக்கும் பெண்ணுக்கும் ஓரளவு சுதந்திரம் உண்டு. ஆனால் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு என்ன கிடைக்கும்? இதுபோன்ற சமயங்களில் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நிவாரணம் பெறுகின்றனர். அவள் பொருளாதார வளர்ச்சியை மட்டும் தேடாமல், இந்தக் குடும்ப வேதனையிலிருந்து தப்பிக்கவும் வேண்டும்.
கே: பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த வழக்குகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கங்களால் முடியவில்லையா?
பதில்: இது தொடர்பாக நீதி அமைச்சருடன் கலந்துரையாடினோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை மிக விரைவில் துரிதப்படுத்துவதாக உறுதியளித்தார். இன்று 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் வழக்கு 25 ஆண்டுகள் கடந்தும் முடிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம்?