Home » நடுநிலையுடன் ஆராய வேண்டிய காரணிகள்!

நடுநிலையுடன் ஆராய வேண்டிய காரணிகள்!

by Damith Pushpika
March 3, 2024 6:00 am 0 comment

எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சியென்பது உடனடியாக ஏற்பட்டுவிடுவதில்லை. பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு நீண்ட காலக் காரணங்களும், உடனடிக் காரணங்களும் வழிவகை செய்கின்றன.

நீண்டகாலக் காரணங்களுக்கு ஓரிரு வருடங்களோ அல்லது பல வருடங்களோ எடுத்துக் கொள்ளலாம். நீண்டகாலக் காரணங்களால் நாடு படிப்படியாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், திடீரென ஏற்படுகின்ற ஏதேனுமொரு பாரதூரமான காரியம் அல்லது காரியங்களால் பொருளாதாரம் சடுதியாகவே அதலபாதாளத்துக்குள் வீழ்ந்து விடலாம்.

அந்த உடனடிக் காரணமென்பது அரசியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம் அல்லது பொருளாதாரம் சார்ந்த வேறு ஏதேனுமொரு காரணமாக இருக்கலாம். அவ்வாறான நீண்டகால மற்றும் உடனடிக் காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்குச் சென்றுவிட்டால், அந்நிலைமையிலிருந்து நாடு மீள்வதென்பது சுலபமான காரியமல்ல.

உலகில் பல நாடுகள் இவ்வாறு பொருளாதார சரிவுக்கு உள்ளாகியிருக்கின்றன. பல நாடுகள் பல வருடங்களின் பின்னர் படிப்படியாக மீண்டெழுந்திருக்கின்றன. சில நாடுகளால் இன்னுமே மீண்டெழ முடியாதிருக்கின்றது.

அவ்வாறு அந்நாடுகளால் மீண்டெழ முடியாதிருப்பதற்குக் காரணம் அரசியல் ஸ்திரமின்மையும், ஆற்றலுள்ள தலைமைத்துவம் இன்னுமே உருவாகாமலிருப்பதுமாகும்.

உலகில் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். நாட்டின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்கின்ற வேளையில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான முறையில் அதலபாதாளத்துக்குச் சென்றிருந்தது. ‘திவால் ஆகியது இலங்கை’ என்று இந்தியப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தன. இனிமேல் இலங்கையினால் மீண்டெழவே முடியாதென்ற நிலைமையில்தான் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இலங்கையின் பொருளாதாரம் இத்தனை தூரம் வீழ்ச்சிக்குச் சென்றதற்கான காரணங்கள் முன்னைய அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட தவறான பொருளாதார அணுகுமுறைகள்தான் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் காரணங்கள் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அவ்வாறான வேளையில் உருவெடுத்த அரசியல் ஸ்திரமின்மை உடனடிக் காரணமாக அமைந்து விட்டது.

அதனால் இலங்கை திடீரென வீழ்ந்தது. அதன் பின்னர் ஆற்றலுள்ள தலைமைத்துவம் உருவானதால் நாட்டின் பொருளாதாரம் தற்போது பெருமளவு முன்னேற்றமடைந்திருக்கின்றது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது போன்ற பலவித காரணங்களால் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரித்து வருகின்றது. வரிவீதங்கள் சீரமைப்பு போன்ற காரணங்களால் நாட்டின் வருமானம் அதிகரித்து வருகின்றது.

நாட்டில் பொருளாதார வீழ்ச்சி எக்காலப்பகுதியில் உருவெடுத்தது? அதற்கான காரங்கள் எவை? காரணகர்த்தாக்கள் யார்? நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி எவ்வாறுள்ளது?

இவை பற்றியெல்லாம் பக்கச்சார்பற்ற ஆய்வு எமது மக்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது. இவை பற்றியெல்லாம் நேர்மையுடன் சிந்திக்காமல், அரசியல் ஆதாயங்களுக்காக அர்த்தமின்றிப் பேசுகின்ற எதிரணி அரசியல்வாதிகள் குறித்தும் மக்கள் விழிப்படைய வேண்டியிருக்கின்றது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division