‘நாட்டை இக்கட்டான சூழலில் இருந்து மீட்பதற்கு முன்வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்’ என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எமது நிறுவனத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கே: நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதிக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: நமது நாட்டின் வரலாற்றை எடுத்து நோக்கினால் இங்கு காணப்பட்ட சில தேசியப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதிகளின் நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் காலத்திலிருந்து இதுதான் நடைபெற்று வந்துள்ளது. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தேவை இருந்தபோதும், அவரால் அதனை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், சர்வதேச அளவில் அவருக்கு எவ்வளவு ஆதரவு கிடைத்தாலும் அதைச் செய்வது கடினமாக இருந்தது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். நல்லதோ கெட்டதோ போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.
அவர் போரை முடித்தார். யுத்தம் முடிவடைந்த பின்னர், யுத்தம் பற்றிப் பேசாமல் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறியே மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். அதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் 2015 வரைதான் அவரால் செயற்பட முடிந்தது. இந்த அமைப்பில் தவறு இருப்பதாக மக்கள் கூறினர். எனவே இந்த முறையை மாற்றி நல்லாட்சியை உருவாக்க மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மக்கள் அதற்கு வாக்களித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் மக்கள் அதிகம் பேசிக் கொண்டிருந்த நிலையில், அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் வாக்களித்து கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர்.
இன்று நாட்டில் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை பொருளாதார நெருக்கடி என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்கள் மற்றும் கொள்கைகளினால் நாட்டின் நெருங்கடி நீங்கி வருகின்றது. ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்த நிலைமை தற்போது படிப்படியாக நீங்கி வருகின்றது.
கே: இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப வேறு யாரும் இல்லை என்று கூற வருகின்றீர்களா?
பதில்: அதுதான் உண்மை, அதனால், அடுத்த தேர்தலை ஓராண்டுக்கு தள்ளி வைத்து, இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டுக் கொண்டுவருவதற்கு அவருக்கு மீண்டும் வர காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் அரசியலமைப்பை மாற்ற முடியாத காரணத்தினால், தற்போதைய ஜனாதிபதிக்கு மேலும் ஒரு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துப் பார்த்தால் நன்றாகத் தெரியும். அநுரகுமார திஸாநாயக்க ‘திருடர் திருடர்’ எனப் பேசிக்கொண்டிருக்கின்றாரே தவிர பொருளாதார மறுசீரமைப்புக்களை கொண்டு வரமாட்டார். ஆனால் அதைவிட தகுதியானவர் யாராவது இருந்தால் எனக்குக் காட்டுங்கள். இதற்போதைய ஜனாதிபதி நாட்டுக்காகப் பல விடயங்களைச் செய்துள்ளபோதும் இந்தப் பணிகள் அனைத்தும் பூரணமாக முடிவுக்கு வரவில்லை. இதற்கு நாம் அவகாசம் வழங்க வேண்டும்.
கே: இது தேர்தல் ஆண்டு. புதியதொரு ஜனாதிபதியை நியமித்து பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய சூழல்நிலையில் நாம் இருக்கின்றோமா?
பதில்: இது அரசியல் நிலைமைகளைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்கான சந்தர்ப்பம் அல்ல. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கூறுவதைப் பாருங்கள். அநுரகுமார திஸாநாயக்க என்ன பேசுகிறார் என்பதைப் பாருங்கள். அவர்களைப் பின்பற்றுபவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆனால் இந்த பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமும் அரசியல் கலாசார வேலைத்திட்டமும் நாட்டிற்கு தேவை என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். எந்த அரசியல்வாதி வந்தாலும், சிஸ்டம் இப்படி இருந்தால் இந்த நிலையில் இருந்து மீள முடியாது. இந்த முறையை மாற்றுவதற்கு தேவையான அனைத்துப் பணிகளையும் ஜனாதிபதி ஏற்கனவே செய்துள்ளார். அந்த வித்தியாசத்தை மக்கள் அனுபவிப்பார்கள்.
கே: புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிப்பது ஆபத்தானதாக அமையுமா?
பதில்: நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கட்சி என்ற வகையில் எனது கருத்தைத் தெரிவித்தேன்.
கே: நீங்கள் பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கின்றீர்கள். தற்போதைய ஜனாதிபதிக்கு அந்தக் கட்சியிலிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றீர்களா?
பதில்: தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கட்சி என்ற ரீதியில் அந்தக் கருத்தின் அடிப்படையில் செயற்படுவோம் என நான் நம்புகிறேன்.
கே: நீங்கள் ஆளும் கட்சியின் அமைப்பாளர். ஆனால் அந்தக் கட்சியில் இருந்து இன்னொரு பொதுவேட்பாளர் முன்னிறுத்தப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்னவாகவிருக்கும்?
பதில்: ரணில் விக்கிரமசிங்கவை விட வேறு ஒரு சிறந்த வேட்பாளர் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அப்படிப்பட்டவர் கண்ணில் படவில்லை என்றே சொல்ல வேண்டும். ‘எதிர்வரும் வேட்பாளர்களை பார்த்து முடிவெடுப்பேன்’ என எமது கட்சியின் செயலாளர் தெளிவாகக் கூறியுள்ளார்.
கே: நாட்டில் இதுவரை பணவீக்கம் குறைந்துள்ளது. ஆனால் மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்கின்றனர். மக்கள் வித்தியாசத்தை உணரவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: இப்போது நன்கு அவதானியுங்கள்… ஒன்றரை வருஷத்துக்கு முன்னர், போராட்டம் நடக்கும் போது ஒரு லீட்டர் பெற்றோலை 3000 ரூபாவுக்குக் கூடப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது அந்த நிலைமையை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கூறுவதற்கில்லை. கியூ.ஆர் குறியீடுகளை வைத்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அளவிலும் வரம்பு இருந்தது. இன்று அந்த நிலையை மாற்றி மக்களுக்குத் தேவையான அளவு எரிபொருளை வழங்கி வருகிறோம். டொலர் 400 ரூபாய்க்கு சென்றது. வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வர டொலர்கள் போதுமானதாக இருக்கவில்லை. இன்று இவ்வாறான நிலைமை இல்லை. எனவே, நாட்டில் மாற்றம் ஏற்படவில்லையென மக்களால் கூற முடியாது.
கே: எதிர்காலத்தில் பொருளாதாரம் முன்னேற்றமடையும் பட்சத்தில் பெறுமதி சேர் வரியைக் குறைக்க முடியும் என ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்ப உரையில் தெரிவித்தார். அது சாத்தியமாகுமா?
பதில்: வரவுசெலவுத்திட்ட சமயத்திலும் இந்த விடயத்தைச் சொன்னார். பெறுமதி சேர் வரி மாத்திரமல்ல மக்களின் வருமான நிலையை மேம்படுத்தும் திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும். பொருட்களின் விலையை குறைப்பது எப்போதும் சாத்தியமில்லை. இன்று இந்தியாவுக்குப் போய் தோசை சாப்பிடும் போது, அன்றைய காலத்தைவிடத் தற்பொழுது விலை அதிகம்.
ஏனைய நாடுகளுக்குச் சென்றாலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. ஆனால், பொருட்களின் விலை உயரும்போது மக்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும். வருமானத்தை அதிகரிக்க ஒரு ஏற்பாடு தேவை. அதற்கு, நாட்டில் உற்பத்தி செயல்முறையைத் தொடங்க வேண்டும்.
நாம் மேற்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அரசு சீர்திருத்தங்கள் மூலம் இந்தத் திட்டம் நாட்டுக்கு முன்வைக்கப்பட வேண்டும். 1977 இல் திறந்த பொருளாதாரத்திற்குப் பிறகும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலையில் இருந்தோம். இந்த நிலைமையை உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும்.