அபூதாபியில் 2021 ஒக்டோபர் மாதம், டி20 உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்ட இலங்கை அணி முதல் இரண்டு ஓவர்களுக்குள்ளேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க மற்றும் சாமிக்க கருணாரத்ன இன்னும் களமிறங்கி இருக்கவில்லை.
அப்போதே எதிர்பாராத வகையில் வனிந்து ஹசரங்க முன்கூட்டியே துடுப்பை எடுத்து மைதானம் வந்தார். இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்கக் காத்திருந்த அயர்லாந்தை தனியாளாக விளாசித் தள்ளினார். முகம்கொடுத்த முதல் ஏழு பந்துகளையுமே அவர் நிதானமாக ஆடினார். பின்னர் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பந்தை தள்ளிவிட்டு ஓட்டங்களை பெற ஆரம்பித்த ஹசரங்கவை கட்டுப்படுத்த முடியாமல்போனது.
அந்தப் போட்டியில் அவர் 47 பந்துகளில் ஒன்பது பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 71 ஓட்டங்களை பெற இலங்கை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது.
கடந்த 2023 ஓகஸ்ட் மாதத்தில் ஹசரங்க தலைமையிலான கண்டி அணி தடுமாற்றம் கண்டிருந்தது. லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி அணிக்கு ஹசரங்க 2022 இல் தலைவராக ஒப்பந்தமானார். அது தனிப்பட்ட முறையில் அவரது ஆளுமைக்கான சவாலாக இருந்தது. எனினும் கண்டி அணி முதல் மூன்று போட்டியில் இரண்டில் தோற்றிருந்தது.
நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிராக 118 ஓட்டங்களை துரத்தியபோதும் அணியில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டது. துடுப்பாட்டத்தில் ஹசரங்க உயர்வு பெற்றார். முதல் வரிசையில் அவர் களமிறங்கும்போது கண்டி அணி 6 ஓவர்களில் 31 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஹசரங்க ஆட்டமிழக்காது 22 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற அந்த அணி 13 ஓவர்களிலேயே இலக்கை எட்டிவிட்டது.
அடுத்த போட்டியில் 5 ஆவது வரிசையில் வந்த ஹசரங்க 27 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற கண்டி மொத்தம் 203 ஓட்டங்களை விளாசியது. பின்னர் நடந்த கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கண்டி பவர்பிளேயில் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஹசரங்க 21 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாச 10 ஓவர்கள் முடிவில் 70 ஓட்டங்களை பெற்றது. எனினும் கண்டி வெற்றி இலக்கை எட்டுவதை 10 ஓட்டங்களால் தவறவிட்டபோதும் ஹசரங்க எதிரணிக்கு சவால் கொடுத்தார்.
கடைசியாக கட்டாயம் வெல்ல வேண்டிய இரண்டாவது தகுதிகாண் போட்டியில் காலில் உபாதைக்கு முகம்கொடுத்தபோது ஹசரங்க தனது அணிக்காக 30 பந்துகளில் 48 ஓட்டங்களை விளாசியதோடு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
தொடர் முடிவில் ஹசரங்க மொத்தமாக 279 ஓட்டங்களையும் 19 விக்கெட்டுகளையும் பெற்றார். அதாவது அந்தத் தொடரில் அதிக விக்கெட் மற்றும் அதிக ஓட்டங்கள் என்று இரண்டிலும் முதலிடத்தைப் பெற்றார். இதில் 189.79 ஓட்ட வேகத்தை பதிவு செய்தார்.
எனினும் லங்கா பிரீமியர் லீக்கில் அவர் பெற்ற காயத்துக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டதோடு கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணம் உட்பட பல மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டி ஏற்பட்டது.
பின்னர் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி எட்டு ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இப்போது ஹசரங்க இலங்கை டி20 அணித் தலைவர். துடுப்பெடுத்தாட வந்த அவர் முதல் பந்தை மாத்திரமே தடுத்தாடினார். அடுத்த பந்தை பெயின்ட் திசையில் பெளண்டரிக்கு விளாசினார். பின்னர் எக்ஸ்ட்ரா கவரில் பந்தை தூக்கி அடித்தார்.
விக்கெட்டில் இருந்து சற்று விலகி போதுமான இடம் எடுத்து களத்தடுப்பாளர்கள் இல்லாத திசையில் பெளண்டரிகள் விளாசுவது வனிந்துவுக்கு பழகிப்போன ஒன்று. அந்தப் போட்டியில் அவர் அடித்த எழு பெளண்டரிகளில் ஆறு ஓப் பக்கமாக முன்னால் அல்லது பின் திசையில் இருந்தது.
ஹசரங்க 32 பந்துகளில் பெற்ற 67 ஓட்டங்களும் ஆட்டத்தை திசைதிருப்பியது. இலங்கை அணியில் மேலும் மூன்று வீரர்களே இரட்டை இலக்கங்களை பெற்றார்கள். அதில் அதிகபட்சம் 25 ஓட்டங்கள். பின்னர் பந்துவீச வந்த ஹசரங்க 4 ஓவர்களுக்கும் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றிபெற ஹசரங்கவின் பங்கு அதிகம்.
பெப்ரவரி 19ஆம் திகதி நடந்த 2ஆவது டி20 போட்டியிலும் ஹசரங்கவின் துடுப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது வரிசையில் வந்த அவர் 9 பந்துகளுக்குத் தான் முகம்கொடுத்தார். ஆனால் ஒரு பெளண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 22 ஓட்டங்களை பெற்றார். அதுவே பின்னர் அஞ்சலோ மத்தியூஸ் வந்து அதிரடியாக ஓட்டங்களை பெற்று இலங்கை அணி 187 ஓட்டங்களை விளாச உதவியது.
ஹசரங்கவின் பந்துவீச்சு பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது உலகத் தரம் வாய்ந்தது. ஆனால் அவரது துடுப்பாட்டம் தீர்க்கமானது. அதனை கச்சிதமாக பயன்படுத்தினால் பெருத்த லாபம் கிடைக்கும். உண்மையில் அவரால் பந்துவீச்சில் மத்திரமல்ல துடுப்பாட்டத்திலும் ஆட்டத்தை எந்த சந்தர்ப்பத்திலும் திசை திருப்ப முடியும்.
பந்துவீச்சில் நவீனகால லெக்ஸ்பின் சுழல் வீரர்கள் தட்டையாக மற்றும் வேகமாக பந்துவீசுவது போலல்ல ஹசரங்கவின் பாணி. அவர் பந்தை அதிகம் பறக்கவிட்டு விக்கெட்டுகளை சேகரிக்கிறார். இது அபாயகரமான உத்தியாக பார்க்கபட்டாலும் அது தான் ஹசரங்கவின் துருப்புச்சீட்டு.
துடுப்பாட்டத்தில் ஓப் திசையில் அவர் ஓட்டங்கள் பெற அதிக ஆர்வம் காட்டியபோதும் தனது மணிக்கட்டை பயன்படுத்தி பந்தை லெக் திசையில் செலுத்தி ஓட்டங்களை சேகரிக்கும் திறமையும் அவருக்கு உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கது அணித் தலைமை என்பது அவருக்கு தயக்கத்தை தரவில்லை. கடந்த எல்.பி.எல் தொடரில் சோபித்ததும் ஆப்கானுக்கு எதிராக அதிரடி காட்டியதும் அணித் தலைவராகத் தான். அது அவர் சாதாரண வீரராக ஆடுவதை விடவும் ஒருபடி மேலாக உள்ளது.
தலைமைத்துவங்கள் மாறுபட்டிருக்கக் கூடும். இலங்கையை பொறுத்தவரை கடந்த காலங்களில் இவ்வாறான தலைமைகளை பார்த்திருக்கிறோம். போட்டியை சரியாக புரிந்து கையாள்வதில் அர்ஜுன ரணதுங்கவும் தந்திரங்கள் வகுப்பதில் மஹேல ஜயவர்தனவும் கைதேர்ந்தவர்கள். ஆனால் ஹசரங்கவின் தலைமைத்துவம் வித்தியாசமானது. அது சரியாக இந்திய முன்னாள் அணித் தலைவர் கபில் தேவுக்கு ஒப்பானது.
நேர்காணல்களில் அல்லது போட்டிக்குப் பின்னர் கேட்கப்படும் கேள்விகளில் ஹசரங்கவின் பதில்கள் சுருக்கமானதாகத்தான் இருக்கும். தோற்பதற்கு என்ன காரணம்? துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட்டிருக்க வேண்டும். வித்தியாசமாக ஏதாவது செய்திருக்க வேண்டுமா? ஆம், கடைசி ஓவர்களில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருக்கக் கூடாது. எதில் முன்னேற்றங்கள் செய்திருக்க வேண்டும்? வீரர்கள் இன்னும் பெறுப்புடன் ஆட வேண்டும். இப்படித்தான் ஹசரங்கவின் பதில்கள் இருக்கும்.
ஆனால் ஆடுகளத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படுபவராக இருக்கிறார். விக்கெட்டுகளை வீழ்த்தும்போது அவரது கொண்டாட்டம் சலிப்பு ஏற்படுத்தாது. விக்கெட் வீழ்ந்தால் நிலத்துக்கும் வானத்துக்கும் துள்ளிக்குதிக்கும் அவர் ஏதாவது ஒரு செய்கையோடு கொண்டாட்டத்தை முடிப்பார்.
ஹசரங்கவின் பொறுப்புகள் இப்போது அதிகம், ஆனால் அது அவருக்கு சுமையாகத் தெரியவில்லை. அணியை வழி நடத்துவதில் அவரிடம் உறுதியான ஒரு திட்டம் இருக்கிறது. அணித் தலைமையை ஏற்ற குறுகிய காலத்திற்குள் அவர் உலகக் கிண்ணத்திற்கு தயாராக வேண்டி ஏற்பட்டிருக்கிறது. அதற்கான அணியை கட்டமைப்பதிலும் அவர் அதிக கரிசனை காட்டுவது தெரிகிறது.