பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் மீண்டும் இந்தியத் தலைநகர் டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளை 5 ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்திருக்கிறது.
நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லப்பட்டாலும், கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய விவசாயிகளின் முதுகெலும்பு இன்னும் நிமிரவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது.
ஆனால், இந்தச் சட்டங்களை எதிர்த்து அப்போது நாடு முழுவதும் இருந்து அனைத்து விவசாயிகளும் டெல்லியில் ஒன்று சேர்ந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர் போராட்டம் காரணமாக இந்தச் சட்டங்கள் மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டன. இந்நிலையில், தங்களின் நீண்ட காலக் கோரிக்கையான ‘விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை(MSP)’ சட்டபூர்வமாக்க வேண்டும் என்று விவசாயிகள் மீண்டும் டெல்லி நோக்கி தற்போது அணிதிரண்டுள்ளனர்.
விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21 இல் முந்திய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை தற்போது விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.
இவர்கள் டெல்லி நோக்கி வருவதைத் தடுக்க முள்வேலிகள், சீமெந்துத் தடுப்புகள், தரையில் ஆணிகளை பதித்து வைத்தல் என பல்வேறு தடைகளை பொலிஸும், துணை இராணுவமும் ஏற்படுத்தி வருகின்றன. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் அனைத்து வீதிகளிலும் இந்த தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
டெல்லி எல்லையில் மீண்டும் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்படுகின்ற போதிலும், இந்தத் தடைகளைத் தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுத்து வருகின்றனர். இதனைத் தடுக்க ஏற்கனவே, மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இவ்வாறாக 4 தடவை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தற்போது 5 ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் விவசாய சங்கங்கள் இதனை, “நேரம் கடத்தும் செயல். அதனால்தான் எங்களை மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளன. நாடாளுமன்றத்தை கூட்டி குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று அச்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
டில்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதை ஏற்று பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களில் டில்லிக்கு விரைந்தனர். இவ்வாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தால் காய்கறி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் டில்லியில் காய்கறி விலை உயரும் அபாயம் உள்ளதாக காஜிபூர் மொத்த விற்பனைச் சந்தையின் வியாபாரி ஒருவர் கூறினார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும்படி பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ‘டில்லிக்கு செல்வோம்’ எனும் போராட்டத்தை சம்யுக்தகிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது), கிசான் மஸ் தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள் அறிவித்தன. இதையொட்டி பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த 13.0-2.-2024 அன்று டில்லி நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பஞ்சாப் – அரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 13.0-2.-2024 முதல் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் தொடர்கின்றது.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதேவேளை பஞ்சாப்- ஹரியானா ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீது ஹரியானா பொலிசார் ட்ரோன் உதவியுடன் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
ட்ரோனில் இருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய இந்தியாவின் முதல் ெபாலிஸ்படை ஹரியானா பொலிஸ்துறை என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஆளில்லா விமானத்தில் இருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுவது இதுவே முதல் முறை என்று பொலிஸ் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசுவதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவது பல தரப்பிலிருந்தும் விமர்சிக்கப்படுகிறது.
‘மாநில பொலிசார் இதுபோன்ற முறையைப் பயன்படுத்தக் கூடாது. மக்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அவர்கள் பின்வாங்க வேண்டும், இல்லையெனில், ட்ரோன்கள் மூலம் குறிவைக்கப்படுவோம் என மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். பொலிசார் அவ்வாறு செய்திருக்கக் கூடாது’ என்று முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
“ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி வானத்திலிருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி ஹரியானா பொலிசார் சோதனை செய்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காக அணிவகுத்துச் செல்லும் நிராயுதபாணியான விவசாயிகளுக்கு எதிராக இவ்வாறு மனிதஉரிமையை மீறும் விதத்தில் கொடூரமான முறையில் நடந்து கொள்வது நியாயமல்ல” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எஸ்.சாரங்கன்