எடிசனின் மின் விளக்கும், சிமன்ஸ் நிறுவனத்தின் டைனமோவும் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் ஊடாக வியாபிப்பதை லெனின் கண்டார். மனிதனின் அன்றாட வாழ்வினுள் அதன் மூலம் புரட்சி ஏற்படும், அந்தப் புரட்சியில் மின்சாரத்துக்கு கிடைக்க வேண்டிய இடம் தொடர்பிலும் லெனின் புரிந்து கொண்டார். 1908ஆம் ஆண்டளவில், ஜெர்மனியில் மின்சார தொழில்நுட்பத்தின் போக்கைக் கண்டு, அந்தப் பரிணாமம் முதலாளித்துவத்தின் மிக சக்திவாய்ந்த கருவியாக மாறும் என்று குறிப்பிட்டார்.
1920 நவம்பரில், விளாடிமிர் இலிச் லெனின் ரஷ்ய கம்யூனிசத்துக்கான பாதையில் மின்சாரம் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரே படிமுறையென அறிந்து கொண்டு அவர் குரல் எழுப்பினார். “கம்யூனிசம் சமமாவது சோவியத் தேசத்தின் வலிமை மற்றும் ஒட்டுமொத்த தேசத்தையும் மின்சாரத்தில் உயிர்பிப்பதற்காகும்”. அன்றிலிருந்து கேபிள் (கம்பிகள்) இழுத்து சோவியத் தேசத்தின் கிராமங்கள் முழுவதும் மின்சாரம் பரந்தது. அதனைப் பார்த்த லெனின், ‘இந்தக் கம்பிகளின் வழியே அபிவிருத்தி பரவுகிறது’ என்று மீண்டும் ஒருமுறை குரல் எழுப்பினார்.
நாம் மின்சாரப் பிரச்சினையினால் கடந்த மூன்றரை வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். அதற்கு முன்னர் பிரச்சினை இல்லாமலில்லை. எனினும் நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு உட்படுத்தியது இந்தக் காலப் பகுதியிலாகும். உற்பத்திக்காகச் செலவாகும் செலவைக் பொறுப்பேற்றுக் கொண்டே ஒன்பது வருடங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் அரசு இருந்தது. அவ்வாறான சுமையை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் சுமக்க முடியாது. கோவிட்19 தொற்றுக்கு நாடு முகம்கொடுத்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதே இது சிக்கலுக்கு உள்ளானது. அரை மணி நேரத்தில் ஆரம்பித்து நான்கு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகளில், பிரதேசங்களில் மின்சாரம் இல்லாததால் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்பவர்கள் இருளிலேயே எதையாவது சாப்பிட்டுவிட்டு நித்திரைக்குச் சென்றனர். ஆடைகளைத் தைப்பதும் கூட நேர அட்டவணையின் பிரகாரம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு 100 மணி கிலோவோட் பயன்படுத்தப்படும் இலங்கையில், சாதாரண நுகர்வோரின் மின்சாரக் கட்டணம் இதனால் 100 வீதம் உயர்ந்தது. வரும் மின்சாரப் பட்டியல் கட்டணத்தை சிரமத்துடன் செலுத்தி வந்த சாதாரண குடிமகனுக்கு இதனைத் தாங்கிக்கொள்ள முடியாது போனது.
2022ஆம் ஆண்டு முழுவதும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாததன் காரணமாக 2,47,250 மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன. 2023ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலத்தினுள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத மின் பாவனையாளர்கள் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வாறான சுமை மக்களுக்கு ஏற்பட்டதோடு, டொலரின் பெறுமதி அதிகரிப்பு, உலக பொருளாதாரத்தின் வீழ்ச்சியை மையப்படுத்தி மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. நிறுவனங்களின் மின்சாரக் கட்டணம் உயர உயர அதன் செலவுகளும் அதிகரித்தன. மின்சாரம் போன்ற வரையறுக்க முடியாத விடயங்கள் அவ்வாறிருக்கும் போது நட்டத்தை ஈடு செய்து கொள்வதற்காக பணியாளர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வசதிகளையும் குறைக்க நேர்ந்தது.
லெனின் கூறியதைப் போன்று மின்சாரத்தினூடாக அபிவிருத்தி விரிவடைந்தது.அது தாங்கிக்கொள்ள முடியாத சுமையாக மின்சாரப் பட்டியலுடன் சேர்ந்தால் அவ்விடத்திலேயே அபிவிருத்தியின் கதை முடிவடைகிறது.
மின்சார சபையின் நாளாந்த இழப்பு சுமார் 500 மில்லியன் ரூபாவாக இருப்பதால், வங்குரோத்து அடைந்த நாடு மீள வேண்டுமானால் முதலில் அத்தகைய சேதங்கள் ஈடு செய்யப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களின் படி மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. மக்கள் பெரும் சுமைகளுக்கு முகம்கொடுத்தனர். எவ்வாறு கட்டணத்தைச் செலுத்துவது என்பது வருந்தத்தக்க விடயமாகும். மின்சாரக் கட்டணம் அதிகரித்தவுடன் உணவுப் பணவீக்கம் உயரும். இலங்கையில் நாம் உணவு மற்றும் பாணங்களுக்கே அதிகளவு சுமையை சுமக்கிறோம்.
இது நமது மாதச் செலவில் 50.7 வீதமாக காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் உணவுக்காக செலவிடப்படுவது மொத்த செலவில் 8.3 வீதம் மட்டுமே.
இந்த கடினமான பயணத்துக்கு அரசு தற்போது சாதகமான பதிலை வழங்கியுள்ளது. அர்ப்பணிப்புடனேயே கனவுகள் நனவாகும். இக்கட்டான காலங்களில் நாம் செய்த அர்ப்பணிப்பினால் பொருளாதாரம் தற்போது மீண்டு வருகிறது. அந்த நிம்மதியும் எமக்கே உரியதாகும்.
இதற்கிடையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது,அனைத்து வர்த்தகர்களும் மற்றும் பெரிய, சிறிய வர்த்தக நிறுவனங்களும் தங்கள் நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை அதிகரித்தன. மரத்திலிருந்து விழுந்த மனிதனை மாடு முட்டியதைப் போன்ற நிலை உருவானது.
இப்போது அதனை ஈடு செய்ய அவர்களுக்கு சந்தர்ப்பம் வந்துள்ளது. அதன்படி தமது நுகர்வுப் பொருட்களினதும், சேவைகளினதும் விலைகளை,கட்டணங்களை கடந்த ஒக்டோபர் மாதத்துக்கு முன்பிருந்த நிலைக்கே குறைக்க அவர்கள் முன்வர வேண்டும். இது அவர்கள் செய்யவே வேண்டிய கண்டிப்பான கடமையாகும்.
அவ்வாறில்லாமல் வழமைபோன்று அவர்கள் வாரிச் சாப்பிடுவதற்கு முனைந்தால் மின்சாரக் கட்டணக் குறைப்பின் முழுமையான பலன் நாட்டு மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
முன்னர் மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை, எரிவாயு விலை, நீர்க் கட்டணம் போன்றன அதிகரித்த போதெல்லாம் அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலைகளை ஒரு சதத்திலேனும் குறைக்கப்படாததன் காரணத்தினாலேயே நாம் இதனை கூற வேண்டியுள்ளது.
ஒரு தேநீரின், அப்பத்தின் விலைகளிலிருந்து சொகுசு பொருட்களின் விலைகள் வரை இந்த நாட்டில் இவ்வாறே இடம்பெற்றுள்ளன.
எனவே, இந்தத் தருணத்தில் தமக்கும் ஒரு தேசியப் பொறுப்புடன், கட்டாயப் பொறுப்புக்கூறலும் உள்ளது என்பதை இந்த வர்த்தக சமூகம் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்.