ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி மோசமாக ஆடி மூன்று மாதங்கள் தான் கடந்த நிலையில், அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டின் கூற்றுப்படி இலங்கை அணி தவறுகளை சரிக்கட்டி வருகிறது என்கிறார். இலங்கை அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக ஆடியதே அவரது திருப்திக்குக் காரணம்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி 42 மற்றும் 155 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் 7 விக்கெட்டுகளாலும் வெற்றி பெற்று தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றியது. இலங்கையில் இருக்கும் வழக்கமான ஆடுகளங்களை விடவும் தடையான பல்லேகலவில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தமது கைவரிசையை காட்டினார்கள். இப்படி தட்டையாக ஆடுகளங்களை தயாரித்ததற்கு சில்வர்வுட் மகழ்ச்சியை வெளியிட்டார்.
“தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டை மாத்திரம் பார்த்தால், ஆடுகளத்தில் எமது போட்டித் தந்திரங்கள் சிறப்பானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது” என்று ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் சில்வர்வுட் கூறினார். “நான் தட்டையான ஆடுகளத்தை கேட்டிருந்ததோடு அப்படியான ஆடுகளம் ஒன்று கிடைத்ததற்கு நன்றி” என்றார்.
முதல் இரு போட்டிகளிலும் 300க்கும் அதிகமான ஓட்டங்கள் பெறப்பட்டன. இலங்கை ஆடுகளங்களில் இப்படி வழக்கமாக நடப்பதில்லை என்பதோடு அதுவும் அடுத்தடுத்த போட்டிகளில் நிகழ்வது மிக அரிது. இந்தத் தொடருக்கு முன்னர் இலங்கை மண்ணில் 10 தடவைகளே ஒருநாள் போட்டியில் 358 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்டன.
முதலில் துடுப்பெடுத்தாடி 350க்கு மேல் ஓட்டங்கள் எடுத்த போட்டிகள் என்று பார்த்தால் ஆப்கானுக்கு எதிரான இலங்கை பெற்ற 381 ஓட்டங்களும் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான முதல் சந்தர்ப்பமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக இலங்கை மண்ணில் இத்தனை ஓட்டங்கள் பெறப்பட்ட ஒன்பது சந்தர்ப்பங்கள் பதிவானபோதும் இலங்கை 350க்கும் மேல் ஓட்டங்கள் பெற்றது நான்கு தடவைகள் மாத்திரம் தான்.
ஆனால் கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தைப் பார்த்தால் மொத்தம் 13 தடவைகள் அணிகள் 350க்கு மேல் ஓட்டங்கள் பெற்றன. ஆனால் அனைத்து உலகக் கிண்ணங்களிலுமே மொத்தமாக 350க்கு மேல் ஓட்டங்கள் பெறப்பட்டது 24 தடவைகள் தான். அதாவது நாளுக்கு நாள் ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமான போக்கை எடுத்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு ஏற்ப இலங்கை ஆடுகளங்களும் மாறா வேண்டும் என்பதே சில்வர்வுட்டின் எதிர்பார்ப்பு.
“நமது கிரிக்கெட்டை நாம் எப்படி விளையாட விரும்புகிறோம், அந்த இயல்புக்கு, அதைச் செய்ய நமக்கு நல்ல ஆடுகளம் தேவை. நீங்கள் வெளியே சென்று அதை மீண்டும் மீண்டும் செய்யலாம் என்ற நிலை மூலமாக போட்டித் திட்டத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு வீரர்களுக்கு கிடைக்கிறது. மெதுவான, தாழ்வான ஆடுகளங்கள் எமக்கு அதைச் செய்ய பொருத்தமாக இருக்காது.
என்னை பொறுத்தவரை இன்று (பல்லேகல) ஆடுகளம் சிறப்பாக இருந்தது. நாம் அதிக ஓட்டங்களை பெறுவதை பார்த்தபோதும். நாம் அப்படியாக மிகப்பெரிய ஓட்டங்களை பெற வேண்டும் என்பதோடு பின்னர் அதனை காப்பதற்கு முடியுமாகவும் இருக்க வேண்டும்” என்றும் சில்வர்வுட் குறிப்பிட்டார்.
சில்வர்வுட் கூறியதுபோல், முதல் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களுக்கும் 381 ஓட்டங்களை பெற்றது. சளைக்காத ஆப்கானிஸ்தானும் அந்த ஓட்டங்களை துரத்தியது. கடைசி கட்டத்திலேயே அந்த அணி இலக்கை எட்டுவதில் தவறவிட்டது. எவ்வாறாயினும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 308 ஓட்டங்களை பெற்றபோது, இலங்கை பந்துவீச்சாளர்களால் அதனை நெருக்கடி இன்றி தற்காத்துக் கொள்ள முடிந்தது. இதன்போது ஆப்கான் அணி வெறும் 25 ஓட்டங்களில் கடைசி எட்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
சில்வர்வுட்டுக்கு இந்த முடிவு பெரும் திருப்தியானது. பயிற்சியின்போது வழங்கப்பட்ட ஆலோசனைகள், திட்டங்களை வீரர்கள் ஆட்டத்தில் முழுமையாக செயற்படுத்தியதாகவே அவர் அதனை பார்க்கிறார்.
“முதல் போட்டிக்குப் பின்னர் மேம்படுத்த வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக நான் கருதினேன்” என்கிறார் சில்வர்வுட். “எனவே பந்துவீச்சாளர்கள் மாத்திரமல்ல அனைத்து வீரர்களையும் ஒன்றாக அமர வைத்து நாம் கூறும் விடயம் பற்றி ஹோக்–ஐ தரவுகளை பயன்படுத்தி அவர்களுக்குக் காட்டினோம். எந்த இடத்தில், எங்கு நாம் பந்து வீச வேண்டும் அதில் எது வெற்றி அளித்தது எது வெற்றி அளிக்கவில்லை என்பது பற்றியும் அதனை எவ்வாறு சரியாகச் செய்வது என்பது பற்றி நாம் பேசினோம். இரண்டாவது போட்டியில் அவர்கள் அதனை அழகாக செய்தார்கள்.
மற்றது நாம் அதனை முதலாவது மற்றும் ஆறாவது பந்தில் பயன்படுத்தினோம். அதாவது இரு பக்கங்களிலும் ஓட்டங்களை விட்டுக் கொடுப்பதை விடவும், பந்துவீச்சை சிறந்த முறையில் ஆரம்பித்து சிறந்த முறையில் முடிக்க முடியுமா? துடுப்பாட்ட விரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து அவர்களின் துடுப்பை சுழற்ற வைக்க முடியுமா? இதன்போது விட்ட இடத்தில் இருந்து செயற்படுவது அடுத்த பந்துவீச்சாளரின் வேலையாக இருக்கும். எனவே, இது துடுப்பாட்ட வீரருக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பதாக இருக்கும். நாம் அதனை செய்ததை பார்த்தோம் குறிப்பாக இரண்டாவது போட்டியில் அது நிகழ்ந்தது. பெளண்டரிகள் செல்லும் எண்ணிக்கை குறைந்ததை பார்த்தோம்” என்றார்.
டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு இடையே இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் கடந்த காலங்களில் மோசமாகவே இருந்தது. கடந்த உலகக் கிண்ணத்தில் அதனை தெளிவாக பார்க்க முடிந்தது. அதாவது நீண்ட கிரிக்கெட் போட்டிக்கும் குறுகிய கிரிக்கெட் போட்டிக்கும் இடையிலான சமநிலையை பேணுவதற்கு தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடலாம். எனவே, 2027 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் அடுத்த ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான அணியை கட்டியெழுப்புவதே தற்போதைய பிரதான இலக்காக உள்ளது.
“நாம் அணியை கட்டியெழுப்ப வேண்டிய கட்டத்தை மீண்டும் எதிர்கொண்டிருக்கிறோம். உலகக் கிண்ணத்திற்கான அணியை கட்டி எழுப்ப வேண்டி உள்ளது. அந்த கட்டுமானத்தில் அனைத்து கற்களும் சரியான இடத்தில் வைக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்கிறார் சில்வர்வுட். “எனவே, நாம் அந்த இடத்திற்கு வரும்போது நாம் நல்ல இடத்தில் இருப்போம். ஒவ்வொருவரும் அனுபவம் பெற்றிருப்பார்கள், அனைவருக்கும் அவர்களின் பணி என்ன என்பது தெரியவரும் என்பதோடு அந்தப் பயணத்தில் பெற்ற வெற்றிகள் அனைவருக்கும் நம்பிக்கையை தருவதாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் இலங்கை அடிய இரண்டாவது ஒருநாள் தொடராக ஆப்கானுக்கு எதிரான இந்தத் தொடர் அமைந்தது. முன்னதாக சொந்த மண்ணில் சிம்பாப்வேயுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இலங்கை சிறப்பாக செயற்பட்டு 2–0 என தொடரை கைப்பற்றியது.
எனவே ஒருநாள் அணியை கட்டியெழுப்பும் இலங்கையின் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. இன்னும் முழு பலமான அணி ஒன்றை இலங்கை எதிர்கொள்ளவில்லை. அடுத்து பங்களாதேஷ் செல்லும் இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 உடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடப்போகிறது. இந்த இரண்டு அணிகளையும் ஒப்பிடுகையில் எதிர்வரும் சுற்றுப்பயணம் சவாலானதாக இருக்கும்.