இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத் தெரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள்
தெரிவு என்பன சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இடைநிறுத்தப்பட்ட கட்சியின் மாநாட்டை
நடத்துவதற்கு மற்றுமொரு குறுக்கீடு தற்போது ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 19ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதும், இதற்கு எதிராக திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் மாநாட்டை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழரசுக் கட்சிக்குள் தோன்றியிருந்த உள்ளக முரண்பாடு மேலும் உக்கிரமடைந்திருப்பதன் வெளிப்பாடாக இந்த இடைக்காலத் தடையுத்தரவு அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தலைமைத்துவத்துக்கான தெரிவுப் போட்டி இதுகாலவரை நடைபெறவில்லை. இதுவரை கட்சிக்குத் தலைமைவகித்த அனைவரும் போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், முதல் தடவையாக தலைமைத்துவத்துக்கு மூவர் போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியானது கட்சியின் ஜனநாயகத்தை பறைசாற்றும் விடயமாக அமையும் எனக் கூறப்பட்டாலும், பதவி நிலைகளில் உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட மோகமே போட்டி நிலைமைக்கும் காரணம் என்பது புலனாகியது.
அதுமாத்திரமன்றி, அக்கட்சிக்குள் ஒருவர் மீது ஒருவர் உட்பகைமை கொண்டிருந்ததும் தெரியவந்தது.
தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி காணப்பட்டது. சிறிதரன் எம்.பி, சுமந்திரன் எம்.பி ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் களமிறங்கினார்.
மூவர் போட்டியிட்டாலும் சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் இடையிலேயே கடுமையான போட்டி நிலவியது. இரு தரப்பினரும் தமக்கு ஆதரவு வேண்டி கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும், அதில் தாக்கம் செலுத்தக் கூடிய புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் பிரசாரங்களை முன்னெடுத்தனர். இதனால் கட்சி ஆதரவாளர்கள் சிறிதரன் அணி, சுமந்திரன் அணி எனப் பிளவுற்றனர்.
தலைமைத்துவத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் சிறிதரன் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதன் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவுக்கான முயற்சியும் குழப்பத்திலேயே முடிவடைந்தது.
தலைவர் பதவி போட்டியில் முடிந்ததால், ஏனைய பதவிகளையாவது போட்டியின்றி இணக்கப்பாட்டுடன் தெரிவு செய்வதற்கான முயற்சிகளை தலைமைத்துவம் எடுத்திருந்தது. இருந்தபோதும் இந்த முயற்சி கைகூடவில்லை.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் வடக்குக்கு வழங்கப்பட்டால் பொதுச்செயலாளர் பதவி கிழக்குக்கு வழங்கப்படுவது என்பது அவர்களால் பின்பற்றப்பட்டுவரும் ஓர் சம்பிரதாயமாக இருந்தது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், குறித்த பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பலர் இருந்தமை மாநாட்டில் புலப்பட்டது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லையென்பதும், பலர் கட்சியின் ஒற்றுமையைவிட பதவிநிலைகளைப் பெற்றுக்கொண்டு தம்மை பலப்படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது.
தலைமைத்துவத்துக்கான போட்டியில் தோல்வியடைந்த தரப்பு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும், தேர்தல்களின் போது வேட்புமனுக்களில் கைச்சாத்திடுதல் உள்ளிட்ட அதிகாரம் மிக்க செயற்பாடுகளில் செல்வாக்கைச் செலுத்தும் பொதுச்செயலாளர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதுவரை காலமும் தலைமைத்துவம் தொடர்பிலோ அல்லது பதவிகள் குறித்தோ தமிழரசுக் கட்சியில் உள்ளவர்கள் தமக்கிடையில் பகிரங்கமாக முரண்பாடுகளைத் தெரிவித்திருக்கவில்லை.
இருந்தபோதும் தற்பொழுது பதவிகளுக்காக உறுப்பினர்கள் தமக்கிடையில் முட்டிமோதிக் கொள்வது தமிழர் தரப்புக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுப்பதாக அமையாது என்று தமிழ்ப் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கட்சியின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு சில தீய சக்திகள் முயற்சிப்பதாக மூத்த தலைவர் இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவித்துள்ளார். பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிர்வாகிகளைத் தெரிவுசெய்ய முடியாவிட்டால், தேர்தலை நடத்தியாவது அப்பதவிகளுக்கு ஆட்களைத் தெரிவுசெய்யுமாறு அவர் அறிவுறுத்தியிருந்த நிலையில், கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி முயற்சிகள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், எந்த வழக்கையும் எதிர்கொள்ளத் தாம் தயார் என்றும், தமக்கு எதிரான சூழ்ச்சிகள், தடைகளை மக்களின் ஆத்மபலத்துடன் முறியடிப்போம் என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரன் தெரிவித்துள்ளார். தன்னையும் தனது கட்சியையும் குழப்பும், அச்சுறுத்தும் வகையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டு அஞ்சப் போவதில்லை. தன்னைத் தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சியையும் மக்களையும் இப்படியான சூழ்ச்சிகளால் முடக்க முடியாது. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தாம் தயாராகவே இருப்பதாகவும் சிறிதரன் எம்.பி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் நடைபெறும் வருடமாக 2024ஆம் ஆண்டு காணப்படுவதால் எதிர்காலத் தேர்தல்களில் எவ்வாறு செயற்படுவது, தென்னிலங்கைக் கட்சிகளுடன் பேரம்பேசும் அரசியலை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து சிந்திக்க வேண்டிய இன்றைய தருணத்தில் கட்சியின் பதவிகளுக்காக உறுப்பினர்கள் தமக்கிடையில் முரண்பட்டுக்கொள்வது பேரம் பேசும் சக்தியை சீர்குலைக்கும்.
அது மாத்திரமன்றி, அரசாங்கத்தின் அறிவிப்பின்படி முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகளே தென்படுகின்றன. எனவே, தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய, தமிழ் மக்களுக்கு மிகவும் பொருத்தமான வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ்த் தரப்பினரை ஒன்றிணைத்து முன்னோக்கி நகர்ந்து செல்வதா என்பது குறித்த கலந்துரையாடல்களும் திட்டமிடல்களுமே தற்பொழுது தேவையாகவிருக்கின்றன.
இவ்வாறான பின்னணியில் தலைமைத்துவத்தின் பதவிகளுக்கு இழுபறிப்பட்டு நிற்பதும், கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு நீதிமன்றத்தினை நாடிச் செல்வதும் போன்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அக்கட்சியின் அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்கின்றனர் தமிழ்ப் புத்திஜீவிகள்.
மறுபக்கத்தில், தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டியதன் அவசியமும் நன்கு உணரப்பட்டுள்ளது. இதற்கான பாரிய பொறுப்பு தமிழரசுக் கட்சிக்கு இருக்கும் நிலையில், இதுபோன்ற உள்ளக முரண்பாடுகள் அந்தப் பொறுப்பை பலவீனமாக்கலாம். விடுதலைப் புலிகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் செயற்பட்டுவரும் நிலையில், இதனை மேலும் வலுப்படுத்தி ஏனைய அரசியல் கட்சிகளையும் அதில் ஒன்றிணைத்து பலம்பொருந்திய கூட்டணியாகச் செயற்படுவதற்குப் பதிலாக தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டிருப்பது பற்றியும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்ற ரீதியில் தனித்தனியாகப் பிரிந்துநின்று செயற்படுவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் சார்பில் பேரம்பேசும் சக்தியை ஏற்படுத்தி விடாது.
நடைபெறக்கூடிய தேர்தல்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கிய தேர்தல்களாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த நிலையில் ஏற்கனவே கட்சியின் உள்ளக முரண்பாடுகளினால் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கக் கூடிய வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் மேலும் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
ஒரு தரப்பு ஒரு வேட்பாளருக்கும் மற்றைய தரப்பு பிறிதொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என முடிவெடுக்கும் பட்சத்தில் தேர்தலில் தமிழ் மக்களின் பலம் குறித்து தென்னிலங்கைக் கட்சிகள் குறைத்து மதிப்பிடுவதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
எனவே, தமிழரசுக் கட்சி விரைவில் தமக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை சுயநல நோக்கத்தில் மாத்திரம் அணுகாமல், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நிலைப்பாட்டிலிருந்து அணுக வேண்டும். இதற்கு அவர்கள் சுமுகமான முறையில் பிரச்சினைகளைத் தீர்த்து ஒற்றுமையுடன் முன்னேறி தமது கட்சியையும், ஏனைய தமிழ் கட்சிகளையும் ஒருங்கிணைத்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் உண்மையான எண்ணம் ஆகும்.