Home » புடினின் பைடன் ஆதரவு
ட்ரம்புக்கான பிரசாரத்தை பலப்படுத்தும்

புடினின் பைடன் ஆதரவு

புடினின் பைடன் ஆதரவு

by Damith Pushpika
February 18, 2024 6:00 am 0 comment

2024 ஆம் ஆண்டு உலக அளவில் தேர்தல் ஆண்டாகவே அவதானிக்கப்படுகின்றது. ஏறத்தாழ 40 அரசுகளுக்கு மேல் தேர்தலை எதிர்கொள்கின்றது. பனிப்போர் அரசியலின் இருதுருவ ஏகாதிபத்திய அரசுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தமது அரச தலைவருக்கான தேர்தலையும் இவ்வாண்டு எதிர்கொள்கின்றது.

பனிப்போர் அரசியல் தகர்க்கப்பட்டாலும் பனிப்போருக்கு பின்னரான அரசியலிலும் அமெரிக்க மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நெருக்கடிகள் சர்வதேச அரசியலில் பிரதான பேசுபொருளாகவே தொடர்கின்றது. குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் நகர்வுகள் பனிப்போர் அரசியலின் பிரதிபலிப்பாகவே சர்வதேச அரசியல் அவதானிகளால் விபரிக்கப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு பின்னால் ரஷ்ய அரசின் ஈடுபாடு காணப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையிலேயே 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்ய ஜனாதிபதி புடின் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது சர்வதேச அரசியலில் அதிக பேசுபொருளாகவும் தேடலுக்குரிய விடயமாகவும் மாறியுள்ளது. இக்கட்டுரை ரஷ்ய ஜனாதிபதி புடினின் தேர்தல் பிரச்சாரத்தையும் அமெரிக்க தலைவரின் தேர்தல் மீதான கரிசனையையும் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் மார்ச் மாதம் நடுப்பகுதியிலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் இறுதிப்பகுதியிலும் நடைபெற உள்ளது. இரு நாடுகளின் ஆட்சித்தலைவர்களும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களம் இறங்க உள்ளனர். இந்நிலையிலேயே அண்மையில் ரஷ்ய தொலைக்காட்சி நிருபர் பாவெல் ஜரூபின், “யார் சிறந்தவர், பைடனா அல்லது ட்ரம்பா?” என ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் கேட்டிருந்தார். “பைடன்” எனப்பதிலளித்த புடின் “அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் கணிக்கக்கூடியவர். அவர் ஒரு பழைய பாணி அரசியல்வாதி.” எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் சுவிட்சர்லாந்தில் பைடனைச் சந்தித்தபோது, அது சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரால் செயல்பட முடியவில்லை என்று சிலர் ஏற்கனவே கூறினர். நான் அப்படி எதையும் பார்க்கவில்லை.” எனவும் புடின் பைடனின் முதுமை மீதுள்ள விமர்சனத்தையும் நிராகரித்துள்ளார். விளாடிமிர் புடினின் பைடனுக்கு ஆதரவான கருத்துகள் சர்வதேச அரசியல் அவதானிகளிடையே வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. ஏனெனில் பைடனது ஆட்சிப்பரப்பிலேயே ரஷ்ய மற்றும் புடின் மீது கடுமையான எதிர்வினைகளை அவர் மேற்கொண்டிருந்தார். புடினை அமெரிக்க ஜனாதிபதி பைடன், “ஒரு கொலைகார சர்வாதிகாரி. ஒரு தூய குண்டர். நிலம் மற்றும் அதிகாரத்தின் மீது மோகம் கொண்டவர்” என்றெல்லாம் பல தடவைகள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை இனப்படுகொலையாக சர்வதேச நீதிமன்றத்தில் பைடன் நிர்வாகம் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், ஏனைய நாடுகளையும் பொருளாதார தடைக்கு அழைப்பும் விடுத்திருந்தது.

இவ்வாறான அரசியல் நிகழ்வுகளின் பின்புலத்தில் புடினின் பைடனுக்கான ஆதரவு அதிக குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இவ்வாதரவை நேரான பார்வையில் பார்க்க முடியுமா? அல்லது எதிரான உள்நோக்கங்கள் கொண்டுள்ளனவா என்பதில் சர்வதேச அரசியல் அவதானிகள் தேடலை விஸ்தரித்துள்ளனர். குறிப்பாக எதிரான உள்நோக்கமே பரவலான அவதானிப்பாக காணப்படுகின்றது. இதற்கு கடந்த கால அனுபவங்களும் முதன்மை பெறுகின்றது.

2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு பின்னால் ரஷ்யாவின் புலனாய்வுத்துறை செய்பாடுகள் பிரதான வகிபாகத்தை செலுத்தியிருந்தது என்பது அமெரிக்க அரசியலின் பரவலான செய்தியாக உள்ளது. ரஷ்யா சமூக ஊடகங்களை பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு எதிராகவும், குடியரசுக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவும் செயற்பட்டமைக்கான ஆதாரங்களின் தொகுப்பு 2018இல் அமெரிக்காவின் முதன்மை செய்தியாக காணப்பட்டது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள திட்டத்தில் பணிபுரியும் சுமார் 80 ரஷ்யர்களில் ஒருவரான இரினா வி. காவர்சினா என்பவர் சில செய்திகளுடன் குடும்ப உறுப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். “எங்களுக்கு இங்கே வேலையில் ஒரு சிறிய நெருக்கடி இருந்தது. FBI எங்கள் செயல்பாட்டை முறியடித்தது. எனவே, சக ஊழியர்களுடன் சேர்ந்து தடங்களை மறைப்பதில் நான் ஆர்வமாக இருந்தேன். இந்த படங்கள் மற்றும் இடுகைகள் அனைத்தையும் நான் உருவாக்கினேன். மேலும் இது மக்களால் எழுதப்பட்டது என்று அமெரிக்கர்கள் நம்பினர்.” என ரஷ்யாவின் திட்டத்தைப் பற்றி அவர் மின்னஞ்சலில் எழுதியுள்ளார். இம்மின்னஞ்சலை அடிப்படையாய் கொண்டு 37 பக்க குற்றப்பத்திரிக்கை, 2018, பெப்ரவரி-16அன்று அமெரிக்காவின் அடிப்படை நீதித்துறை அலகான கிராண்ட் ஜூரியால் வாஷிங்டனில் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க அரசியல் முரண்பாட்டைத் தூண்டுவதற்கும், ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதி பிரச்சாரத்தை சேதப்படுத்துவதற்கும், மறுதளத்தில் எதிர் வேட்பாளர்களான பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜில் ஸ்டெய்ன் ஆகியோருடன் சேர்ந்து டொனால்ட் ட்ரம்பின் வேட்புமனுவை வலுப்படுத்துவதற்கும், கவனமாக திட்டமிடப்பட்ட மூன்றாண்டு கால ரஷ்ய திட்டத்தை இந்த குற்றச்சாட்டு முன்வைத்தது.

ரஷ்சியர்கள் அமெரிக்க குடிமக்களின் அடையாளங்களை திருடி, அரசியல் ஆர்வலர்களாக காட்டிக்கொண்டு, குடியேற்றம், மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் பிரதான புள்ளிகளைப் பயன்படுத்தி பிரசாரத்தை கையாண்டுள்ளனர். அதில் அந்த பிரச்சினைகள் ஏற்கனவே குறிப்பாக பிளவுபட்டன என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, ரஷ்யர்களில் சிலர் ட்ரம்ப் பிரச்சாரத்துடன் தொடர்புடைய அறியாத நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு தலைமை தாங்கும் சிறப்பு ஆலோசகரான ராபர்ட் எஸ். முல்லர் III, ட்ரம்ப் அல்லது அவரது கூட்டாளிகள் தெரிந்தே சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. “ரஷ்ய சதிகாரர்கள் அமெரிக்காவில் முரண்பாட்டை ஊக்குவிக்கவும், ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் விரும்புகிறார்கள் என்றே குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டுகிறது” என விசாரணையை மேற்பார்வையிடும் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ஜே. ரோசன்ஸ்டீன் ஒரு சுருக்கமான செய்தி மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இவ்வரலாற்று குற்றச்சாட்டினை முன்வைத்தே புடினின் பைடனுக்கான ஆதரவை அவதானிக்க வேண்டி உள்ளது. கடந்த காலங்களில் ரஷ்யா ஹிலாரி கிளின்டனை எதிர்த்தமைக்கு பின்னால், அவர் ஒபாமா ஆட்சிக்காலப்பகுதியில் வெளிவிவகார செயலாளராக ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுத்தமையே காரணமாகின்றது. ஹிலாரி கிளின்டன் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தபோது, பெரிய அளவிலான அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால் ரஷ்யாவில் அமைதியின்மையை தூண்டியதாக புடின் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறான பின்னணியில் 2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொண்டிருந்த ரஷ்யா, இனப்படுகொலை குற்றச்சாட்டை முன்வைக்கும் பைடனை ஆதரிப்பதன் முரண்நகையான மாற்றத்தை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

விளாடிமிர் புடினின் நேரடியான பைடனுக்கான ஆதரவுக் கருத்துரை, மறைமுகமாக ட்ரம்புக்கு நேரான விளைவை உருவாக்குவதாகவே அமைகின்றது. ஏனெனில் 2016 தேர்தலில் கிளாரி கிளின்டனுக்கு எதிரான ரஷ்யாவின் பிரசாரத்தின் நேரான விளைவை பெற்றவராக டொனால்ட் ட்ரம்பே காணப்படுகின்றார். ஆதலால் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் மத்தியில் ரஷ்யாவின் ஆதரவுடனேயே ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானார் எனும் பிரசாரம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக களமிறங்க ட்ரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையிலேயே புடின் பைடனுக்கு ஆதரவாக கருத்துரைப்பது, ட்ரம்ப்-, புடின் பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதுவாக அமையக்கூடிய வாய்ப்புகளாக எதிர்வுகூறப்படுகின்றது. ட்ரம்ப் மற்றும் பைடன் ஆட்சிக்காலப்பகுதிகளில் ட்ரம்ப் இனுடைய காலப்பகுதியே ஒப்பீட்டளவில் ரஷ்யா மற்றும் புடினுக்கு நன்மையானதாக அமைந்துள்ளது. ட்ரம்ப் ஆட்சிக்காலப்பகுதியில் புடினை, “புத்திசாலி மற்றும் மேதை” என விழித்துள்ளார். மேலும், அண்மையில் நேட்டோ உறுப்பு நாடுகள் பற்றி ட்ரம்ப் தெரிவித்த கருத்தின் விளைவு ரஷ்யாவுக்கே சாதகமானதாகும். மேற்கத்திய இராணுவக் கூட்டணியினான நேட்டோவின் உறுப்புரிமை கட்டணத்தைச் செலுத்தத் தவறிய எந்தவொரு நேட்டோ உறுப்பினரையும் தாக்க ரஷ்யாவை ஊக்குவிப்பதாக ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவ்வாறனதொரு ஆட்சியாளர் அமெரிக்க ஜனாதிபதியாக வருவதனையே புடினும் விருப்பம் கொள்வார்.

எனவே, புடினின் பைடனுக்கான ஆதரவு பிரச்சாரம் என்பது புடினின் தந்திரோபாய நகர்வாகவே அமைகின்றது. 2016 தேர்தலில் சமூக வலைத்தளங்களூடாக ஹிலாரி கிளின்டனுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு ஹிலாரி கிளின்டனை தோற்கடித்திருந்தார். 2024ஆம் ஆண்டு தேர்தலில் பைடனை ஆதரித்து மேற்கொள்ளும் ஊடகப்பிரச்சாரத்தினூடாக பைடனை தோற்கடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பதே சர்வதேச அரசியல் அவதானிகளின் பொதுவான அவதானிப்பாக காணப்படுப்படுகின்றது. டொனால்ட் ட்ரம்ப் 2024 ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக மாறினால், அவரிடம் புடின் மற்றும் ரஷ்யா பற்றிய கேள்விகளே முதன்மை பெறும். எனினும் தற்போது ட்ரம்ப் மற்றும் அவரது பிரச்சாரக்குழு பைடனைப் பற்றிய புடினின் கருத்துகளைச் சுட்டிக்காட்டி, ட்ரம்ப் கிரெம்ளினின் தேர்வு என்ற தவிர்க்க முடியாத குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்ப ஏதுவாக அமையும்.

ட்ரம்ப்க்கு மாத்திரமின்றி பைடனின் எதிரணியினருக்கும் புடினின் ஆதரவு பிரச்சாரம் பலமான பொறியாக அமையப்பெற்றுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division