ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ தான் இருக்கும். ஒரே நேரத்தில் ஒரு தேன் கூட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ராணி தேனீக்கள் இருந்தால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்ளும். இப்படி சண்டைக்கு அழைப்பதற்கென்றே ராணி தேனீக்களுக்கு விசேட ரீங்காரமெல்லாம் இருக்கிறது. சண்டையில் ஒரு தேனீ மற்றொன்றைக் கொன்று ராணியாக வெற்றிவாகை சூடுகிறது. பெரும்பாலும், ஒரு தேன் கூட்டில் இருக்கும் தேனீக்கள், அக்கூட்டின் ராணி தேனீயின் குழந்தைகளாக இருக்கின்றன. ஒரு ராணி தேனீ உருவாகும்போது, அதற்கென்று அக்கூட்டிலிருக்கும் மற்ற தேனீக்கள் புரதம் நிறைந்த உணவைக் கொடுக்கின்றன. மற்ற தேனீக்களுக்கும் இவ்வுணவு கொடுக்கப்பட்டாலும், வளரும் ராணி தேனீக்கு விசேட கவனிப்பு நிச்சயம்.
ஒரு புது ராணி தேனீ உருவாகும்போது, 15 நாட்களுக்கு தேன்கூட்டிலிருக்கும் துளையொன்றில் மற்ற தேனீக்களால் அடைத்து வைக்கப்படுகிறது. முற்றிலும் வளர்ந்து, இனப்பெருக்கத்திற்குத் தயாராகி 15 நாட்கள் கழித்து துளையிலிருந்து வெளிவரும் புது ராணி தேனீ, முதல் காரியமாகச் செய்வது தேன் கூட்டிலிருக்கும் பிற ராணி தேனீக்களை சண்டையிட்டு வெளியேற்றுவது அல்லது கொல்வது.
தேன்கூட்டிலிருக்கும் மற்ற தேனீக்களின் முக்கிய வேலையே, ராணி தேனீக்கு பணிவிடை செய்வதும், அதற்குத் தேவையான உணவைக்கொண்டுவருவதும் தான். ஆனால், ராணி தேனீக்கு தொடர்ந்து முட்டையிட்டு தன் சந்ததியை வளர்ப்பது மட்டுமே வேலை.