இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இந்தத் தேர்தலில் எக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம், யார் அடுத்த பிரதமர் என்பது தொடர்பாக தற்போது அதிக கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளை வைத்துப் பார்க்கின்ற போது, ஆளும் பா.ஜ.கவே மீண்டும் வெற்றியீட்டும் என்றே ஊகிக்க முடிகின்றது. அதன்படி நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால் எதிர்வரும் மார்ச் -அல்லது ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தல் நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்புகள் எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. இதனால் தேசிய அளவில் அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் மற்றும் இ.டி.ஜி ஆய்வு நிறுவனம் இணைந்து தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளன. இதில், 91 சதவீதம் மக்கள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 45 சதவீதம் பேர் பா.ஜ.க கூட்டணி 300 இற்கும் அதிகமாக இடங்களைப் பெறும் என்றும், 14 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 400 இற்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்குக் கருத்துத் தெரிவித்த 64 சதவீதம் பேர், 3 ஆவது முறையாக நரேந்திர மோடிதான் பிரதமர் ஆவார் என்றும், 17 சதவீதம் பேர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர் இவர்கள் இருவர் தவிர வேறு யாராவதுதான் பிரதமராக வருவார் என்று தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளது. மம்தா பாஜிர்னயின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த ஹிந்தி பேசும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியை பா.ஜ.க பதிவு செய்துள்ளது. உத்தர பிரதேசம், பீகாரிலும் பாஜகவின் பலம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 3 ஆவது முறையாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 295 முதல் 335 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றும் இந்தியா கூட்டணி 165 முதல் 205 இடங்களைக் கைப்பற்றும் எனவும் ஏ.பி.பி.-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மக்களவை தேர்தலுக்கான போட்டி தற்போது விறுவிறுப்பைப் பெறத் தொடங்கியுள்ளது என்றுதான் கூற வே்ண்டும். ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சவால் விட்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அயோத்தியில் இராமர் கோயில் திறப்பு விழா, 370 ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பு, இந்திய கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகள், பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் என பா.ஜ.க தற்போதைய சூழலில் ஒரு அடி முந்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
‘இந்தியா’ என்ற கூட்டணிக்குள் உள்ள கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸுக்கும், காங்கிரஸின் மாநிலப் பிரிவுக்கும் இடையே பொதுத் தேர்தலுக்கான ஆசனப் பகிர்வு பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது. அக்கருத்து வேறுபாடானது பா.ஜ.கவுக்கு எதிர்வரும் தேர்தலில் நன்மையையே ஏற்படுத்தப் போகின்றது என்று அரசியல் அவதானிகள் சொல்கின்றார்கள்.
அதேசமயம் எதிர்வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.க பெரும்பான்மை இடங்களை வென்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான கார்டியன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்கும் தலைவர் என்கின்ற பெருமையை நரேந்திர மோடி பெறுவார்.
அதேபோல ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு கொண்டாடப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாது எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று விட்டால் காங்கிரஸ் ஏறத்தாழ காலியாகி விட்டது என்று அர்த்தமாகிவிடும். எனவே பா.ஜ.க இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறது.
இந்நிலையில்தான் இங்கிலாந்தின் பத்திரிகையான கார்டியன், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கணித்திருக்கிறது. இது தொடர்பாக அப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தல் பெறுபேற்றை உறுதி செய்துள்ளன. இந்த 5 மாநிலங்களில் 3 இல் பா.ஜ.கதான் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தற்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. இதனை சரி செய்யதான் ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முக்கிய பிரச்கினைகளுக்கு எதிராக ஒன்றுசேரவில்லை. இந்தச் சூழலையெல்லாம் பொருத்திப் பார்க்கும்போது பா.ஜ.க வெற்றி என்பது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருந்தாலும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும்” என்று கார்டியன் இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எஸ்.சாரங்கன்