இலங்கை சுதந்திரம் அடைந்து 76 வருடங்கள் கடந்துள்ளன. இந்நாட்டின் 76ஆவது தேசிய சுதந்திர தினம் கடந்த 4ஆம் திகதி கொண்டாடப்பட்டது. என்றாலும் இந்த 76 வருடங்களையும் பின்னோக்கிப் பார்க்கும் போது இந்நாடு கடந்து வந்த பாதை பல்வேறுவிதமான சவால்களுக்கு முகம் கொடுத்ததாகவே அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அவற்றில் மக்கள் விடுதலை முன்னணியில் 1971, 1988/89 கிளர்ச்சிகள், வடக்கு கிழக்கில் சுமார் 30 வருட கால யுத்தம், பொருளாதார மற்றும் நிதி ரீதியிலான சவால்கள் பெரிதும் குறிப்பிடத்தக்கவை.
இச்சவால்களில் தற்போதைய பொருளாதார ரீதியிலான சவால்கள் எளிதானவை அல்ல. இந்நாடு வளர்ச்சியடைந்த நிலையை அடைவதற்கு கடந்த 76 ஆண்டுகள் போதுமானவை. இருந்தும் இன்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாகவே இலங்கை காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? அபிவிருத்தியின் எல்லையை இந்நாட்டினால் ஏன் இன்னும் அடைந்து கொள்ள முடியவில்லை. இது தொடர்பில் திரும்பிப் பார்ப்பது காலத்தின் அவசியத் தேவையாகும்.
உலகில் 210 நாடுகளும் தன்னாட்சி பிராந்தியங்களும் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்றன. அந்நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள இந்நாட்டில், பௌதீக வளங்கள் நிறைந்துள்ளன. ஆயினும் இந்நாடு இன்னும் வளர்முக நாடாகவே உள்ளது. அதற்கான காரணம் தான் என்ன என்பது பலரையும் குடைந்தெடுக்கும் கேள்வியாக விளங்குகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இந்நாடு வங்குரோத்து நிலையையும் அடைந்தது. அந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க எவரும் முன்வராத சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுத்தார். அவர் , கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை விரிவான அடிப்படையில் தொடங்கினார். அதன் பிரதிபலன்களை குறுகிய காலம் முதல் நாடும் மக்களும் அனுபவிக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறான சூழலில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையரும் இந்நாட்டுக்கு ஆதரவளித்து இயன்ற உதவிகளை வழங்குகின்றனர். அவர்கள் வெளிநாடுகளில் வசித்தாலும் அல்லது வேலை செய்தாலும், தங்கள் தாய்நாட்டுக்காக உதவி, ஒத்துழைப்புக்களை எப்போதும் நல்குகின்றனர். குறிப்பாக கடந்த காலங்களில், இந்நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கும் அவர்களது ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டனர்.
அந்த வகையில் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரது எதிர்கால நலன்களுக்கும் அவர்களது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் இல்லாமல் இல்லை. இவ்வாறான நிலையில் இந்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர்களில் ஒருவர் இந்நாட்டு சிறுவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளார். இது இந்நாட்டு இளம் பராயத்தினரைப் பெரிதும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை.
அர்ஷன் அஷ்ரப் என்ற பெயர் கொண்ட இவ்விளைஞர் தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கின்ற போதிலும் கண்டி மாவட்டத்திலுள்ள அனிவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். அவர் தமது ஒரு வயதில் தம் தாய் தந்தையருடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். தாம் அமெரிக்காவில் வசிப்பவர் என்றாலும் தான் ஒரு இலங்கையர் என்பதை அவர் பெருமையுடன் கூறிக் கொள்ளக்கூடியவராக உள்ளார். இலங்கையில் மாத்திரமல்லாமல் அமெரிக்காவிலும் கூட தான் ஒரு இலங்கையர் என்றே குறிப்பிடுவதாக தெரிவிக்கின்றார்.
அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை நல்கிவரும் இவர், இந்நாட்டுப் பிள்ளைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். குறிப்பாக இந்நாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கூடைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதில் இவர் அதிக சிரத்தை காட்டுகின்றார்.
தற்போது தாயகத்திற்கு வருகை தந்துள்ள அர்ஷான் அஷ்ரப், இந்நாட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் கூடைப்பந்தாட்டத்தை பிரபல்யப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் ஊடாக தாய் நாட்டில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்.
இதன் ஊடாக இந்நாட்டவர்களின் முன்னேற்றத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென அவர் உறுதியாக நம்புகின்றார்.
அமெரிக்காவில் கெளரவமான தொழிலில் வெற்றிகரமான வர்த்தகராகத் திகழுகிறார் அர்ஷான் அஷ்ரப்.
‘பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இந்நாட்டை குறுகிய காலப்பகுதிக்குள் மீட்டெடுத்து அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையில் தாம் பெரிதும் ஈக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் அர்ஷான் அஷ்ரப், தாம் அவரது வேலைத்திட்டங்களைப் பெரிதும் வரவேற்பதாகக் கூறுகின்றார்.
கடந்த அழிவுகரமான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பின் பின்னர் நாட்டை பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஜனாதிபதி இட்டுச் சென்ற விதம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால் நாட்டை அபிவிருத்தி செய்ய அவர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு சகல ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக, கல்வி மற்றும் விளையாட்டின் முன்னேற்றத்தில் ஜனாதிபதி காட்டும் ஆர்வமும் அக்கறையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதேநேரம் மாணவர்கள் தங்கள் தொழில் இலக்குகளை அடைவதற்கான கல்வி உதவித்தொகை பெற விளையாட்டு ஒரு நல்ல தளத்தை வழங்கக்கூடியதாகும். அதேபோன்று குழுப்பணி, சுய ஒழுக்கம், சுயமரியாதையை அதிகரித்தல், கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு போன்ற நற்பண்புகளையும் விளையாட்டு ஒரு மனிதனுக்கு வழங்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறுகிறார்.
அந்த வகையில் கொழும்பு, பம்பலப்பிட்டியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கூடைப்பந்தாட்ட போட்டியொன்றை அண்மையில் ஏற்பாடு செய்து அவர் நடாத்தியுள்ளார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தேசமான்ய மங்கள செனரத் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிலையில் இந்நாட்டில் கூடைப்பந்தாட்ட விளையாட்டை பிரபல்யப்படுத்துவதோடு சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது.
இது தொடர்பில் அர்ஷான் அஷ்ரப் கூறும் போது, ‘கூடைப்பந்தாட்டம் நான் மிகவும் விரும்பும் விளையாட்டு. இந்நாட்டின் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவ்விளையாட்டை முன்னுரிமை அடிப்படையில் பிரபலப்படுத்த எதிர்பார்க்கிறேன். இதன் நிமித்தம் அமெரிக்கர்களின் ஒத்துழைப்பையும் இந்நாட்டு பிள்ளைகளுக்காகப் பெற்றுக்கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளேன்.
இந்நாட்டு சிறுவர்களுக்கு இதன் நிமித்தம் உதவும் வகையில் இலாப நோக்கற்ற நிறுவனமொன்றை நிறுவ எண்ணியுள்ளேன். இது கூடைப்பந்தாட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்தும் நிறுவனமாக இராது. மாறாக விளையாட்டு உள்ளிட்டவற்றின் ஊடாக இந்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தும் அமைப்பாக இருக்கும். இதன் மூலம் இலங்கை கூடைப்பந்தாட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அத்தோடு எமது நிறுவனம் இலங்கை தொடர்பான விடயங்களை அமெரிக்க மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதற்கும் நாட்டைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உருவாக்குவதற்கும் முயற்சிக்கும். குறிப்பாக இந்நாட்டின் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவுமாறு அமெரிக்காவின் பரோபகாரர்களிடம் கோரிக்கையும் விடுக்கப்படும்.
தற்போது, கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களுக்கென சகல வசதிகளையும் கொண்ட கூடைப்பந்தாட்ட பயிற்சி வளாகமொன்றை கொழும்பில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு எனது தனிப்பட்ட மற்றும் நண்பர்களின் நிதி நன்கொடை பயன்படுத்தப்படும். கொழும்பு பகுதியில் (நாரஹேன்பிட்டியை சுற்றி) குறைந்தபட்சம் 100 -_ 140 பேர்ச் நிலத்தில் இவ்வளாகத்தை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். அதற்கு பொருத்தமான காணியை கொழும்பில் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உதவும் என்ற நம்பிக்கை தமக்குள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
‘இக்கூடைப்பந்தாட்ட பயிற்சி மையமானது, உள்ளக விளையாட்டரங்கம், நீச்சல் தடாகங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கான முழுமையான வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதிகள், சிற்றுண்டிச்சாலைகளுடன் கூடிய அலுவலக வளாகம் என்பவற்றை உள்ளடக்கி சர்வதேச மட்டத்திலான வசதிகளைக் கொண்டிருக்கும்’ என்கிறார் அர்ஷன் அஷ்ரப்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு பிள்ளைகளின் வளமான எதிர்காலத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார். அத்தோடு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் எமது இவ் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு நல்கியுள்ளார். இதற்கு மேலதிகமாக ரவி கருணாநாயக்கவின் மகளான ஒனெலா கருணாநாயக்கவும் ஒத்துழைப்பு வழங்குகின்றார். அத்தோடு தேசமான்ய மங்கள செனரத்தின் ஒத்துழைப்பும் போற்றத்தக்க வகையில் உள்ளது.
அமெரிக்கர்கள் மத்தியில் இலங்கையை ஒரு முக்கியமான சுற்றுலா மற்றும் முதலீட்டுத் தலமாக மேம்படுத்தவும் அவர் எதிர்பார்க்கிறார். அது வளமான இலங்கைக்கு வலு சேர்ப்பதாக அமையும். வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தாயகத்தின் மீது பற்றுக் கொண்ட இவ்வாறான இலங்கையர்கள் உண்மையிலேயே எமது நாட்டிற்கு பெரும் பாக்கியமாகும்.
மர்லின் மரிக்கார்