வரலாற்று சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா, எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த திருவிழாவினை ஒட்டி தினமும் சிறப்பு பூஜைகளும் விசேட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருவிழாவையொட்டி விசேட கிரியைகள் பன்னிரெண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும். 12 நாட்களும் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரை – காலை ஞான பூஜை, யாக பூஜை, நித்திய பூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன தினமும் நடைபெறுவதோடு, சுவாமி உள்வீதி, வெளி வீதியில் வலம்வந்து அடியார்களுக்கு தரிசனம் கொடுப்பார்.
இந்த மகோற்சவ திருவிழா பிரதம குரு சிவஸ்ரீ பத்ம நிலோஜ ஈசான சிவம் தலைமையில் நடைபெறும். இந்த ஆலயத்தின் பிரதம குருவான விஷ்வ பிரம்ம ஸ்ரீ சு.கரிகரன் ஐயாவும் பூஜைகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்துவார். உதவி குருமார்களாக பிரேம ஸ்ரீ விவேக் ஐயா, சுரேஷ் ஐயா, ஜெயராஜ் ஐயா ஆகியோரும் செயல்படுவார்கள். தினமும் மாலை 6:00 மணி முதல் 6:30 வரை கூட்டுப் பிரார்த்தனை இடம்பெறும். கல்முனை -3 பண்ணிசை மன்றத்தினர் இதனை நடத்துவார்கள். இதேவேளை, இரவு ஆறு முப்பது முதல் ஏழு மணி வரை நற்சிந்தனை நடைபெறும். தீர்த்தோற்சவம் 24ஆம் திகதி நிறைவு பெற்றதும் அடியார்களின் உதவியுடன் அன்னதானம் வழங்கப்படும்.
இந்த மஹோற்சவ திருவிழாவின் சிறப்பான நிகழ்வாக எதிர்பார்க்கப்படும், யானைகள் முன்னே அணிவகுத்து செல்ல, முத்துச் சப்பரத்தில் விநாயகப் பெருமான் பவனி வரும் வீதி உலா எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் என ஆலய நிர்வாக சபையின் தலைவர் கிருஷ்ணபிள்ளை நாகராசா தெரிவித்தார்.