‘ஒரு சில சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாட்டின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை’ என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து எம்முடன் அவர் கலந்துரையாடினார்.
கே: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?
பதில்: ஆம், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நான் திருப்தி அடைகிறேன். நாம் கவனம் செலுத்தி தயார் செய்ய வேண்டிய சில விடயங்கள் உள்ளன. இருந்தபோதும், தற்போதைய நிலைமை குறித்து திருப்தியடைய முடியும். உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, ஓரிரு விடயங்களை வைத்துக் கொண்டு நாட்டின் பாதுகாப்பு ஒட்டுமொத்தமாக இல்லை என்று கூற முடியாது.
ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றபோதும், நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றபோதும் இந்த நாடு எப்படி இருந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பொதுநிர்வாகம் சரிந்தது, சட்டத்தின் ஆட்சி சரிந்தது. அந்த நிலையை மிகக் குறுகிய காலத்தில் மாற்ற முடிந்தது. நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
கே: அண்மைக் காலமாக கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நாட்டில் அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் பலவீனம் இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: நாட்டில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. அதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் அதிகபட்சமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். குறிப்பாக புலனாய்வு மட்டத்தில் பங்களிப்பு வழங்கப்படுகிறது. மேலும் விசேட அதிரடிப்படையினரும் அதற்கான பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று ஓரிரு சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பாதுகாப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது.
தமது மொத்த தேசிய உற்பத்தியில் 100 மடங்கு தொகையை தமது நாட்டின் பாதுகாப்பிற்காக செலவிடும் அபிவிருத்தியடைந்த நாடுகளும் உலகில் உள்ளன. அவ்வாறான நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால், அரசின் பலவீனம் மற்றும் திறமையின்மையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. எதிர்க்கட்சிகளின் அந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுவே இலங்கை அரசியலின் தன்மை. நமக்கிடையில் ஒற்றுமையில்லை.
சுனாமி தாக்கிய போது அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்ளத் தாயராகவா இருந்தோம்? இல்லை. வடக்கில் யுத்தம் நடந்தது, ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒன்றிணைந்து தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்களா? இல்லை, நாங்கள் பிளவுபட்டோம். 2019 இல் சஹ்ரானின் தீவிரவாதத் தாக்குதல்களால் மேலும் பிளவு விரிவடைந்தது. உலகளாவிய கொவிட் தொற்றுநோய் வந்து மக்களுக்கிடையிலான இடைவெளி மேலும் அதிகரித்தது. அதன் பின்னரான பொருளாதார நெருக்கடி சிக்கல்களை மேலும் அதிகரித்தது. இளைஞர் அரசியல் பிரதிநிதிகளாக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான சாதகமான இடத்திற்குச் செல்வோம் என நம்புகிறோம்.
கே: ஒரு இளம் அரசியல்வாதியாக, இந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற முயற்சிப்பதாகக் கூறியிருந்தீர்கள். இதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க விரும்புகின்றீர்கள்?
பதில்: உரையாடலில் இருந்தே இந்த வேலையை நாம் ஆரம்பிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் யாரையும் திருடன் என்று சொல்லவில்லை, யாரையும் பெயர் சொல்லி குற்றம் சாட்டவில்லை. நிகழ்நிலைக் காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது பாராளுமன்றத்திற்குள் நடக்கும் விவாதங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை அவதானமாகப் பேச வேண்டும் எனக் கூறினேன். அப்போது மூத்த அமைச்சர் ஒருவர் என்னைப் பாராட்டியிருந்தார். எந்தவொரு தரப்பினரையும் குற்றஞ்சாட்டாது சொல்ல வேண்டிய நியாயத்தை எடுத்துக் கூறியதை அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
இந்த விடயத்துக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பத்தை என்னால் கொடுக்க முடிந்தது.
கே: அபராதப் பணத்தை அறவிடுவது மற்றும் வரிகளை அதிகரிப்பது போன்றவற்றைத் தவிர வருவாயை அதிகரிக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையென ஜே.வி.பி குற்றம்சாட்டுகிறது. இதற்கு நீங்கள் எவ்வாறு பதில் வழங்குவீர்கள்?
பதில்: நாங்கள் பாடசாலையில் படிக்கும் போது ஜே.வி.பியின் நிகழ்வுகளை நான் நன்கு அறிவேன். நான் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை, குற்றச்சாட்டுகளைச் சொல்லப் போவதில்லை. ஆனால் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நம் நாடு இவ்வளவு விரைவில் மீண்டு வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சில முடிவுகளை எடுப்பது கடினம், ஆனால் வேறு எதுவும் செய்ய முடியாது. அப்போது வரி குறைப்பு என்று கூச்சல் போட்டார்கள், இப்போது வரி உயர்வு என்று கூச்சல் போடுகிறார்கள். உலகில் எந்தத் தலைவரும் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு மாறாக வரி விதிப்பதில்லை. ஆனால் வருமானம் வரவேண்டும்.
கே: எனினும் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனரே?
பதில்: நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான திட்டங்களை முன்வைப்பதே அவசியம். மேலும், நமது நாடு மிகவும் கனமான பொதுச்சேவையைக் கொண்டுள்ளது.
பல்கலைக்கழகம் செல்லும் வரை இலவசக் கல்வி உண்டு. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்ததும் அவர்களுக்கு அரச சேவை உள்ளது. மேலும் மக்களுக்கு இலவச சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் அரசு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் போதுமான நிதி இருக்க வேண்டும். ஒரு நாடாக, நாட்டிற்கு அதிக வருமான ஆதாரங்கள் இல்லை. இதுதான் உண்மை நிலை.
கே: நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதைப் பற்றி நீங்கள் கூற விரும்புவது என்ன?
பதில்: இது நம் நாட்டின் வேலை. இது நமது நாட்டின் உள்ளகப் பிரச்சினை. நமது நாட்டின் அரசியல் சாசனத்தில் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் சில வரம்புகள் உள்ளன. நாம் தெருவில் ஒரு தடியுடன் நடக்க முடியும், ஆனால் மற்றவரின் மூக்கின் கீழ் மட்டுமே அதனை நீட்ட முடியும். அதுதான் நாம் வரைந்த எல்லைக் கோடு. உலகில் 25 நாடுகளில் மட்டுமே இந்த வகையான கட்டுப்பாடுகள் இல்லை. அதற்கான விதிமுறையை நாங்கள் இப்போது பயன்படுத்தியுள்ளோம்.
கே: அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கூற முடியுமா?
பதில்: கட்சியின் கருத்து இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் எமது ஆதரவு யாருக்கு என்பதை கட்சி முடிவு செய்யும். ஆனால் கடந்த காலத்தில் இலங்கை எப்படி இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு நாளில் 16 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல நாட்களாக எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலை காணப்பட்டது. இந்த நிலைமையை மாற்றுவதற்கு தற்போதைய ஜனாதிபதியே தலைமைத்துவம் வழங்கினார்.