“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ், 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணிகள் மற்றும் விவசாய நில உரிமைகளை வழங்குவது, தமக்கென்று ஒரு அங்குல நிலம் கூட சொந்தமில்லாத உண்மையான இலங்கை விவசாயிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு நவீன புரட்சியின் ஆரம்பமாகக் குறிப்பிட முடியும் என ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்த கருத்துக்களை இங்கு தருகிறோம்.
2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. மிக முக்கியமான பரிந்துரைகளாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?
ஜனாதிபதி நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் வலுவான எதிர்காலத்துக்கான முன்னோடி என்ற கருப்பொருளுடன், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பல முன்மொழிவுகளை 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளார். அவற்றுள் நான் காணும் மிக முக்கியமாகக் காணுவது எமது நாட்டில் காணி உரிமையை இழந்த விவசாயிகளுக்கு இலவச காணி உரிமையை மீள வழங்குவதற்கான பிரேரணையாகும். அதில் பொருளாதார மற்றும் சமூக மதிப்பு ஏராளம் உள்ளது.
உறுமய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு வரலாற்றுக் கதை உள்ளது. அதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது நினைவுள்ளதா?
ஆம். நில உரிமை தொடர்பில் பேசும்போது முந்தைய மன்னர் காலத்துக்கே செல்ல வேண்டும். சிங்கள மன்னரது காலத்தில் நாட்டிலுள்ள அனைத்து நிலங்களுக்குமான உரிமை அரசருக்கே இருந்தது. அரசன் தனக்குச் சொந்தமான நிலங்களை தமக்குச் சேவையாற்றுவோரின் பணிகளின் தன்மைக்கேற்ப மக்களுக்கு பகிர்ந்தளித்தார். அவை சன்னஸ் எனும் பாத்திரம் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டன. பிரபுக்கள் மற்றும் மத ஸ்தலங்கள் மட்டுமே நிலத்தை தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்தன. சாதாரண மக்களுக்கு வாழ நிலம் கிடைத்தாலும், அதற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இக்காலத்தில் நிலம் மக்களிடம் பிணைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு நிலத்தின் உரிமை இருக்கவில்லை. காலனித்துவ காலத்தில் இந்த நிலைமை மேலும் சிக்கலானது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் தோட்டப் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கில் குறிப்பாக தோட்டங்களுக்காக ஆட்சியாளர்களுக்கு நிலம் தேவைப்பட்டது. இந்தக் காணிகளைப் பெறுவதற்காக 1897 இல் இலங்கைக் கழிவு நிலச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். நாடு முழுவதும் உள்ள கிராமப்புற நிலங்கள் ஆங்கிலேய அரசால் கையகப்படுத்தப்பட்டன.
நமது பூர்வீக நிலங்களை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு என்ன நடந்தது?
நல்லதொரு கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். 1935ம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு நிலத்தை அனுமதி பத்திரங்கள் ஊடாக பகுதிகளாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலாவது விவசாய அமைச்சராக இருந்தவர் டி.எஸ். சேனநாயக்கா. விவசாயக் குடியேற்றங்களின் ஊடாக காணி உரிமையை வழங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், நூறு ஆண்டுகள் கடந்தும், இந்த விவசாய நிலங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
100 ஆண்டுகளாக, காணி இல்லாத விவசாயிகளுக்கு காணி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதுதானே?
ஆம், அவ்வாறான வேலைத் திட்டங்கள் இருந்தன. என்றாலும் நிலையான மற்றும் முறையான வகையில் விவசாயிகளின் நவீன தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை. ஜய பூமி, ஸ்வர்ண பூமி போன்ற பல்வேறு பெயர்களில் காணிகளுக்கான உரிமைப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் அதன் மூலம் கிடைத்தது உரிமைகள் அல்ல. இதனால் விவசாயிகள் சிரமங்களுக்கு உள்ளானார்கள். 1970 களில், சிறிய அளவிலான விவசாயிகளுக்கு காணி வழங்குவதற்காக காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் எமது நாட்டின் விவசாயத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. அரிசியில் நாடு தன்னிறைவு அடைந்தது. என்றாலும் விவசாயிகளுக்கு சொந்த நில உரிமை இருந்திருந்தால் அது இன்னும் வெற்றிகரமாக இருந்திருக்கும்.
விவசாயிகள் முகம் கொடுத்த பிரச்சினைகள் என்ன?
தமக்கென்று உரிமை உள்ள காணிகள் இல்லாவிட்டால் எவரும் கடும் அழுத்தங்களுடனேயே இருப்பார்கள். அதிகமான சமூக அநீதிக்கு உள்ளாவார்கள். தமது காணிக்கான உரிமைப்பத்திரம் இல்லாமல், வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற அவர்களால் முடியாது. சூரியன் உதயமாவதையும், மறைவதையும் பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் எதிர்காலம் குறித்து மிகுந்த நிச்சயமற்ற நிலையில் தவித்தனர். எனவேதான் இந்த துரதிர்ஷ்டமான வரலாற்று நிகழ்விலிருந்து எமது விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் ஜனாதிபதி இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ள யோசனையை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் எனலாம்.
தற்போதைய ஜனாதிபதி இப்பிரச்சினையை தீர்க்க முன்வருவதற்கு முன் தேவையான நடவடிக்கைகளை எடுத்தாரா?
ஆம். அவர் 2001 முதல் 2004ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நமது நாட்டின் பிரதமராக இருந்தார். அந்தக் காலப்பகுதியில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். என்றாலும் சட்டரீதியான பிரச்சினை இருந்ததால் இவ்வேலைத்திட்டம் கைவிடப்பட்டது. அதே நேரம் 2004ஆம் ஆண்டு அரசாங்கம் மாறியது. இந்த வேலை திட்டமும் செயலிழந்து போனது.
மீண்டும் அது எவ்வாறு ஆரம்பிக்கப்படப் போகிறது?
ஜனாதிபதி 2022 ஜூன் 9ம் திகதி எமது நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் புரிந்து கொண்ட காரணத்தினால் கடந்த காலங்களில் எழுந்த சட்டப்பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி விவசாயிகளுக்கு அவர்களது காணிகளுக்கான உரிமையை மீண்டும் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன்படி, விவசாயிகளுக்கு காணி உரிமைப் பத்திரங்களை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவாகும்.
இதனூடாக எத்தனை குடும்பங்கள் நன்மை அடைகின்றன?
இருபது இலட்சம் விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் நன்மை அடைகின்றன. இது ஒரு நடுத்தர கால வேலைத்திட்டமாகும். இது ஓரிரு நாட்களில் செய்து முடிக்கக்கூடிய வேலை அல்ல. அனைத்து காணிகளும் அளவீடு செய்யப்பட வேண்டும். இது ஒரு பெரிய வேலை. இதற்காக இந்த ஆண்டு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
காணிகளுக்கு உரிமைப் பத்திரங்கள் கிடைத்தால் அதன்மூலம் இடம்பெறும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நன்மைகள் என்ன?
உண்மையாக கூறப்போனால் எவரேனும் ஒருவருக்கு தனது காணிக்கான உரிமை இருக்குமானால் அவர் அந்தக் காணியில் விவசாயத்தை, சிறிய தொழிற்சாலையை, ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு நினைப்பார். அவர் அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டுவார். அந்த வகையில் காணி உரிமைப் பத்திரங்களைப் பெறும் 20 இலட்சம் குடும்பங்களில் ஐந்து இலட்சம் குடும்பங்கள் சிறியளவில் வியாபாரத்தை, நெல் ஆலையை, தேநீர்க் கடையை, ஆடைகளைத் தைக்கும் நிலையத்தை ஆரம்பிக்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம். இது பொருளாதாரத்தில் சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும்.
ஒன்றுமே செய்யாமல் இருப்பதை விட இது பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு சிறிய உதவி அல்லது ஊக்கத்தை அளிக்கிறது. அதன் மூலம் கிராமத்தின் பொருளாதாரம் எழுச்சியடையும். இவ்வகையில் கிராம மட்டத்தில் ஒரு தனிமனிதன், குடும்பம் மற்றும் சமூகம் என்ற ரீதியில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பெரும் ஆற்றலை வழங்கும் வேலைத்திட்டம் என உறுமய திட்டத்தை குறிப்பிட முடியும். இத்திட்டம் ஆரம்பிப்பதை காலத்தின் தேவைக்குரிய முன்மொழிவாக, ஒரு வேலைத் திட்டமாக குறிப்பிட முடியும்.
ஜயசிறி முனசிங்க தமிழில் - எம். எஸ். முஸப்பிர்