இரண்டு நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் போது அவற்றை செய்திகளாக படித்துவிட்டு கடந்து செல்லும் சந்தர்ப்பம் அதிகமாக இருந்திருக்கும். அண்மையில் இலங்கை – தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. அதனையும் செய்தியாக மட்டும் படித்திருப்போம். அதில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது.
குறிப்பாக இன்று அனைவரும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நாடு என்ற வகையில் இலங்கையும் அதே நிலையில் தான் இருக்கிறது. அதனால், இந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களை அறிந்துகொள்வது, இலங்கையில் வர்த்தகத்துறையில் உள்ளவர்கள் தாய்லாந்து சந்தைக்குள் உள்நுழைவதற்கான முதல்படியாக இருக்கும்.
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்.
2048ஆம் ஆண்டில் இலங்கையை உயர் வருமானம் ஈட்டும் நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். பல்வகைப்படுத்தப்பட்ட ஏற்றுமதி, வர்த்தகச் சந்தைகளை விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க முடியும். ஏற்றுமதியை இலக்கு வைத்த நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்க்க வேண்டும். உயர் வருமானம் பெறும் நாடாக இலங்கையை மாற்றும் இலக்கை அடைய இந்த இரண்டு உபாயங்கள் முக்கியமானவை.
நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் சிறந்த முறையாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) இருக்கின்றன. இதில் அவதானம் செலுத்தி, தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் காணப்படும் பொருளாதார ஒருமைப்பாடுகளை வலுவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தியா, பங்களாதேஷ், சீனா ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தோனேசியா மற்றும் மலேசியாவுடனான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. பிராந்தியத்தின் பரந்துபட்ட பொருளாதார கூட்டமைப்பான RCEP இல் இணைவதற்காக கடிதத்தையும் இலங்கை சமர்ப்பித்துள்ளது. இந்த வரிசையில் தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அண்மையில் நிறைவுபெற்றன.
தாய்லாந்துடனான ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு திறக்கப்பட்டுள்ள தாய்லாந்து சந்தை!
* தாய்லாந்து வருடாந்தம் 495 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மொத்த தேசிய உற்பத்தியுடன் 71.6 மில்லியன் மக்கள் தொகையுடன் கூடிய பெரும் சந்தையைக் கொண்டுள்ளது.
* இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபையின் தகவல்களுக்கு அமைய, 58.82 (2022)பில்லியன் டொலர் முழுமையான ஏற்றுமதி பெறுமதியுடன் இலங்கையின் 37ஆவது ஏற்றுமதி நாடாகாவும் தாய்லாந்து விளங்குகிறது. இலங்கை, – தாய்லாந்துக்கு இடையில் ஆடை, தேயிலை, இறப்பர், தேங்காய், இரத்தினக் கற்கள், மின் சாதனப் பொருட்கள், கோதுமை மா மற்றும் கார்பன் ஆகியன முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக காணப்படுகின்றன.
* இவற்றில் தேயிலை, மிளகு, தேங்காய் எண்ணெய் என்பவற்றுக்கு தாய்லாந்து தீர்வை வரிக் கோட்டாவை விதித்துள்ள நிலையில் இவை இலங்கையின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாகக் காணப்படுகின்றன.
* பல துறைகளிலும் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்திக் கொள்வதால் இரு தரப்பினாலும் அபிவிருத்தி செய்யக்கூடிய பொருளாதார சாத்தியக்கூறுகள் மற்றும் நிரம்பல் பொருளாதார முறைமையை அறிந்துகொள்ள முடியும். இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு வர்த்தக பெறுமதியை 550 மில்லியின் அமெரிக்க டொலர்களிலிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) முக்கியமானதாக நோக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தை முன்னெடுப்பு
* தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் நலன்கள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் 2018 ஆம் ஆண்டு ஆய்வொன்றை முன்னெடுத்திருந்தது. சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களுக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் நாட்டின் சமூக நலன்புரிச் செயற்பாடுகளுக்கும் இருநாட்டு ஒப்பந்தம் வழிவகுக்குமென இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
* ஒரு தரப்பினால் மற்றைய தரப்பின் மீது விதிக்கப்படும் தீர்வை வரி குறைக்கப்படும் போது தாய்லாந்துக்கான இலங்கையின் ஏற்றுமதி 38% ஆகவும் இலங்கைக்கான தாய்லாந்தின் ஏற்றுமதி 27.8% ஆகவும் அதிகரிக்கும் என 2023 இல் இலங்கையின் கொள்கை ஆய்வு நிறுவனமான IPS எதிர்வுகூறியிருந்தது.
2018 ஜனவரி 16 ஆம் திகதி, தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
14 அத்தியாயங்களைக் கொண்ட மேற்படி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. அதன் முன்னேற்றங்களுக்கு அமைய, 2023 டிசம்பர் 08 முதல்- 10ஆம் திகதி வரையில் நடைபெற்ற 09 சுற்றுப் பேச்சுவார்த்தையுடன் சுதந்திர ஒப்பந்தத்திற்கான முன்னெடுப்பு நிறைவு செய்யப்பட்டது.
* உத்தேச இலங்கை, – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது விடயப்பரப்புக்கு அமைய பரந்துபட்டது. இந்த ஒப்பந்தம், பொருட்கள் வர்த்தகம், வர்த்தக சட்ட அனுமதி, சுகாதார மற்றும் மூலிகை சுகாதார செயன்முறைகள் (SPS), வர்த்தகத்துக்கான தொழில்நுட்பத் தடைகள் (TBT), வர்த்தகத் தீர்வுகள், சேவை வர்த்தகம், முதலீடுகள், சுங்கச் செயற்பாடுகள் மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்துக்களின் உரிமம், அடிப்படை ஏற்பாடுகள், நிறுவன மற்றும் இறுதி செய்யப்பட்ட ஒதுக்கீடுகள், ெவளிப்படைத் தன்மை மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் (CPTF) உள்ளிட்ட துறைகளை உள்வாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்கள் மற்றும் நன்மைகள்
1. சந்தை பிரவேசம் மற்றும் மூலப் பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்களைப் பெற்றுக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.
16 வருடங்களாக காணப்படும் தீர்வை வரி விலக்கு வேலைத் திட்டத்திற்கு தாய்லாந்து இணக்கம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய 15 வருட காலத்தில் பொருட்களுக்கு 80% (ஒருங்கமைக்கப்பட்ட வகைப்படுத்தல் குறியீடு) பொருட்களின் மீதான 5% தீர்வை வரிகள் மூன்று கட்டங்களாக வரிசை முறை அடிப்படையில் குறைக்கப்பட்டு, கட்டணத் தளர்வுத் திட்டத்தைச் செயல்படுத்தும் திகதியிலிருந்து 16ஆவது ஆண்டின் ஆரம்பத்தில் நீக்கப்படும்.
* இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஏனைய பொருட்களுக்கு 15% தீர்வை (ஒருங்கமைக்கப்பட்ட வகைப்படுத்தல் குறியீடு) தளர்வுகள் – மட்டுப்படுத்தல்கள் இன்றிக் காணப்படும்.
* இரு தரப்பினதும் சந்தைகளை ஒப்பிடும் போது, நன்மை அளிக்கக் கூடிய பொருட்கள், தீர்வை வரியுடனான பொருட்கள் மற்றும் உலகளாவிய ஒதுக்கீட்டின் கீழான தயாரிப்புகளை அறிந்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
* தீர்வை வரி இலகுபடுத்தல் திட்டத்தின் (TLP) துரிதப் பட்டியலின் (Fast track), கீழ் சிலோன் டீ மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திகள் உலகளாவிய ஒதுக்கீட்டிற்குள் வரியற்ற சந்தை அணுகலைப் பெற முடிந்தது. மேலும், தேசிய ஏற்றுமதியான கறுவா, தெரிவு செய்யப்பட்ட ஆடை உற்பத்திகள், மீன்பிடி உற்பத்தி, இறப்பர் சார்ந்த உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஆரம்பகட்டமாக தீர்வை வரி தளர்த்தப்படும்.
* இலங்கை 2022 ஆம் ஆண்டில் 292.68 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்கள் உட்பட இலங்கை-, தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இலங்கை உற்பத்தியாளர்களுக்கு தேவையான உள்ளீடுகளை போட்டி விலையில் பெறுவதற்கும், மூலப் பொருட்கள் மற்றும் இடைநிலைப் பொருட்கள் உட்பட தாய்லாந்து பொருட்களுக்கு முதன்மைச் சந்தை அணுகலினை (Early Market Access) வழங்கியுள்ளதோடு, உலக பெறுமதி வலையமைப்புக்குள் இலங்கை போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது.
2. தாய்லாந்து முதலீடு
* தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ASEAN மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டுகளை மேற்கொள்ளும் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. 2021 ஆம் ஆண்டில், தாய்லாந்தின் வெளிநாட்டு முதலீடு 17.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மேலும், தாய்லாந்து நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகின்றன. தாய்லாந்தின் முதலீடுகள், ஆசியான் சந்தையில் அதிகளவில் நுழைகின்றன. அத்துடன், பிராந்திய சந்தைக்கு அப்பாலும் பெருமளவில் நகர்கின்றன. நிதி மற்றும் காப்புறுதி, உணவு மற்றும் குளிர்பானம், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் மற்றும் சுரங்க அகழ்வு உள்ளிட்ட துறைகள் தாய்லாந்தின் முக்கியமான வெளிநாட்டு முதலீடுகளாகும்.
2005 – 2022 வரையான காலப்பகுதியில் இலங்கையில் தாய்லாந்து 92 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நேரடி முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. 600 வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ள 10 முதலீட்டு வேலைத் திட்டங்கள் தற்போதும் இலங்கைக்குள் செயற்பாட்டில் உள்ளன.
எனவே, இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
* மின்சாரம் மற்றும் இலத்திரனியல், வாகன உதிரிப் பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, ஆடை மற்றும் மருந்து உற்பத்தி மற்றும் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விநியோகம் ஆகிய உற்பத்தித் துறைகளில் தாய்லாந்து முதலீட்டை இலங்கைக்கு ஈர்க்க இலங்கை, -தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
* அதேபோன்று, இலங்கை, -தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இலங்கைக்கு பாரிய சந்தை வாய்ப்பைத் திறக்கவும், மூன்றாம் தரப்பு நாடுகளில் இருந்து இலங்கைக்கான முதலீடுகளை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
03. விதிக்கப்படும் விசேட விதிகள்
* பங்குதாரர் தேவைகள் மற்றும் ஏனைய காரணிகளைக் கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட மூல விதிகள் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களின்படி இரு நாடுகளும் பரஸ்பர சந்தைகளில் சந்தை பிரவேசத்தைப் பெறும்.
* இதன் மூலம் உலகளாவிய பெறுமதிச் சங்கிலியை ஊக்குவிக்கவும் மற்றும் போதிய செயலாக்கம் இன்றி மூன்றாம் தரப்பு நாட்டிலிருந்து இலங்கைக்குள் நுழையும் பொருட்களைக் கட்டுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
* வரிச் சலுகையின் கீழ் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்குத் தகுதிபெற மூன்றாம் தரப்பு நாட்டின் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 40 சதவீத தகுதிபெறும் பெறுமதி உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் ஒரு சில தயாரிப்புகளுக்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் தொடர்பிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தை இணைப்பதற்கான செயற்பாட்டில் இலங்கைக்கு கூடுதல் நன்மை பயக்கும்.
04. உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கட்டமைப்புக்குள் செய்யப்படும் சேவைகள் வர்த்தகத் தளர்வு.
சேவை வர்த்தகத்தின் தளர்வுபடுத்தல், தற்போதுள்ள ஒருதலைப்பட்ச தளர்வுபடுத்தலுடன் இணையாகும் வகையில் மற்றும் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கவும் உள்ளது.
* இந்நாட்டின் சேவைத் துறை தொடர்பான முதலீடுகளை எளிதாக்குவது தொடர்பான பகுதிகளைத் தவிர, நபர்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
05. ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
* இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு தாய்லாந்து சந்தையை எளிதாக அணுக இலங்கை, தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உதவுகிறது. வர்த்தகத்துக்கான தொழில்நுட்பத் தடைகளை நிவர்த்தி செய்து, இலங்கை ஏற்றுமதியாளர்கள், தாய்லாந்து தரநிலைகளுக்கு மிகவும் எளிதாக இணங்கிச் செல்லவும் வழியமைக்கிறது. அத்துடன், தரநிலைகள், தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் இணக்க மதிப்பீட்டு நடைமுறைகள் ஆகியவை தொடர்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இலங்கை, -தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
* மேலும், பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களுக்கான (MRAs) பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் இயலுமை மூலம் சோதனை மற்றும் உறுதிப்படுத்தல் செயல்முறைகளை மீண்டும் செய்ய வேண்டியதன் அவசியத்தை குறைக்கிறது. இதன்மூலம் இணக்க மதிப்பீட்டு நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன.
* லேபிள்கள் தொடர்பான நெகிழ்வுத் தன்மையை இலங்கை-, தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பேணுகிறது.
* தொழில்நுட்பக் கலந்துரையாடல்கள் மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க மற்றும் சரியான நேரத்தில் தீர்வுகளைப் பெற வழியமைக்கப்படுகிறது.
06. தொழில்நுட்ப, நிபுணர் உதவி மற்றும் விளக்கங்களை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு!
* இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட 11 துறைகளுக்கு, தாய்லாந்தின் தொழில்நுட்ப மற்றும் நிபுணர் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.
* வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாடு (ஏற்றுமதி மேம்பாடு உட்பட), உட்கட்டமைப்பு வசதிகள் (போக்குவரத்து மற்றும் துறைமுகத் துறை உட்பட), விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்துறை, மீன்பிடி, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள், சுற்றுலா, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் குறுகிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (MSMEகள்) நிதி ஒத்துழைப்பு, பொதியிடல் தொழில்துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT), மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை இதில் அடங்கும்.