நான் கல்வி பயிலும் பாடசாலையில் பல ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். அவர்கள் என்னுடனும் எனது பாடசாலை மாணவர்களுடனும் நல்ல முறையில் நடந்து கொள்கிறார்கள். எனது எதிர்காலக் கனவும் அவர்களைப் போன்று ஒரு நல்ல ஆசிரியையாக வரவேண்டும் என்பதே.
நான் ஆசிரியரானால் வெறுமனே பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுப்பவராக மாத்திரம் இல்லாமல் மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளையும் சொல்லிக் கொடுப்பேன்.
இனிய சுபாவம் கொண்டவராவும், வீண் விரயத்தை தவிர்த்து, எளிமையான சிறந்த பேச்சாளராகவும் நல்ல எழுத்தாளராகவும் மாணவர்களுடன் இரக்கமாக, கனிவாக பேசி மாணவர்கள் அதிகம் விரும்பும் ஆசிரியராக திகழ்வேன்.
பூமி தாயின் பொறுமை போல் நானும் அதுபோல பொறுமையின் சின்னமாய் எதிர்காலத்தில் திகழ வேண்டும் என்பதே எனது கனவு. மலை நல்வளங்களைக் கொண்டிருப்பதுடன் வெகு தொலைவில் உள்ளவர்களாலும் அறியப்பட்டிருக்குமாம். துலாக் கோல் என்பது தராசில் உள்ள சமன் ஊசி போல அது நிறை கூடினும் குறையினும் பொருட்களின் தன்மையை அறிய உதவும். அது நடுநிலை மறவாத நல்லியல்பினதே. எனவே, நானும் அவ்வாறு இருக்கவே ஆசைப்படுகிறேன்.
மாணவர்களுடன் மட்டுமல்ல எல்லோருடனும் அன்பாகப் பேசுவேன். எதனையும் தெளிவாக விளக்குவேன். மாணவர்கள் அடிக்கடி வினாக்களை வினவினாள் தளர்ந்து விடாமல் தெரியாதவற்றை சொல்லிக் கொடுப்பேன். மாணவர்கள் தவறு செய்யுமிடத்து பொறுமையுடன் தக்க புத்திமதிகளை சொல்லிக் கொடுப்பேன். வகுப்பில் வறிய மாணவர்கள் உணவின்றி பாடசாலை வந்திருந்தால் அவர்களுக்கு உணவளிப்பேன்.
படியாத மாணவர்களை அன்பால் அரவணைத்து, அவர்களை படிக்கும் மாணவர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை பெற்றோருக்கு உணர்த்துவேன். உயர்வு, தாழ்வு மனப்பான்மை அற்றவராக ஆசிரிய தொழிலின் உயரிய பண்புகளை கடைப்பிடித்து அனைவரும் புகழும் ஆசிரியராக செயற்படுவதே எனது இலட்சியமாகும்.
ஷஹ்லா ஷிஹார், அல் முபாரக் தேசிய பாடசாலை மல்வானை.