தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு தமிழ் கடும் போக்காளரான யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியரான இவர் கடந்த தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்றவராவார். அவரிடம் தோல்வி கண்டவர் தெற்கில் மிகவும் பரிச்சயமான எம்.ஏ.சுமந்திரன். தமிழ் மொழியில் மாத்திரம் பேசும் ஸ்ரீதரன் தெற்கில் மாவீரர் தினத்துடன் அறிமுகமானவர். தலைமைத்துவத்திற்கு நியமிக்கப்படட இவர் போராளிகளை நினைவுகூர்ந்து தனது கடமைகளை ஆரம்பித்தார். இவர் தெற்குக்கு கசப்பான தமிழர் பிரச்சினைகள் குறித்தே பேசுபவர். தமிழ் தேசியக் கடமையை தொடர்ந்து நிறைவேற்றுவதாக அவர் திருகோணமலையில் தெரிவித்திருந்தார். கட்சியின் செயலாளர் பதவிக்கு திருகோணமலையின் சண்முகம் சிவஞானம் நியமிக்கப்பட்டதை அடுத்து ஜனவரி 27 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம் பெரும் கூச்சல் குழப்பத்துடன் நிறைவடைந்தது. கடைசியில் தலைமைத்துவத்துக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த சுமந்திரன் கட்சியின் செயலாளராக வருவதற்கு எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
தமிழரசுக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் 327 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள். கட்சியின் தலைவர் பதவி வழமையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. கட்சி தலைமைத்துவத்திற்கான போட்டி நடைபெறும் தினத்தில் சுமந்திரன் கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் வேட்டி அணிந்தும் ஸ்ரீதரன் கோயிலுக்கும் சென்று வந்திருந்தனர். இருவருக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 49 ஆகும். மத்திய சபையின் வாக்குகள் கிறிஸ்தவம், இந்து என்ற அடிப்படையில் பிரிந்துள்ளது. கோத்திரம் மற்றும் சமயம் என்பன வடக்கு அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் சுமந்திரனையும் விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதன் இலங்கை தமிழ் காங்கிரசின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.டீ.பி தலைவர் டக்லஸ் தேவானந்தா ஆகியோர் அதிக வாக்குகளைப் பெற்றனர். தெற்கில் ஜனரஞ்சகமான வடக்கு தலைவர் ஒருவருக்கு வடக்கு, கிழக்கு சமுதாயத்தில் குறைந்த வரவேற்பேவுள்ளது. தமிழ் டயஸ் போராவுடன் அதிக தொடர்பு சுமந்திரனுக்கே உள்ளது. எனினும், தலைவர் தெரிவில் கூடிய ஆதரவு ஸ்ரீதரனுக்கே கிடைத்திருந்தது. அடுத்த விடயம் வடக்கு என்பது யாழ்ப்பாணம் மாத்திரம் அல்ல கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா என்பன இதில் அடங்குகின்றன. இதேவேளை வடக்கை அடிப்படையாகக் கொண்டு தனது அரசியலை விரிவு படுத்துவதற்கும் மலையகத்திலிருந்து வந்து வசிப்பவர்களின் உள்ளங்களை வெல்வதற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தல் மீதான இதன் தாக்கம்
2005 தொடக்கம் 2019 வரை ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் அல்லது அதன் ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளரே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா போன்றோர் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தனர். மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மில்லியன் வரையிலான வாக்குகள் கிடைத்திருந்தன. ஆறு இலட்சம் மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றார். சஜித் 11 இலட்சம் வாக்குகளைப் பெற்றார். அவருக்கு கிடைத்த மேலதிக வாக்குகள் ஒன்பது இலட்சம். 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. மற்றும் மஹிந்த ராஜபக் ஷ கூட்டணி வடக்கு கிழக்கில் 2,26,009 வாக்குகளைப் பெறும் போது ரணில் 4,44,230 வாக்குகளைப் பெற்றிருந்தார். இறுதி பெறுபேறுகளின் படி ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ. ஆதரவு பெற்ற மஹிந்த 1,80,000 மேலதிக வாக்குகுகளினால் வெற்றி பெற்றிருந்தார். கொழும்பு வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் கூட தாக்கத்தை ஏற்படுத்திய தேர்தல் பகிஷ்கரிப்பு இருந்திருக்காவிட்டால் இதில் ரணில் விக்கிரமசிங்க இவகுவாகவே வெற்றி பெற்றிருப்பார்.
2015இல் மைத்திரி வடக்கில் 4 இலட்சம் வாக்குகளையும் கிழக்கில் 6 இலட்சம் வாக்குகளையும் பெற்றார். 2005 இல் மஹிந்தவின் வெற்றியை உறுதி செய்த திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 2015இல் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தியது. 2019 இல் ரணில் விக்கிரமசிங்க அதிக கூட்டங்களுக்கு வடக்கு கிழக்கிற்கே சென்றிருந்தார். சஜித்தின் 55 இலட்சம் வாக்குகளில் 11 இலட்சம் வாக்குகள் வடக்கு கிழக்கில் இருந்து கிடைத்தவை ஆகும். ஐக்கிய தேசிய சிந்தனைகளை கொண்டிருக்கும் அணியொன்று ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டுமாயின் அது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெருமளவு மேலதிக வாக்குகளைப் பெறவேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்கு அத்தகய வாக்கு வங்கியே உள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதிக்கத்தின் கீழ் சுமார் ஆறு இலட்சம் வாக்குகள் உள்ளன. 2005 இல் மஹிந்த ராஜபக் ஷ ஜே.வி.பி. சார்பாக செயற்பட்டார். 2015இல் ஐ.தே.க. ஜே.வி.பி க்கு சாதகமாக செயற்பட்டது. தெற்கில் சஜித் 25 வீதம் பெறும்போது, வடக்கு கிழக்கில் 65 வீதம் பெற்றார். ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வடக்கு, கிழக்கு தலைவர்களுடன் ஒரு கௌரவமான நட்புறவை பேணிவந்தனர். இதன் பின்னனியில் வடக்கு கிழக்குக்கான மைத்திரிபாலவின் விஜயங்கள் சமூக வலைத்தளங்ளில் பரவலாக பேசப்பட்டன.
அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் சர்வதேச அமைப்புக்கள், தொண்டர் அமைப்புக்கள் என்பவற்றின் அழுத்தங்களும் மைத்திரியின் வாக்கு வங்கியை அதிகரித்தது. அதாவது வடக்கு கிழக்கு வாக்குகள் ஒட்டுமொத்தமாக ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த முகாம்களை சென்றடைந்தது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வடக்கு, கிழக்கில் கணிசமான பிரதிநிதித்துவத்தையும் பெற முடிந்தது.
கொழும்பு சமுதாயம், தெற்கு மக்கள் தூதரகங்கள் மற்றும் சிவில் சமூகம் என்பவற்றின் செல்வாக்கற்ற ஸ்ரீதரனின் தலைமைத்துவம் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் முன்னைய தேர்தல்களையும் விட ஒரு வித்தியாசமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். அதாவது வடக்கு, கிழக்கு வாக்குகள் ஒட்டுமொத்தமாக ஒருகுறிப்பிட்ட தரப்பினருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
சிவஞானம் ஸ்ரீதரன், மாவை சேனாதிராஜா தலைமையிலான சம்பிரதாய பெடரல் கருத்துக்கள். சுமந்திரன், ராசமாணிக்கம் தலைமையிலான புதிய லிபரல்வாதக் கருத்துக்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளக அதிகார மையத்தில் தோல்வி அடைந்துள்ளது.
எனவே, வடக்கு, கிழக்கு வாக்குகள் ஒட்டுமொத்தமாக தெற்கின் வேட்பாளரை நோக்கிச் செல்லாமல் நான்காகச் சிதறக்கூடிய நிலைமையே காணப்படுகின்றது. கடும் தமிழ் தேசியவாதக் கருத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீதரன் எதிர்க்கட்சியுடன் ஒற்றுமையாக அல்ல சில நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்படக்கூடும். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் அதிக நேரம் தமிழில் பேசுபவர். பொருளாதாரம் சம அந்தஸ்து, சமவுரிமை, சனநாயகம் என்பவற்றையும் விட தமிழ் தேசியம் என்ற அரசியலில் கடும் போக்காளராகவே செய்படுகின்றார். அவர் ஒரு முன்னாள் ஆசிரியருமாவார். இவரையும் விடக் கடும் தமிழ் போக்காளர்களான விக்ேனஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்ததுடன் இவருக்கு ஒரு கடுமையான போட்டி உள்ளது. இந்தப் போட்டியின் இறுதிக்கட்டம் வேட்பாளர் ஒருவருக்கு சாதகமான முறையில் ஓரு தேர்தல் பகிஷ்கரிப்பை நோக்கிச் செல்லலாம். அல்லது தமிழ் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறங்கலாம்.
2005 தொடக்கம் 2019 வரை ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு கிழக்கு வாக்குகள் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்புடனேயே இருந்தது. இதன் அடையாளமாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்து இதனை நிரூபித்து வருகின்றார். ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு வேறுபட்ட நிலைப்பாட்டில் நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன போன்ற சிங்கள தேசியவாத தலைவர்கள் மற்றும் தயா ரத்நாயக்க போன்ற ராணுவ தலைவரர்களை தமது அணியில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே. வி. பி தெற்கில் சிங்கள மக்களின் வாக்குகள் தொடர்பாக அதிக எதிர்பார்ப்புடன் உள்ளன.
வடக்கு ஐந்தாகவும் கிழக்கு எட்டாகவும் பிரிதல். வடக்கு தற்போது தெளிவாக ஐந்து தமிழ் அரசியல் முகாம்களாக பிரிந்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம். டக்ள்ஸ் தேவானந்தா, விக்னேஸ்வரன் மற்றும் அங்கஜன் ஆகியோரே அந்த 5 முகாம்களாகும். கிழக்கு முஸ்லிம் வாக்குகள் திருகோணமலை, கல்முனை, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது என ப் பிரிந்துள்ளன. தமிழ் அரசியல் முகாம் 3 பிரிவுகளாக பிரிந்துள்ளது.
2024இல் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு 13 பிரிவுகளாக பிரியும். யார் யாருடன் இணைவார்கள் என்பது கூற இயலாத ஒரு விடயமாகும். இது இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் மிகவும் சிக்கலானதோர் தேர்தலாகவே அமையும். 2005 (ரணில்) 2010 (பொன்சேகா) 2015 (மைத்திரி) 2019 (சஜித்) வருடங்களைப் போன்று வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமான வாக்குகள் இம்முறை தனி ஒருவருக்கு கிடைக்க மாட்டாது என்பது உறுதி. வாக்குகள் பிளவு படுவதும் உறுதி.
ரஜித் கீர்த்தி தென்னகோன