இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக 27 கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி, விரைவில் வர இருக்கும் மக்களவை தேர்தலை சந்திக்க தயாராகி வந்த நிலையில், இந்தியா கூட்டணி உடைந்து, இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தியா கூட்டணி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த இதுவே சரியான கூட்டணி என்றும் நம்பப்பட்டது.
மாநில கட்சிகள் அனைத்தும் ஆங்காங்கே செல்வாக்குப் பெற்றிருந்தாலும், துண்டு துண்டாக கிடந்ததால் அது பாரதிய ஜனதாவுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதால் பீகார் முதலமைச்சராக இருந்த நித்திஷ் குமார் எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார்.
இதற்காக ஊர் ஊராக சென்று எதிர்கட்சித் தலைவர்களை எல்லாம் சந்தித்துப் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தினார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உட்பட 27 கட்சிகள் அவரது முயற்சியால் ஒன்று பட்டன
பாட்னாவில் பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டணி பெங்களூரு கூட்டத்தில் சற்று தொய்வைச் சந்தித்தது. மும்பை கூட்டத்தில் காரசாரத்தை இழந்தது நான்காவதாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் சலசலப்புடன் பிளவு ஏற்பட்டு விட்டது.
கூட்டணி உடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியே முழுக்க முழுக்க காரணம் என்று கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் குற்றம் சுமத்துகின்றன. அண்மையில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டதால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. படுதோல்வியை சந்தித்த பிறகும் காங்கிரஸ் கட்சி விழித்துக் கொள்ளாமல் இருந்ததால் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சியின்மீது அதிருப்தியில் இருந்து வந்தன.
கூட்டணி பற்றியோ, தேர்தல் தொகுதி பங்கீடு பற்றியோ எதுவும் கவனத்தில் கொள்ளாமல் ராகுல் காந்தி தனது யாத்திரையிலேயே கவனம் செலுத்தினார். இதுவும் இந்தியா கூட்டணியில் முணுமுணுப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் மேற்குவங்கத்தில் ராகுல் காந்தி யாத்திரை சென்றபோது மரியாதைக்குக்கூட நான் வருகிறேன் என்று சொல்லாமல் புறக்கனித்ததாலும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாமலும் இருந்ததால் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் கூட்டணி இல்லை தனித்தே போட்டியிடுகிறோம் என்று அறிவித்தார்.
இவரைத் தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம். ஆத்மி கட்சியும் தனித்தே தேர்தலை சந்திப்பதாக அறிவித்தது. இது இந்தியா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நித்திஷ் குமாரை தேர்வு செய்வதில், ராகுல் காந்தியும் அலட்சியமாக இருந்தார். இந்தியா கூட்டணியில் நித்திஷ்குமார் எதிர்பார்த்த ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதுபற்றி ராகுல் காந்தி கவனத்தில் கொள்ளாமல் நடை பயணத்தை மேற்கொண்டதால் அவர் மேலும் விரக்தியடைந்தார்.
இதனால் இவருக்கு துணையாக இருந்த லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடனும் மோதல் ஏற்பட்டது. இந்தமோதலைக் காரணம் காட்டி இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து விட்டார் நித்திஷ் குமார். இது இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
நித்திஷ் குமாரைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியில் இருக்கும் சரத்பவார், அகிலேஷ் யாதவ். மம்தா பானர்ஜி ஆகியோரும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
இநிலையில் அரசியலில் யாருக்கும் நிரந்தரமாக கதவுகள் மூடப்படுவதில்லை. மூடப்பட்ட கதவுகள் நேரம் வரும் போது திறக்கப்படும் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி கூறியிருப்பதை அரசியல் விமர்சகர்களும் உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர்
எதிர்க்கட்சிகளே இல்லாமல் ஆட்சியமைக்க வேண்டும் என்ற பாரதிய ஜனதாவின் கனவை நனவாக்க இன்னும் என்னென்ன நாடகங்கள் அரங்கேற்றமாகுமோ என்று மற்ற கட்சிகளுக்கும் பயத்தை உண்டாக்கியுள்ளது. அதிகார பலத்தாலும், பண பலத்தாலும்எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.மக்களவை தேர்தலுக்குள் இன்னும் எத்தனை கட்சிகள் பாரதிய ஜனதாவுடன் இணையும் என்ற கவலையும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையும் பாஜக எதிர்ப்பாளர்களிடம் உருவாகியுள்ளது.
இந்தியா கூட்டணி பலமாகவே உள்ளது. ஆங்காங்கே சில தடைகள் உள்ளன. பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவதிலிருந்து பின்வாங்க மாட்டோம். என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் உறுதியாக தெரிவித்து வருகிறார். இந்த நிலை மாறக்கூடாது என்பது தான் பெரும்பாலான இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்தியா கூட்டணியை பலப்படுத்த ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் விரும்புவதையும் அவர் அவதானிக்க வேண்டும். வலிமையில்லாத கூட்டணியால் வெற்றி பெற முடியுமா? என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.
நடை பயணத்தால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. கருத்து முரண்பாடுகளைக் கலைத்து ஒருமித்த கருத்துடன் களத்தில் நின்றால் மட்டுமே, இந்தியா கூட்டணியால் வெற்றி பெற முடியும்.