நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. அரசியல், நகைச்சுவை திரைப்படமான இதை நடிகரும் இயக்குநருமான சாய் ராஜகோபால் இயக்குகிறார். சசி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் யோகி பாபு , ராஜேஸ்வரி, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். ஹெக்டர் தர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி சாய் ராஜகோபால் கூறியதாவது: சுமார் 70 படங்களில் கவுண்டமணி- செந்திலுக்காக நகைச்சுவை பகுதி எழுதி இருக்கிறேன். ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘கிச்சா வயசு 16’ படங்களை இயக்கி உள்ளேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’, அனைவரும் ரசிக்கக் கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படம். இதில் யோகிபாபு விரும்பி நடித்தார். கவுண்டமணி, யோகிபாபு வரும் காட்சிகள் காமெடியாக இருக்கும். கவுண்டமணியிடம் யோகிபாபு அடிவாங்கும் காட்சிகளும் ரசிக்கும் விதமாக இருக்கும். அரசியல் கட்சி சார்பாகத் தேர்தலில் நின்று ஒரு ஓட்டில் தோற்றுவிடும் கவுண்டமணி, பிறகு சுயேச்சையாக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யோகிபாபு போட்டியிடுவார். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பது கதை. சமகால அரசியலை நையாண்டி செய்யும் காட்சிகள் படத்தில் இருக்கும். நானும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். கவுண்டமணி இதுவரை பேசிய பரபரப்பான பன்ச் வசனங்களை வைத்து ஒரு புரமோஷனல் பாடலை உருவாக்கி இருக்கிறோம்.