உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த நாட்டுக்கென தேசிய கீதங்கள் அமைக்கப்பட்டு பாடப்பட்டு வருகின்றன. சுதந்திரம் கண்ட எமது இலங்கை திருநாட்டிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வருவது நாம் அறிந்தது.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி எமது நாடு கண்ட சுதந்திரத்தின் போது அமைக்கப்பட்ட இந்த தேசிய கீதம் ஏனைய நாடுகளின் தேசிய கீதத்திலும் அழகு மிக்கது, இனிமை வாய்ந்தது. அதன் இசை கேட்பதற்கு ஆசை தருவது.
எமது தேசிய கீதத்தில் எமது நாட்டின் வளங்கள், சிறப்புக்கள் யாவும் கூறப்படுகின்றன. இது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். இவற்றுக்கும் மேலாக நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும் எமது தேசிய கீதம் உணர்த்துகிறது. கருத்தாழம் நிறைந்த எமது தேசிய கீதத்துக்கு இலங்கையர் ஒவ்வொருவரும் மதிப்பு கொடுக்க வேண்டியது கடமையாகும்.
இப்படியாக பல சிறப்புகள் கொண்ட எமது தேசிய கீதத்தை ஆனந்த சமரக்கோன் அமைத்துக் கொடுத்தார். இதன்மூலம் அவர் இலங்கை வரலாற்றிலே முக்கிய இடம் பெறுகிறார். மக்களின் பாராட்டுக்குரியவராக மதிக்கப்படுகிறார். ஆனந்த சமரக்கோன் இந்தியாவின் ரவிந்திரநாத் தாகூரின் மாணவராக இருந்து பாடம் படித்து வந்துள்ளார்.
1939 இல் நாடு திரும்பிய அவர் உயர்கல்விப் பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அன்று நிதியமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆலோசனைக்கு ஏற்ப ஆனந்த சமரகோன் அமைத்த “நமோ நமோ மாதா” என்று தொடங்கும் தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து வந்த நான்காவது சுதந்திர தினத்தின் போது முதன் முதலாக கொழும்பு மியூசியஸ் கல்லூரி மாணவர்கள் இந்த தேசிய கீதத்தை பாடியிருக்கிறார்கள். அது இலங்கை வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
எமது தேசிய கீதம் சிங்களத்திலிருந்து, தமிழுக்கு மொழி பெயர்த்தவரான மு. நல்லதம்பிப் புலவர் வரலாற்றிலே முக்கிய இடம்பெறுகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற சுதந்திரதின விழாவின் போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட தேசிய கீதமும் உத்தியோகபூர்வமாக பாடப்பட்டதை இங்கு ஞாபகப்படுத்த முடியும். தொடர்ந்து வரும் சுதந்திர தின விழாக்களின் போதும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
எமது தேசிய கீதத்துக்கான இசையையும் ஆனந்த சமரக்கோன் அவர்களே அமைத்திருக்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட முடியும். நாட்டில் அவ்வப்போது நடைபெறும் விழாக்களின் போதும் அரசாங்க காரியாலயங்கள், பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகிய நிலையங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின் போதும் தேசிய கீதம் பாடப்பட்டு வருவது சிறப்புக்குரியதாகும். வானொலி தொலைக்காட்சி ஒலிபரப்புகளின் போதும் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
தேசிய கீதம் பாடப்படும் போது நாம் நேராக எழுந்து நின்று அதற்கு மரியாதை செய்ய வேண்டும். தேசபக்தியுடன் பாட வேண்டும். அல்லது கேட்க வேண்டும். நாம் அனைவரும் எமது நாட்டு தேசிய கீதத்தை மதிப்போம்.
தேசிய கீதம் எமது நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்பதை பெருமையுடன் கூறுவோம்.
எம்.ஏ. அத்தாஸ் - மாத்தறை