பாரதிய ஜனதா கட்சியின் பல ஆண்டுகால கனவை நிறைவேற்றி இருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகம் இந்தியா முழுவதும் ஒரு அரசு விழாவைப் போல ஒளிபரப்பு செய்யப்பட்டு, பா.ஜ.கவின் செல்வாக்கை உச்சத்தில் உயர்த்தி இருக்கிறது.
இந்தியாவில் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த உலகிலும் வாழ்கின்ற இந்துக்களும் இராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை உற்றுநோக்கும்படியாக கடந்த பல மாதங்களாக தீவிர பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள் இராமர் கோயில் திறப்புவிழாவை தங்களது நாட்டில் நடைபெற்ற விழாவாகவே எடுத்துக் கொண்டனர்.
வடஇந்தியாவில் இது தனியார் நிகழ்ச்சி போல அமைந்திருக்கவில்லை; அரசியல் விழாபோலத்தான் அமைந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் விசனம் தெரிவித்திருந்தன. ஆனால் வழக்கம் போல எதிர்க்கட்சிகளின் குரலுக்கு பா.ஜ.க எந்தவிதமான மதிப்பையும் வழங்கப் போவதில்லை. எதிர்வினை ஆற்றப் போவதுமில்லை. தங்களது இலக்கை அடையும் வரை இந்த விவாதங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கப் போவதில்லை. ஏனெனில் இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் நிலைமை பலவீனமாகவே உள்ளது.
யார் என்ன சொன்னாலும், நீண்ட கால வாக்குறுதியை பா.ஜ.க நிறைவேற்றி முடித்துள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இந்த எண்ணம்தான் தற்போது உள்ளது. ஆகவே, அந்தக் கட்சியின் தொண்டர்களைத் தாண்டி, வடநாட்டில் உள்ள இராம பக்தர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த உற்சாகத்தை வைத்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 ஆசனங்கள் வரை கைப்பற்றுவதற்கு பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது இராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வானது அறுதிப்பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளதாகத் தேர்தல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஆனால் பா.ஜ.க நினைப்பதைப் போல் 50 வீதமான வாக்குகளைப் பெறுவது என்பது சாதாரணமானதல்ல என்றும் சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“இந்த உண்மையை பா.ஜ.க உணராமல் இல்லை. அவர்கள் அதைத் தைரியமாக நம்புவதற்குக் காரணம், அக்கட்சி பலமாக உள்ளது என்பதல்ல; காங்கிரஸ் கட்சி உட்பட இந்தியாவில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளன என்பதால்தான் பா.ஜ.க இத்தனை நம்பிக்ைகயுடன் உள்ளது” என்கிறார்கள் அவர்கள்.
1984 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரேயொருமுறைதான் காங்கிரஸ் 400 ஆசனங்களைத் தாண்டியது. அதுவும் இயற்கையாக நடந்த வெற்றியல்ல. அப்போது இந்திரா காந்தியின் படுகொலை நாட்டையே உலுக்கியது. அதில் உருவான அனுதாப அலையின் விளைவாக காங்கிரஸ் இந்த உயரத்திற்குச் சென்றது.
அத்தேர்தலில் காங்கிரஸ் தனது தனிப்பட்ட சாதனையாக 48.1% வாக்குகளைப் பெற்றது. அதற்கு ஒரே காரணம் அனுதாப அலை என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.
பா.ஜ.க நாடு முழுவதும் வியாபித்துள்ள ஒரு பெரும் கட்சியென்று கூற முடியாது. பல அரசியல் விமர்சகர்கள், தேர்தல் வியூக நிபுணர்கள், எதிர்க்கட்சியினர் பா.ஜ.கவை வடஇந்தியக் கட்சியாகவே எடைபோடுகிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 303 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது.
இம்முறை பா.ஜ.கவுக்கு எதிர்வரும் தேர்தலில் இராமர் கோயில் திறப்பு விழா சில சாதகமான சூழல்களை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. அதாவது தொழில்வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மாநிலக் கட்சி எம்.பிக்களுக்கு எதிரான மனநிலை, மத்திய அரசுக்கு எதிராக இருந்துவந்த மனநிலையை இந்த இராமர் விழா நடுநிலையாக்கி இருக்கிறது என்பதே உண்மை. அது பா.ஜ.கவுக்குப் பெரிய பலம்.
இதைப் போன்று ‘ஹிந்தி பெல்ட்’ இல் உள்ள மற்றைய மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் பா.ஜ.க தனது இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை இந்த இராமர் நிகழ்வு மேம்படுத்தி உள்ளதென்றுதான் கூற வேண்டும்.
பீகார் மாநிலம் மட்டுமல்லாமல் பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சிகள் சில வெளியேறியுள்ளதால், இந்த 2024 தேர்தலில் பா.ஜ.க கூடுதலான இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை அளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில், பா.ஜ.க மொத்தம் 435 இடங்களில் போட்டியிட்டது. அது இந்த முறை 475- தொடக்கம் 500 வரை உயரலாம் என்கிறார்கள் தேர்தல் வியூகம் வகுப்பவர்கள்.
இதன் மூலம் கட்சியின் வாக்கு சதவீதம் நாடு முழுவதும் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. வாக்கு சதவீதத்துடன் வேட்பாளர் எண்ணிக்கையையும் இது அக்கட்சிக்கும் வழங்கும் என்றே சொல்லலாம்.
மேலும் இந்த முறை தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) உடனான பா.ஜ.க கூட்டணி, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து முன்பைவிட பா.ஜ.கவுக்குக் கூடுதல் இடங்களைப் பெற்றுத் தரும் என்று இந்திய தேர்தல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இன்றைய கருத்துக் கணிப்புகளின்படி பார்க்கும் போது, பா.ஜ.க தனது பழைய 303 எண்ணிக்கையை எளிமையாக எட்டிவிடலாம் என நம்புகிறது. அதற்கு இராமர் கோயில்தான் வழி ஏற்படுத்தித் தந்துள்ளது.
அப்படி என்றால் பழைய இடங்களை விட பா.ஜ.கவுக்கு இந்தக் கூடுதலான 38 இடங்கள் எங்கு கிடைக்கும்? அசாம் (1), சத்தீஸ்கர் (2), கோவா (1), ஜார்கண்ட் (2), கேரளா (1), மகாராஷ்டிரா (1), மத்திய பிரதேசம் (1), ஒடிசா (6), தெலுங்கானா ( 1), உத்தரப் பிரதேசம் (8), யூனியன் பிரதேசங்கள் (2), மேற்கு வங்கம் (12) ஆகிய மாநிலங்களிலிருந்துதான் அந்த இடங்களை பா.ஜ.க பெறவுள்ளதாகக் கருத்து கூறுகிறார்கள் தேர்தல் நோக்குனர்கள்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பி.ஜே.டியை ஆதரிக்கும் வாக்காளர்கள் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பார்கள் என்று பா.ஜ.க நம்புகிறது. 2019 இல் ஒடிசாவில் பி.ஜே.டி 12 இடங்களையும், பி.ஜே.பி 8 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் வென்றன. மூன்று இடங்களில் பி.ஜே.பி 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அடுத்து இந்தியா கூட்டணியிலிருந்து இடதுசாரிக் கட்சிகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் போக்குகள் பா.ஜ.கவைப் பலமடையை வைக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.
ஆகவே, இப்போதைய அரசியல் கணிப்பாளர்களின் கணக்குப்படி பா.ஜ.க 370 இடங்கள் வரை உயரக் கூடும். அது 400 ஐ தாண்டுவதற்குக் கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் வலிமையான கூட்டணிக் கட்சிகளை அரவணைக்க வேண்டும். நவீன் பட்நாயக்கின் கட்சி, ஜெகன் ரெட்டி கட்சி ஆகியவை கடந்தகால மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. அவை மூலம் இந்த முறை பா.ஜ.க தன் செல்வாக்கைக் கூட்டிக் கொள்ள முயற்சிக்கும். பா.ஜ.கவின் இந்த இலக்கு சாத்தியமாகுமா? அதற்கு விடை கிடைக்கவேண்டும் என்றால் அரசியல் விளையாட்டில் கடைசி நேரம் வரை காத்திருக்கவேண்டும்.
இராமர் கோயில் திறப்பு விழாவைப் பொறுத்தவரை, அதனை ஒரு ஆன்மீக நிகழ்வாக வட இந்தியா பார்க்கிறது. அரசியல் நிகழ்வாக தென்இந்தியா பார்க்கிறது. ஆகவே வடஇந்திய அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் விதமும் தென்னிந்திய அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் விதமும் மாறுபட்டுத்தான் இருக்கின்றன. இராமர் கோயில் நிகழ்வு இந்திய அரசியலை ஒரு புதிய சிக்கலான கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது.
முஸ்லிம் லீக், இடதுசாரிகளைத் தவிர மற்றைய எல்லாக் கட்சியினருமே பா.ஜ.கவைவிட தாங்கள்தான் உண்மையான இந்து என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலான கட்சிகள் இன்று ஏதோ ஒரு கோயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது இந்திய அரசியல் ஒரு முக்கியமான, சிக்கலான காலகட்டத்தில் இருப்தைக் காட்டுகிறது.
எஸ்.சாரங்கன்