Home » இலங்கை கிரிக்கெட்டும் யாப்பு மாற்றமும்

இலங்கை கிரிக்கெட்டும் யாப்பு மாற்றமும்

by Damith Pushpika
January 28, 2024 6:00 am 0 comment

இலங்கை கிரிக்கெட் யாப்பை மாற்ற வேண்டும் என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து. இலங்கை கிரிக்கெட்டில் இருக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தொடக்கம் மைதானத்தில் சந்திக்கும் தோல்விகள் வரை அனைத்தையும் சரி செய்வதற்கு முதலில் யாப்பை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் கூற்று.

யாப்பு மாற்றம் பற்றிய கதை பல தசாப்தங்கள் பழையது. என்றாலும் கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தப் பேச்சு வலுப்பெற்று இலங்கை கிரிக்கெட் மீதான சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலின் தடையுடன் தீவிரம் பெற்றிருக்கிறது.

பதவிக்கு வருகின்ற விளையாட்டுத்துறை அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஏன் சில நேரங்களில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகங்கள் கூட யாப்பை மாற்ற வேண்டும் என்று வாயளவில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முன்னாள் அணித் தலைவர் மைக்கல் திசேரா மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் முத்தைய முரளிதரன் இது தொடர்பில் நீதிமன்றம் வரை சென்றார்கள்.

சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் ஆலோசனையை பெற்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்காக புதிய யாப்பு ஒன்றை தயாரிப்பதாக 2022 டிசம்பரில் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தார்.

என்றாலும் குழுக்கள் அமைப்பதும், யாப்பு வரைவுகள் முன்வைக்கப்படுவதும் முடிந்ததாகத் தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய யாப்பை வரைவதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தக் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான குவேரா டி சொய்ஸா, நவீன் மாரப்பன மற்றும் சட்டத்தரணிகளான சந்திமால் மெண்டிஸ் மற்றும் பந்துல கீர்த்திரத்னவுடன் சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலால் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசகர் ஒருவரும் உள்ளக்கப்பட்டிருக்கிறார்.

இந்த குழு தமது முன்மொழிவுகளை முதலில் ஐ.சி.சி. மீளாய்வுக்கு அனுப்பி அதன் பரிந்துரைகள் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அங்கத்தவர்களால் யாப்பை நிறைவேற்ற எதிர்பார்க்கிறது.

நியமிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய குழுவின் நோக்கமும் வழக்கமானது தான். இலங்கை கிரிக்கெட்டின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்துவது பிரதான நோக்கம் என்பதோடு நிதிகளை தனிப்பட்ட விருப்பு மற்றும் நலன்களுக்கு அப்பால் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது பிரதானமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

என்றாலும் இலங்கை கிரிக்கெட் யாப்பு மாற்ற முயற்சி என்பது ஒரு கட்டத்திற்கு மேல் நகர்வதாக தெரியவில்லை.

அண்மையில் தான் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்ரசிறி இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு வரைவு ஒன்றை பூர்த்தி செய்திருந்தார்.

அந்த யாப்பு வரைவில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை, சபை நிர்வாகத்தில் அதிக தொழில்முறையாளர்களை உள்ளடக்குவது, வாக்களிக்கும் முறையில் மாற்றங்கள் செய்வது ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையிலான குழுவின் இந்த யாப்பு வரைவு, பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் நிறைவேற்றப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதில் அரசு மற்றும் எதிர்க்கட்சி இரு தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.

குறிப்பாக இலங்கை கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவும், கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று உறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறது.

எனினும் ஹரீன் பெர்னாண்டோ புதிய குழு ஒன்றை நியமித்திருப்பதாக வெளியான செய்தி சித்ரசிறி குழுவின் நகல் யாப்பை செல்லுபடியற்றதாக்கும் ஒன்றாகவே இருக்கும். யாப்பு வரைவு என்ற பேச்சு மீண்டும் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

என்றாலும் இலங்கை கிரிக்கெட் யாப்பு மாற்றத்திற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. பல தரப்புகளும் யாப்புத் திருந்தங்கள் பற்றிய நகல்களை முன்வைத்திருக்கின்றன.

குறிப்பாக முன்னாள் இலங்கை வீரர் சிதத் வெத்தமுனி யாப்பு மாற்றம் பற்றி அடிக்கடி பேசி வருகிறார். 2015இல் அவர் இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபை தலைவராக இருந்தபோது கூட யாப்பு வரைவு ஒன்றை முன்வைத்திருந்தார்.

அதிலும் இலங்கை கிரிக்கெட் உறுப்பினர்களில் ஒப்புதலால் அன்றி பாராளுமன்ற சட்டம் ஒன்றினாலேயே யாப்பை மாற்ற வேண்டும் என்கிறார் வெத்தமுனி.

“உறுப்பினர்களால் அன்றி பாராளுமன்றத்தின் சட்டத்தின் மூலம் யாப்பை மாற்றுவதுதான் இலங்கை கிரிக்கெட்டுக்கு இருக்கும் ஒரே வழி, ஏனெனில் (உறுப்பினர்கள் மூலம்) தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒருபோதும் பெற முடியாது” என்கிறார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் பற்றி குறை கூறுபவர்கள், அதன் வாக்களிப்பு முறை மற்றும் நிதியை கையாளும் முறை பற்றியே பெரிதாக பேசுகிறார்கள். அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழு கூட வாக்களர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பரிந்துரைக்கிறது.

தற்போது இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை தேர்வு செய்வதற்கு 147 வாக்குகள் உள்ளன. என்றாலும் அது சர்வதேச தரத்துக்கு குறைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான பரிந்துரை.

குறிப்பாக அவுஸ்திரேலியாவில் வாக்குரிமை எண்ணிக்கை வெறும் ஆறு என்பதோடு பாகிஸ்தானில் கூட அது 17 ஆகத் தான் இருக்கிறது. 1.408 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலும் 38 வாக்குகள் தான் இருக்கின்றன.

சாதாரண அரசியல் மட்டத்திலான தேர்தல்களில் அனைவருக்கும் வாக்குரிமை இருக்க வேண்டும் என்ற கோட்பாடு இப்படியான நிர்வாகத் தேர்தல்களுக்கு பொருந்தாது. அங்கே வாக்காளர்கள் கூடக் கூட அவர்களை திருப்திப்படுத்த வேண்டி தேவை கூடுகிறது.

அதாவது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கும் விளையாட்டு சங்கங்கள், பிரதிநிதிகளை வளைத்துப்போடவும் அவர்களை திருப்திப்படுத்தவும் ஓட்டுக் கேட்கும் தரப்பு தாம் வந்த வேலைக்கு அப்பால் வேறு வேலைகளை செய்ய வேண்டி ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரமே நிர்வாகத்திற்கு வர முடியும்.

இது தான் இலங்கை கிரிக்கெட் முகம்கொடுக்கும் பிரச்சினைகளின் ஆரம்பப் புள்ளி என்பது சீர்திருத்தங்களை எதிர்பார்க்கும் தரப்பின் கூற்று.

நாட்டின் கழகமட்ட கிரிக்கெட் முறைமை மற்றும் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் நீடித்து வரும் பழைமையான கிரிக்கெட் சபை வாக்களிப்பு முறை இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய அவல நிலைக்கு காரணம் என்று வெத்தமுனி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இலங்கையில் இருக்கும் மாகாணங்களின் எண்ணிக்கை 9 தான். ஆனால் கிரிக்கெட் சபை தேர்தலில் 147 வாக்குகள் உள்ளன. அதிகாரம் மிக்க கிரிக்கெட் கழகங்கள் என்று கருதப்படும் பிரபலமான எஸ்.எஸ்.சி., என்.சி.சி., ப்ளும்பீல்ட், தமிழ் யூனியன் மற்றும் கோல்ட்ஸ் கழகங்களுக்கு தலா 2 வாக்குகள் உள்ளன.

ஆனால் முதல்தர போட்டிகளில் கூட ஆடாத, பெயரளவில் மாத்திரம் இருக்கும் கிரிக்கெட் கழகங்களுக்கும் இரண்டு வாக்குகள் உள்ளன. ஊர் பேர் தெரியாத அந்தக் கழகங்களும் பிரபல கழகங்களும் நிர்வாகத் தேர்வு என்று வரும்போது சரிசமமாக பார்க்கப்படுவது ஒரு பக்கம் சமத்துவம் என்று குறிப்பிட முடியாது.

இது குறிப்பிட்ட தரப்புகள் மாத்திரமே கிரிக்கெட் நிர்வாகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த மாத்திரமே வழிவகுக்கும்.

மற்றது இலங்கை கிரிக்கெட் நிதி விவகாரம் பெரும் குழப்பத்திற்குரியது. முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இலங்கையின் ஏனைய விளையாட்டுடன் கிரிக்கெட் நிர்வாகத்தை ஒப்பிட முடியாது. அது நாட்டில் இருக்கும் மிகச் செல்வந்த விளையாட்டு நிர்வாகம். அதன் சொத்துகள் இலங்கை ரூபாவில் அன்றி அமெரிக்க டொலர்களில் மதிப்பிட முடியுமானது. அப்பேர்ப்பட்ட கிரிக்கெட் நிர்வாகத்தின் நிதியை கையாள்வதை முறைப்படுத்துவது என்பது மற்றொரு முக்கிய தேவையாக இருக்கிறது.

இதற்கு புதிய யாப்பு ஒன்றை கொண்டுவருவது முக்கியம்.

ஆனால் தற்போதைய போக்கை பார்த்தால் அதனை கொண்டுவருவது நினைத்த அளவு இலகுவானதாக தெரியவில்லை.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division