அமாவாசையை கடந்த இரண்டாம் நாள் கும்மிருட்டு. ஊரடங்கிய நிசப்தத்தில் ஒப்பாரிச் சத்தம் மூன்று தெருவை கடந்து வீடுவரை கேட்டது. சாமமாகியும் ஒருகண் தூக்கமின்றி புரண்டுகொண்டிருந்தேன். பக்கத்தில் தம்பி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே மரணவீடுகளில் பாடும் ஒப்பாரியை கேட்டால் பேப்பயம் என்னை ஆட்கொண்டு விடும். அம்மாவை கெட்டியாக் கட்டிப் பிடித்துக் கொண்டு தான் தூங்குவேன். ஆனால் அன்றைக்கு அம்மாவும் வீட்டில் இல்லை. அப்பாவும் அம்மாவும் மரணவீட்டில் இழவு காக்க போய்விட்டார்கள். செத்துப் போனவர் அப்பாவின் தமக்கை மகளை கட்டியதால் எனக்கு அண்ணன் முறை. முப்பத்தாறு வயது. பாவம் இதற்கு மேல் வாழக் கொடுத்து வைக்கவில்லை போல. யாரோ செய்வினை வச்சுக் கொன்றுவிட்டதாக ஊருக்குள் அரசல் புரசலாக பேசிக்கொண்டார்கள். படுக்கையில் அந்தக் கதைகள் நினைவிற்கு வரும் போதெல்லாம் நெஞ்சு ஓங்கியோங்கி அடித்துக் கொண்டது. மூச்செடுக்கவே கடினமாக இருந்தது.
“ஐயோ… ஐயோ… என்மகனே…” என தொண்டை நரம்புகள் புடைக்க பாடும் ஒப்பாரிக் கலைஞர்களின் இழுவை அசரீரியாக என் காதுகளில் வந்தறைந்த சாமத்தில் அங்கே இரண்டு அதிவிசேசங்கள் காலியாகியிருக்கலாம்.
ஏன் இப்படி பேய்க்குப் பயம் காட்டுவது போல கூச்சலிடுகிறார்கள்? கொஞ்சம் அடக்கமாக பாடினால்தான் என்ன? இதையெல்லாம் சொல்ல இந்த ஊரிலே பெரிய மனுசர் யாரும் இல்லையா? என்று எனக்குள்ளே நியாயமற்ற கேள்விகள் எழுவது இப்போது ஒன்றும் புதிதல்ல.
ஊரில் உள்ள அத்தனை தெருநாய்களும் சேர்ந்து குரைத்து கூப்பாடு போடுவதும் ஊளையிடுவதுமாக பீதியை கிளப்பத் தொடங்கின. கைபேசியை உயிர்ப்பித்தேன். கடிகாரம் பன்னிரண்டு மணியைக் காட்டியது. ராத்திரி வேளைகளில் மீன்சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பத்துப் பதினைந்து தெருநாய்கள் தான் எப்போதும் போல அன்றைக்கும் ஊளையிட்டு தொடக்கி வைத்தன. அவற்றுக்கு பதில் சொல்வது போலவே ஊரின் ஒவ்வொரு சந்தியிலிருந்தும் நாய்களின் ஊளைச் சத்தம் எழும்பியது. ஒப்பாரிச் சத்தமும் ஊளைச் சத்தமும் சேர்ந்து இரவின் அமைதியை சில்லுசில்லாக நொறுக்கிப் போட்டது. ஒரு அஞ்சலோட்டம் போல ஊளைச் சத்தம் சந்திக்குச் சந்தி பரிமாற்றப்பட்டு கடைசியாக சேமக்காலை அமைந்திருக்கும் திசையிலிருந்து எழும்பிய நாய்களின் பேரோலத்தோடு அடங்கிப்போக சாமம் ஒருமணியையும் தாண்டியது.
இது தினமும் நடந்தால் சாதரணமாக கடந்து விடலாம். ஊரில் எவராவது இறந்தால் மட்டும் தானே இப்படி நடக்கிறது. அதிலும் அவலச் சாவுகளென்றால் சொல்லவே வேண்டாம். ஊர்ப்பெரியவர்கள் சொல்வது போலவே ஆவிகளின் நடமாட்டம் நாய்களின் கண்களுக்கு புலப்படும் என்பது உண்மைதான் போல! என நினைத்து நானே என் மனதில் கனன்றெழும் பயத்துக்கு நெய்வார்ப்பதும், இல்லையில்லை பேய் பிசாசு ஆவியெல்லாம் வெறும் கட்டுக்கதை, மனப்பிரமையென்று கூறி அதை அணைப்பதுமான போராட்டத்தின் பின் பெரும் முயற்சியெடுத்து தூக்கத்தை வரவளைத்தாலும், பாம்புகளும் பேய்களுமாடும் பயங்கரமான கனவுகளெல்லாம் வந்து தூக்கத்தில் கல்லெறிந்தன. அவ்வப்போது சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த அன்ரனி அண்ணனின் ஊதிக் கறுத்த உருவமும் கண்முன்னே வந்து கிலியூட்டியது.
நான் படுக்கையிலிருந்து எழுந்திருக்க ஒன்பது மணியாகியிருந்தது. குளித்து விட்டு செத்தவீட்டுப் பக்கம் போனேன். உள்ளே நுழையும் போதே நெஞ்சு கிடந்து அடிக்கத் தொடங்கியது. இறால் கொம்பனியில் இரவு பகலாக வேலைசெய்து உழைத்த காசை இறைத்து, பார்த்துப் பார்த்து கட்டிய புது வீடு. நிலை கதவுகளெல்லாம் வன்னித் தேக்கில் செய்யப்பட்டிருந்தன. குடிபுகுந்து ஜந்து மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை. அகன்ற விறாந்தையில் விலையுயர்ந்த சவப்பெட்டியில் அன்ரனி அண்ணனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. சூழவும் வயதான பெண்கள் நின்று அழுது மூக்குச் சிந்தினார்கள்.
சவப்பெட்டியின் வலது பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் நிசா மச்சி கழுத்தை தொங்கப் போட்ட படி இருந்தாள். கண்ணீரால் கழுவிய முகம் காய்ந்து ஒடுங்கி சோபை இழந்து கிடந்தது. மைக்கல் அஞ்சலோவின் ‘பியாட்டோ’ சிற்பத்தின் மனதை உருக்கும் வியாகுலம் அவளின் முகத்தில் அப்பிக் கிடந்தது. சிக்காடிய தலையோடு வாய்க்குள் எதையோ முணுமுணுத்தபடி அவள் ‘ விசரி மாதிரி’ உட்கார்ந்திருப்பதை சகிக்க ஆற்றாமையால் அவள் பக்கம் திரும்புவதை தவிர்த்துக் கொண்டு நின்றேன். மூன்றே வயதான ஆதன் தந்தையின் பிணத்தின் முன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
பிணத்தை கடவுளுக்கும் சற்றே குறைவாக புகழ்ந்து பேசுவது மரணச் சடங்குகளில் சகஜமான ஒன்று தானே! அங்குமிங்குமாக கூடிக்கூடியிருந்து அன்ரனி அண்ணனை பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் இளவட்டுகள் இருந்த மாமரத்து பக்கமாக நானும் ஒதுங்கினேன். வட்டமாக போடப்பட்ட கதிரைகளை சற்று அரக்கி என்னையும் உள்வாங்கிக் கொண்டனர். கதைப்பூதங்கள் என்னை விழுங்கக் காத்திருந்தன.
“நெருங்கின சொந்தக்காரங்கதான் ஆரோ செய்வினை செஞ்சதாம்” என்றான் வினோ.
“அதெல்லாம் நம்மட சனத்தட கட்டுக்கதை” என்று வலுவாக ஒரு குரல் மறுத்தது. வேறு யாராக இருக்கும் அனோஜன் தான். வினோ என்ன சொன்னாலும் அதற்கு எதிர்க்கருத்து வைத்திருப்பான்.
“ஒரு பாதரட்ட போய் செபிச்ச இடத்தில அப்பிடி தான் சொன்னவராம். ஏதோ வித்தியாசமா இருக்கு எண்டு” தட்டிலிருந்த வெற்றிலையில் சுண்ணாம்பை தடவி கடவாய்க்குள் திணித்துக் கொண்டான் வினோ.
“என்ன வித்தியாசம் கண்டவராம்? செய்வினை சூனியம் இருக்குது எண்டு கண்டு புடிச்ச பாதர், அதை எடுத்தல்லோ விட்டிருக்க வேணும்?அப்பிடியில்லையா செய்வினை வச்சது ஆரெண்டாவது சொல்லியிருக்க வேணும்?” அனோஜன் சொன்ன கருத்தில் ஒரு நியாயம் இருப்பதாகத்தான் எனக்கும் தோன்றியது.
“சொன்னா குடும்பங்களுக்குள்ள பெரிய சண்டை வந்து ஒரு கொலையே விழுமாம்!”
“ம்… இப்ப போனது உசிர் இல்லையா? அன்ரனி ‘தின் குடி சாவு’ எண்டு வாழ்ந்தவன். குடிச்சு குடிச்சு அவனுக்கு இரண்டு கிட்னியும் பழுதா போச்சு. இரண்டு வருசமாவே மருந்தும் கையுமா தான் அலைஞ்சவன். கிட்னி மாத்துறதுக்கு எங்கெங்கோ இருந்தெல்லாம் ஆக்கள கூட்டிக் கொண்டு வந்தவங்கள். ஒண்டும் பொருந்தி வரயில்ல. அவனுக்கு எழுதப்பட்டது இவ்வளவு தான்!
“ஓம்டா…’டயலஸ்’ பண்ணுறதுக்கு என்ர ஆட்டோவில தான் ஆஸ்பத்திரிக்கு வாறவன். மாசத்தில ஒருக்கா இரத்தம் சுத்திகரிக்க போகும் போது ஆளே வீங்கி வெடிக்குறவன் போல இருப்பான். தனக்கு சாவு நெருங்கி வந்திட்டெண்டு அன்ரனிக்கு நல்லா தெரியும். அவன் ஒவ்வொரு நாளையும் எண்ணியெண்ணி தான் வாழ்ந்தவன் என்று சொல்லி அனோஜன் சொன்னதை ஆமோதித்தான் நிரூபன்.
“அது சரி ‘டயலொக்’ செய்யிறதெண்டால் என்னடா? என்று கேட்டான் ஒருத்தன். எல்லோரும் வெடித்துச் சிரித்தார்கள். சுற்றியிருந்தவர்கள் சிலர் எங்களையே பார்த்து வாய்க்குள் முணுமுணுத்தார்கள். பலர் ஏன்தான் வீண் சோலி என்று கண்டும் காணாமல் இருந்தார்கள். அழாத கல்யாண வீடும் இல்லை சிரிக்காத செத்தவீடும் இல்லை என்பார்களே! அது அங்கும் பொய்த்துப் போகவில்லை.
சிரிப்பு அடங்கிய கணப்பொழுதில் “இல்லையாமே… நிசா அக்காவட சின்ன மாமா தான் செய்வினை வச்சது எண்டு தான் எங்கட றோட்டு பக்கம் கதையடிபடுகுது” என்று ஒரு குண்டை தூக்கி போட்டான் இன்னொருத்தன். எனக்கு பக்கென்று ஆனது. அவன் சொல்வது என்னுடைய தேவராசா சித்தப்பாவை.
“அந்த மனிசன் இப்பிடி கரிவேலைகள் செய்யுற ஆளில்லை. கோயில் குளமெண்டு செபமாலையும் கையுமா திரியுற குடும்பம். அதுகள் இப்பிடி செய்யாதுகள்” என்று சொன்னான் நிரூபன். கதைகள் மந்திகள் போல கொப்பு விட்டு கொப்புத் தாவிக் கொண்டே சென்றன.
ஒரு நடுத்தர வயதான பெண் தேநீர் கொண்டு வந்து பரிமாறினாள். சூடான ஏலக்காய் போட்ட தேத்தண்ணியை எல்லோரும் சுவைத்துக் கொண்டிருந்தோம். அலைபேசியை நோண்டிக் கொண்டு தேநீர் வரும்வரை காத்திருந்தவன் போல கோப்பையிலிருந்து இரண்டு மிடறு உறிஞ்சிவிட்டு அடக்கமான தொணியில் குணா சொன்னான் ” இது கிட்னி பெயிலியரும் இல்லை, செய்வினை சூனியமும் இல்லை. அதுக்கெல்லாம் மேல.. யாரோ உடன்பலி எடுத்திருக்குதாம்!”
எல்லோருடைய கண்களும் அவனை உற்றுப் பார்த்தன. யாரும் எதுவும் பேசவில்லை.
நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மரண வீடுகளிற்கேயுரிய வாசனை ஊரெல்லாம் பரவிக்கொண்டிருந்தது. முகங்களில் சோகம் பூசிக்கொண்ட மனிதர்கள் அங்கே மொய்க்கத் தொடங்கினார்கள். எல்லோருடைய பார்வையும் அங்கிருந்த ‘பூ’வாச்சி மீது நிலை குத்தியது. அவள் தன் இளவயதிலேயே கணவனை இழந்த விதவைப் பெண். இப்போது வயது எழுவதை தாண்டியிருக்கும். அவள் நிசா மச்சாளின் திருமணக் கூறையை எடுத்து அன்ரனி அண்ணனின் உடலின் மீது போர்த்தினாள். பின் இம்மியும் இரக்கமற்றவள் போல முகத்தை ‘உர்’ என வைத்துக் கொண்டு நிசா மச்சியின் அருகில் சென்று அவள் கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்ற முயன்ற போது அது அவளிடமிருந்து பிரிவதற்கு விருப்பமற்றது போல அவளின் தலைமுடியில் சிக்கிக் கொள்ளவும், விடாது நிதானமாக பற்றியெடுத்து வெள்ளை கையுறைகள் அணிவித்து ஒன்றோடொன்று சேர்த்து வைக்கப்பட்டிருந்த அன்ரனியின் கரங்களின் மீது அதை வைத்தாள். ஏதோ அவனே அதை அவளிடமிருந்து அறுத்துக் கொண்டு போவதைப் போல… கூடியிருந்த பெண்கள் எல்லாரும் ஓவென்று ஓலமிட்டார்கள். மாதாகோயிலில் துக்கமணி ஒலித்தது. எல்லோரும் செபம் ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கையில், சூழ்ந்து நின்ற பெண்களை விலத்திக் கொண்டு முன்வந்த நடுத்தர வயதான ஆண்கள் சிலர் இமைக்கும் நொடியில் சவப்பெட்டியை மூடி தடையிட்டனர். அழுகைக் சத்தம் கூரையை பெயர்ப்பது போல எழுந்தது. நிசா மச்சி மயக்கம் போட்டு விழுந்தாள். சவப்பெட்டி தலைகளுக்கு மேலாக நகர்ந்து கொண்டே சென்றது.
மரண வீடுகளும் பிரேதம் எடுத்த பின்னர் திருமண வீடுகளைப் போலாகி விடுகின்றன. சிறுவர்களின் விளையாட்டும், கூடியிருந்து அரட்டையடிப்பவர்களின் சத்தமும், மெதுவாக துளிர்விடும் சிரிப்பொலிகளும், சமையலுக்கான ஏற்பாடுகளும் பருப்புக் கறியின் தாளிப்பு வாசமுமாக அந்த மாலை நேரம் நிறம் மாறியது. அப்போதுதான் எல்லோருக்கும் கிலியூட்டும் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது.
அன்ரனி அண்ணன் கடும் வருத்தமாக இருந்த போது மருந்து மாத்திரைகள் எதுவும் கைகொடுக்காது போக அவரை செபிப்பதற்காக ஒரு குருவானவரிடம் கொண்டு போனார்களே? அவர்தான்… இது செய்வினை சூனியமாக இருக்கலாம் என்று கூறிய இராயப்பு பாதர் ஏதோ சொல்லி அனுப்பியதாக அன்ரனியின் தம்பியும் இன்னும் சிலரும் வீட்டிற்கு வந்து பெரியவர்களோடு ஏதோ கிசுகிசுத்தார்கள். பிறகு எல்லோருமாக அவனுடைய படுக்கையறைக்குள் போனார்கள். அதில் இருவர் அறைக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த ‘லெவல் சீற்’றை பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். சற்று நேரத்தில் உள்ளே இறந்தபடி கிடந்த பெரிய சேவல் ஒன்றை தூக்கி தொப்பென கீழே போட்டார்கள்.
எல்லோருக்குமே ஆச்சரியமும் பயமும் தொற்றிக் கொண்டது. பூட்டிய வீட்டின் உள்கூரைக்குள் சேவலொன்று வருவதற்கு வாய்ப்பேயில்லை. யாரோ அன்ரனி அண்ணனை உடன் பலி எடுக்க இதை செய்திருக்கிறார்களாம். சுடுகாட்டின் நடுவே நள்ளிரவில் மண்டையோடுகளை வைத்துபெரிய பூஜை ஒன்றை நடத்தி சேவலை மந்திரித்து பில்லி வைத்து உடன் பலியெடுப்பதற்காக ஏவி விட்டிருக்கிறார்கள் என்றும். அந்தச் சேவல் தானாக பறந்து வந்து அவனுக்கு அருகே மறைந்திருந்து அன்ரனியை உடன்பலியெடுத்த பிறகே அதுவும் இறந்திருக்கிறதாம் என்றும் பலவாறும் பேசிக் கொண்டார்கள்.
அந்தக் கதைகளையெல்லாம் அவள் காதில் வாங்குவதேயில்லை. செய்வினை சூனியங்களில் அவளுக்கு அறவே நம்பிக்கை இல்லை. ஊர் பேசுவது போலவே யாராவது தன் கணவனுக்கு சூனியம் வைத்திருந்தால் கூட அதை செய்தது யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமோ, பதிலுக்கு அவர்களை பழிக்குப்பழி முடிக்கும் குரோதமோ எதுவுமற்றவளாய் சித்தர் மனநிலையில் உலாவினாள். அவளை பொறுத்தவரை போன உயிர் போனது தான். என்ன செய்தும் தன் கணவனை உயிரோடு மீட்டெடுக்க முடியாதே என்ற கையறு நிலையில் அவள் மனம் ஊசலாடியது.
விறாந்தையில் அணையாது எரிந்து கொண்டிருந்த அரிக்கன் இலாம்பின் மங்கல் வெளிச்சம் அந்த வீட்டினை ஆட்கொண்டிருந்த அடர்த்தியான இருளை விலக்க போதாமலிருந்தது. ஆனாலும் அது அவனின் உடன் இருத்தலுக்கு சாட்சியென நிசா நம்பத் தொடங்கினாள். இராத்திரிப் பொழுதுகளில் அரிக்கன் இலாம்பின் சிம்மினியை மினுக்கி, அதன் திரியை சற்று தூண்டி ஒளியேற்றி விட்டு அதையே வெறித்துப் பார்தபடி அதன் முன்னால் அமர்ந்திருப்பதில் அவளுக்கு என்ன தேறுதல் கிடைக்கின்றதோ யாருக்கும் தெரியவில்லை. சுவாலையின் அசைவுகள் அவனுடனான தனிமைப் பொழுதுகளின் சில்மிஷங்களை நினைவுபடுத்தி விட உடல்கூசி சிலிர்ப்பாள். பின் தன்நிலை அடைந்த கணத்தில் தனக்குள்ளே குமுறி வெடிப்பாள்.
வீட்டில் எங்கு பார்த்தாலும் அவனின் நினைவுகளே படர்ந்து கிடந்தன. இருவரும் ஒன்றாக இருக்கும் திருமணப் புகைப்படம் உட்பட வீட்டில் மாட்டியிருந்த அன்ரனியின் அத்தனை புகைப்படங்களையும் கழற்றி அறைக்குள் போடப்பட்டிருந்த கட்டிலுக்கடியில் மறைத்து வைத்து விட்டாள். கட்டிலை எதற்குள் மறைப்பது? அதில் தானே அவனுடைய அத்தனை குறும்புத் தனங்களையும் அவளோடு அவன் கொட்டித் தீர்த்திருப்பான். அவனின் அணைப்பு இல்லாத கட்டிலில் உறங்குவது அக்கினிப் படுக்கை போல அவளை பொசுக்கியது. வெறும் தரையில் உறங்கி எழுவதே மனதிற்கு ஆறுதல் கொடுத்தது. எங்கு உறங்கினாலும் கண்களை மூடினால் அவனின் முகமே வந்து முகாந்தரமிட்டது.
அன்றொருநாள் பின்னிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் அவனின் தீண்டல்களை உணர்ந்திருக்கிறாள். அதே அழுத்தம்… அதே அணைப்பு.. அரண்டெழுந்த போது தன் உணர்வெழுச்சியை தூண்டிய அவனின் கைகளை மார்பின் மீது காணவேயில்லை. படுக்கையிலிருந்து எழுந்து மின்விளக்கை ஒளிர்வித்துப் பார்த்த போது அருகில் ஆதன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி அவளின் வயதான அம்மாவும் அப்பாவும் சத்தமாக மூச்செறிந்து கொண்டிருந்தார்கள். கதவு இறுகப் பூட்டி தாள்பாள் இடப்பட்டிருந்தது. தன் உணர்வுகளுக்கு அணைகட்ட முயன்று தோற்றுப் போய், அரவமின்றி நடந்து குளியலறைக்குள் சென்று கதவடைத்து கொண்டவள் சற்றுநேரத்தில் வியர்த்தடங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.
தினமும் பொழுது புலர்ந்தவுடன் எழுந்து குளித்து விட்டு அன்ரனிக்கு பிடித்த உணவுகளையும் பலகாரங்களையும் விதவிதமாக சமைத்து எடுத்து வந்து அந்த அரிக்கன் இலாம்பின் முன் படையல் வைத்து விட்டு எப்போதும் அவனோடு பேசுவதாக வாய்க்குள் முணுமுணுத்த படியிருப்பாள்.
அவை தன்னுடைய அப்பா உண்பதற்காக வைக்கப்படுவதாக அறிந்த ஆதன், தினமும் படையலின் முன் உட்கார்ந்திருந்து அப்பாவை எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம். ஈயெறும்புகள் மொய்ப்பதை தவிர அந்த உணவுகள் ஒருபோதும் குறைவடைந்ததே இல்லை. அப்பா இனி வரவே போவதில்லை என்பது அவனுக்கு புரியத் தொடங்கியதும் வீட்டுக்கு வருகின்ற தனது அப்பா வயதையொத்த ஆண்களையும், அன்ரனியின் நண்பர்களையும் ” இண்டைக்கு இரவு எங்கட வீட்ட படுங்களேன்.” என்று கேட்கத் தொடங்கினான். அது நிசாவிற்கு சங்கடமாக இருந்தது. ஒரு தடவை வீட்டுக்கு வந்திருந்த பாதர் பெரியப்பாவிடமே கேட்டு விட்டான். அவருக்கும் முகம் வெளிறிப் போனது. பலரும் அப்படி கேட்கக் கூடதென்று அவனுக்கு இடித்துரைத்தாலும் தான் கேட்பதையெல்லாம் வாங்கித் தருவதற்கும், தன்னை முதுகில் ஏற்றிக் கொண்டு யானை அம்பாரி போகவும், வீதியில் சைக்கிள் ஓட்டப் பழக்கவும் அப்பாவின் வெற்றிடத்தை நிரப்ப இன்னொருவரை எதிர்பார்த்த அவனின் குழந்தைமையில் பச்சாத்தாபம் கசிந்தது.
முப்பத்தொன்று முடிந்தது. வாடகை பொருட்கள் வீட்டைவிட்டுப் போனதோடு மனிதர்களும் போனார்கள். நிசாவின் வயதான பெற்றோரோடு வீட்டில் வெறுமையும்’ அட்டணக்கால்’ போட்டு உட்கார்ந்து கொண்டது. அன்ரனியின் தாய் தந்தை கூட இருந்து விட்டு எப்போதாவது கடமைக்கு வருவது போல வந்து அழுது மூக்குச் சீறிவிட்டு போனார்கள். ஒப்புக்கு அழுத கூட்டம் போல சொந்த பந்தங்கள் எல்லாம் அவரவர் அலுவல்களில் மூழ்கிப் போனார்கள். அன்ரனியின் சாவு ஊருக்கு பேசிப் புளித்துப்போன பழங்கதை ஆகிப் போனது.
ஜெனார்த்தன்