Home » இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் வழங்கும் தலைமைத்துவம்

இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் வழங்கும் தலைமைத்துவம்

உகண்டா ஜனாதிபதி புகழாரம்

by Damith Pushpika
January 28, 2024 6:00 am 0 comment

வீழ்ந்து கிடந்த இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகள் இலங்கையில் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஒன்றரை வருடங்கள் என்ற மிகக் குறுகிய காலத்தில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதியின் முயற்சிகள், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைகளையும் யோசனைகளையும் மட்டும் வழங்குபவர் அல்ல. அவர் தனது பரிந்துரைகளையும் யோசனைகளையும் யதார்த்தமாக்கிய ஒரு நடைமுறை சாத்தியமான தலைவராகவும் இருக்கிறார்.

2022ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. நவீன கடன் நெருக்கடிக்கு இலங்கை ஒரு உதாரணம். இதனால் இலங்கையின் தலைவிதியை கணிக்கக் கூட முடியாமற் போனது என உலக பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலானோர் கருதினர். தவறான, தூரநோக்கற்ற பொருளாதாரக் கொள்கைத் தீர்மானங்களால் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த கணிப்புகளை எல்லாம் புரட்டிப்போட்டு, நவீன கடன் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுத்தார். இதனால் உலக நாடுகளின் கவனத்தை இலங்கை ஈர்த்தது.

அதனால்தான் பல வளர்ந்து வரும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த ஆர்வம் காட்டினர். அந்த வாய்ப்புக்களை ஜனாதிபதி பயன்படுத்தினார். ஆபிரிக்க நாடுகளின் பல தலைவர்களையும் பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

குறிப்பாக உகண்டா அதிபர் யோவேரி முசெவேனி, தென்னாபிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, தான்சானியா பிரதமர் காசிம் மஜாலிவா, பஹாமாஸ் பிரதமர் பிலிப் ஈ. டேவிஸ் (Philip E. Davis), எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது (Abiy Ahmed), பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மரியம் சாபி தலதா (Mariam Chabi Talata) ஆகியோரை ஜனாதிபதி சந்தித்தார். குறிப்பாக வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி வழங்கிய தலைமைத்துவத்தை உகண்டா ஜனாதிபதி பாராட்டினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆபிரிக்க கண்டத்துடனான உறவுகளை மீள வலுப்படுத்துவதற்கும் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு ஆபிரிக்க அரச தலைவர்களின் விசேட பாராட்டைப் பெற்றது.

அணிசேரா நாடுகளின் 19ஆவது உச்சி மாநாடு மற்றும் சீனாவின் 3ஆவது தென்துருவ உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் உகாண்டாவிற்குச் சென்றிருந்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 54ஆவது ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்கேற்ற பின்னர் ஜனாதிபதி உகண்டா சென்றிருந்தார்.

உலக பொருளாதார மன்றம்

உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளின் தலைவர்கள், உலகின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைமை நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் பங்கேற்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடத்தப்படுகிறது.

இம்முறை நடந்த உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து கொண்டார். இதன்போது எதிர்கால நோக்குடன் இலங்கை மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி உலக தலைவர்களுக்கு விளக்கினார்.

உலகப் பொருளாதார மன்றம் என்பது அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக ஆண்டின் தொடக்கத்தில் உலகின் முக்கிய நாடுகளின் உயர்மட்டக் கூட்டமாகும். சர்வதேச நிறுவனங்கள், உலகளாவிய, நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்களும் இதில் பங்கேற்றன.

மேலும், சுவிஸ் – ஆசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Green Tech Forum மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையை நிகழ்த்தியிருந்தார். “எரிசக்தி பாதுகாப்பான இலங்கைக்கான பாதையை வகுத்தல்” என்ற தலைப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை முதலீட்டு சபை ஏற்பாடு செய்திருந்த வர்த்தக வட்ட மேசை கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றார்.

இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி தனியாக பயணிக்கவில்லை. இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்துகொண்டனர்.

அணிசேரா நாடுகளின் மாநாடு

சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு அணிசேரா நாடுகளின் மாநாட்டிலும், G77 மற்றும் சீனாவின் 3ஆவது தென்துருவ மாநாட்டிலும் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உகண்டா பயணமார்.

“பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” என்ற தொனிப்பொருளில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19ஆவது அமர்வு உகாண்டாவின் கம்பாலாவில் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது.

பொது விதியை மாற்றுவதற்கான கூட்டு முயற்சியை வலியுறுத்துவதற்காக இந்த மேடையை ஜனாதிபதி பயன்படுத்தினார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பூகோள அரசியல் பிரச்சினைகள், குறிப்பாக காசா, இஸ்ரேல்-, பாலஸ்தீனம் போன்றவற்றில் என்ன நடக்கிறது. வளரும் நாடுகள் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நகர்வுகள், கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளை விடுவிக்க எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களை சர்வதேசத்தின் மத்தியில் ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார்.

மேலும், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகள் மற்றும் பேரழிவு தரும் ஆயுதங்களின் பயன்பாடு ஆகியவை அணிசேரா அமைப்பைச் சேர்ந்த வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே ஆழமான சமத்துவமின்மையை உருவாக்கியிருப்பதை சுட்டிக்காட்டினார். சிறந்த உலகத்தை உருவாக்க, இந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இவை அனைத்தும் இலங்கையின் மட்டுமன்றி அணிசேரா நாடுகளின் பொது நலன் கருதிய விடயங்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதியின் இந்த விரிவான உரையை அணிசேரா நாட்டுத் தலைவர்கள் பாராட்டினர்.

G77 மற்றும் சீனாவின் 3ஆவது தென்துருவ மாநாடு

G77 மற்றும் சீனாவின் 3ஆவது தென்துருவ நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் வளரும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டணியாகும். உலகின் தென்துருவ நாடுகள் தங்கள் கூட்டுப் பொருளாதார நலன்களை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும் இதன்மூலம் வழி ஏற்படுகிறது. அத்துடன் ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்குள் சர்வதேச பொருளாதார பிரச்சினைகளை விவாதிக்கவும், தென்துருவ நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்படுத்தவும் இந்த மாநாடு வழி ஏற்படுத்தியிருந்தது.

வர்த்தகம், முதலீடு, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அதன் 134 உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அதன் 3ஆவது தென்துருவ மாநாடு ‘யாரையும் கைவிடக் கூடாது’ என்ற கருப்பொருளின் கீழ் கூட்டப்பட்டது.

மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகளாவிய நிதிக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், G77 மற்றும் சீனா குழு உருவாக்கத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த தருணத்தில், பலதரப்பு வளர்ச்சியடையும் மிகப்பெரிய குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் பேசினார். உறுப்பு நாடுகள் எதிர்நோக்கும் பல சவால்களை முறியடித்து, தென்துருவ நாடுகளின் நிலைப்பாட்டை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதன்படி, இலங்கை மற்றும் அதன் அனைத்து அங்கத்துவக் கட்சிகளின் எதிர்கால தலைவிதியை மேம்படுத்துவதற்காக “G77 மற்றும் சீனா” குழுவின் 3ஆவது உச்சிமாநாட்டின் மேடையையும் ஜனாதிபதி பயன்படுத்தினார். அந்த நோக்கத்திற்காக, தற்போது தேவையான சீர்திருத்தங்கள் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது.

உண்மையில், உலகத் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த உலகத்திற்கான எதிர்கால நோக்குகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

ஆபிரிக்கா இலங்கையின் பழைய நண்பன்

இலங்கைக்கும் ஆபிரிக்கக் கண்டத்திற்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஆப்பிரிக்கா முழுவதும் நிறவெறி மற்றும் இனவெறியை ஒடுக்குவதற்கான ஆதரவு மற்றும் பாலஸ்தீன போராட்டத்துக்கு ஆதரவு உள்ளிட்ட பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. 1976 செப்டெம்பரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 31ஆவது அமர்வில் அணிசேரா இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டிருந்தது. அணிசேரா இயக்கத்தில் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா முக்கிய பங்காற்றியபோதும் இந்த ஒத்துழைப்பு மேலும் வளர்ந்தது.

மேலும், ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும், இலங்கையும் ஆபிரிக்காவும் பரஸ்பரம் ஒத்துழைத்துள்ளதுடன், தற்போது இலங்கை 42 ஆபிரிக்க நாடுகளில் ஆறு வதிவிட தூதரகங்களுடன் இராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றது.

ஆபிரிக்க பிராந்தியத்துடன் இலங்கை வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளது.

தற்போது எந்தவொரு நாடும் தனித்து நிற்க வாய்ப்பில்லை. இனி அப்படியொரு விடயத்தைப் பற்றி யோசிப்பது கூட முட்டாள்தனம் என்ற அளவுக்கு உலகளாவிய ஒழுங்கு மாறிவிட்டது. எனவே இப்போது நாடுகளின் ஒற்றுமையில் தங்கள் சொந்த இலட்சியங்களை நிறைவேற்றுவது குறித்த செய்தியை உகாண்டாவில் ஜனாதிபதி உலகிற்கு வழங்கினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த இராஜதந்திர திறமையானது தற்போது இலங்கை எதிர்நோக்கும் சவாலையும் உலகளாவிய பொதுவான சவாலையும் ஒழுங்கமைப்பதில் வெளிப்பட்டது.

மூலோபாய நுட்பம்!

வடஅமெரிக்கா, -ஐரோப்பா என்று இருந்த உலகப் பொருளாதார மையம் இப்போது ஆசியாவை நோக்கியும் ஆப்பிரிக்கக் கண்டத்தை நோக்கியும் நகர்த்து வருவதில் நாட்டம் காட்டுகிறது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் சீனா தலைமையிலான ஆசிய வல்லரசுகள், நாளுக்கு நாள் தங்கள் பங்கை அதிகரித்து வருவது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் ஆபிரிக்க நாடுகளும் கணிசமான அளவு வளர்ச்சியை அடைந்து வருகின்றன. ஆபிரிக்கக் கண்டம் தற்போது நிலையான வளர்ச்சிக்கான மாற்றியமைக்கும் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகிறது என்பது தெளிவாகிறது. அத்துடன் ஆபிரிக்க ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரல் 2063 அடுத்த 50 ஆண்டுகளுக்கான கண்டத்தின் வளர்ச்சி அபிலாஷைகளை கோடிட்டுக் காட்டுகிறது.

ஆசியா தலைமையிலான தென்துருவ நாடுகள் மட்டுமல்ல, உலகளாவிய வடக்கு நாடுகளும் விரைவான வளர்ச்சியை நோக்கி நகரும். இதன்போது ஆபிரிக்க கண்டத்துடன் மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான திட்டங்களை அந்த நாடுகள் வகுக்கும் என்பது இரகசியமல்ல. எனவே, இலங்கை ஒரு மூலோபாய அணுகுமுறையில் இருப்பதால், இலங்கையை ஆசியாவின் முக்கிய விநியோக மையமாக மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரச் சங்கிலியின் மையமாகவும் மாற்ற ஜனாதிபதி முயற்சிக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த நோக்கத்திற்காக பல நிதி, சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளார். எனவே, அது தொடர்பாக ஆபிரிக்காவின் முக்கியத்துவத்தை சரியாக மதிப்பிட வேண்டும். அதற்கு ஆபிரிக்காவை சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியின் உகண்டா விஜயமானது ஆபிரிக்க பிராந்தியம் மற்றும் அதன் பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இலங்கை மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மிக முக்கியமான மற்றும் பயனுள்ள பலன்களுக்காக நீண்டகால உறவுகளை கட்டியெழுப்ப உதவியது என்று கூறலாம்.

இந்த முயற்சியின் மூலம், ஆபிரிக்க நாடுகளுக்கான இலங்கையின் அணுகலை விரிவுபடுத்துவதுடன், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம், தற்போது ஆரம்ப நிலையில் இருக்கும் ஆபிரிக்க பிராந்தியத்துடனான பொருளாதார உறவு, குறிப்பிடத்தக்க மற்றும் பரஸ்பர நன்மைகளைத் தரும்.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கையானது, ஆபிரிக்க பிராந்தியத்துடனான தனது நீண்டகால நிலைப்பாட்டை வலுப்படுத்துவதை ஜனாதிபதியின் ஆபிரிக்கப் பயணம் பிரதிபலித்தது.

- வீ.ஏ.கே.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division