களுத்துறை எதனமடலவில் பாதாள உலகின் முக்கிய குற்றவாளியான சமயங் உள்ளிட்ட ஐந்து பாதாள உலகத்தினர் மற்றும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்து சிறைச்சாலை பஸ்ஸின் மீது 2017ம் ஆண்டு பெப்ரவரி 23ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் பாதாள உலகத்தினரின் அவ்வாறான தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் அது “அபே ஜனபல வேகய” கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேரா எனும் ரோயல் பீச் சமன் உள்ளிட்ட ஐந்து பேரை பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கொலை செய்த சம்பவமாகத்தானிருக்கும்.
அன்று அங்கொட லொக்காவுடன் இணைந்து மாகந்துரே மதுஷ் டுபாயிலிருந்தே அந்தத் தாக்குதலை முன்னெடுத்திருந்தார். பாதாள உலகத்தினரின் அதிகாரத்திற்காக இடம்பெற்ற சண்டையின் விளைவாக நடந்த இந்தக் கொலையானது பொலிஸ் மற்றும் இராணுவ சீருடையில் வந்து மேற்கொள்ளப்பட்டதால் அது பாதுகாப்புத் தரப்பினருக்கு சவாலான ஒன்றாக இருந்தது. இச்சம்பவம் இடம்பெற்று சுமார் 7 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்று வரைக்கும் அந்தத் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தலைமறைவாகவே உள்ளனர். அவர்கள் யாரென்று இதுவரைக்கும் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போனதே இதற்குக் காரணமாகும்.
களுத்துறை எதனமடலவில் தாக்குதலைப் பின்தள்ளி பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், நாடு பூராகவும் உள்ள பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக பொலிஸார் முழுப் பலத்தையும் பிரயோகித்து நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் பொலிஸாரும் இதனால் திகைத்துப் போயுள்ளனர்.
தங்காலை நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதக் கொலையுடன் தொடர்புடைய வழக்கில் ஆஜராவதற்காக வெள்ளை நிற டிபெண்டர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த சமன் பெரேராவை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் டுபாயில் வசிக்கும் முக்கிய பாதாள உலக குற்றவாளியும், போதைப்பொருள் வியாபாரியுமான கொஸ்கொட சுஜீத்தின் ஒப்பந்தத்தின் கீழ், அவரது முக்கிய உதவியாளரான புஸ்ஸே ஹர்ஷாவின் திட்டத்தின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.
தன்னை ஒரு வர்த்தகரைப் போன்று சமூகத்தில் காட்டிக் கொண்டு சில பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்புடன் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த சமன் பெரேரா எனப்படும் ரோயல் பீச் சமனே இவ்வாறு கொலை செய்யப்பட்டார். அவர் ரத்கம விதுர எனும் பாதாள உலகக் குற்றவாளியுடன் இணைந்து கொஸ்கொட சுஜியின் அடியாட்கள் மற்றும் உறவினர்களையும் கொலை செய்து தென்னிலங்கையில் பாதாள உலக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அடித்தளமிட்டுக் கொண்டிருந்த வேளையில் இக்ெகாலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரத்கம விதுர தற்போது வெளிநாட்டிலிருக்கிறார். அவர் இத்தாலியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அவர் ஐரோப்பிய நாடுகளிடையே சுற்றித் திரிவதாகவும் தகவல்கள் உள்ளன. அரசியல் பலமும் குறைவின்றி கிடைக்கும் ரத்கம விதுர, கொஸ்கொட சுஜியின் குடும்பத்தினர் மற்றும் அடியாட்கள் மீது அண்மையில் தாக்குதல் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தான். அவனுக்கிருந்த அரசியல் பலம் முன்னரை விட தற்போது கூடுதலாக கிடைப்பதே இதற்கு காரணமாகும். அதேபோன்று கொஸ்கொட சுஜிக்கும் பாதுகாப்பு தரப்பினரோடு நெருங்கிய தொடர்புள்ளது. சில பொலிஸ் உயர் அதிகாரிகள் துபாயிலிருக்கும் அவனோடு தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்வதும் பரகசியமாகும்.
சமன் பெரேரா எனப்படும் ரோயல் பீச் சமன் கடந்த 22ம் திகதி தனது அடியாட்களையும் டிபெண்டர் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு 2022ஆம் ஆண்டு ஜூன் 05ம் திகதி தங்காலை மொரகெட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக தங்காலை நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தான். குடாவெல்ல பிரதேசத்தை ஆட்டிப் படைத்த குடாவெல்ல அசேல அன்று கொலை செய்யப்பட்டது ஹரக் கட்டா துபாயிலிருந்து வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலாகும். அசேல என்பவன் ஹரக் கட்டாவின் நெருங்கிய சகாவாகும்.
சமன் பெரேரா எனும் ரோயல் பீச் சமன் உயர்மட்ட அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியல் பலத்தையும் கொண்டிருந்துள்ளார். சில இனவாத சிங்கள அமைப்புகளையும் அந்த அரசியல்வாதிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் முன்னெடுத்துச் சென்றதும் சமனாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கட்சி ஒன்றைக் கூட விலைக்கு வாங்கி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதும் அந்த அரசியல்வாதியின் ஆசீர்வாதத்துடனேயாகும். அந்நேரம் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சமன் பெரேரா எனப்படும் ரோயல் பீச் சமனைப் பற்றி அரச புலனாய்வு சேவை பெரியதொரு அறிக்கையைக் கூட தேர்தல் ஆணைக்குழுவியிடம் கையளித்திருந்தது.
அது அப்போது ஜனாதிபதி வேட்பாளராக வேட்புமனுவைச் சமர்ப்பித்திருந்த சமன் பெரேராவின் குற்றப் பின்னணி பற்றிய அறிக்கையாகும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்கா அன்று தேர்தல் ஆணைக்குழுவின் உள்ளே சமன் பெரேராவின் ஊழல்கள் அடங்கிய அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குற்றவாளி ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருவதைத் தடுப்பதற்கேயாகும். அந்த நேரத்தில், சமன் பெரேரா எனப்படும் ரோயல் பீச் சமன் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படாததால் அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனது.
ஜனாதிபதி தேர்தலில் அன்று போட்டியிட்ட சமன் மறைமுகமாக உதவி செய்தது பிரபலமான ஒரு வேட்பாளருக்காகும். அந்த வேட்பாளரிடமிருந்து பெரும் பாதுகாப்பு அவருக்கு கிடைத்ததே அதற்கு காரணமாகும். பாரியளவிலான விருப்பு வாக்குகளை அன்று சமன் பெறாவிட்டாலும் அவரது எதிர்பார்ப்பாக இருந்தது சமூகத்திற்கு முன்னால் தான் ஒரு அரசியல்வாதி என்பதை காட்டுவதேயாகும். பின்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாட்டின் பெயர் போன முக்கிய தேரர்களுக்கும் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது சமன் பெரேராவின் அபே ஜனபல கட்சியிலாகும். அந்தத் தேர்தலில் எந்த ஆசனங்களையும் வெற்றி கொள்ள இந்தக் கட்சியால் முடியாமல் போனாலும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான இடம் அக்கட்சிக்கு கிடைத்தது. அந்த ஆசனத்தை கைப்பற்றிக் கொள்வதற்காக கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையே பெரும் போராட்டம் இடம்பெற்றது. கடைசியில் அந்த ஆசனம் அத்துரலிய ரத்ன தேரருக்கு வழங்கப்பட்டது. அவர் என்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது அந்த ஆசனத்தின் ஊடாகும். அந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தைக் கைப்பற்றுவதற்கும் சமன் பெரேரா முயற்சிகளைச் செய்தார். அதனைத் தொடர்ந்தே அத்துரலிய ரத்ன தேரர் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக சமன் பெரேராவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்தார். அந்நேரத்தில் சமபெரேராவுக்கு பலத்த அரசியல் பலம் இருந்ததால் குறைந்தபட்சம் அத்துரலிய ரத்ன தேரரின் முறைப்பாடு விசாரணைக்கும் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.
குடாவெல்ல அசேலவின் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கும் போது நாட்டில் வேறு அரசியல் கலாசாரமே இருந்தது. ரோயல் பீச் சமன் பெரேராவுக்கு அதுவரைக்கும் புகலிடமாக இருந்த அரசியல்வாதிக்கு சமன் பெரேரா போன்றவர்களைக் காப்பாற்றாமல், நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இந்த நேரத்தில்தான் ஒரு அரசியல் மாற்றம் இடம்பெற்றது. அதன் காரணமாக சமன் பெரேரா போன்றவர்கள் கருவேப்பிலைகளாக மாறினார்கள்.
அன்று பொலிசாரால் கைது செய்யப்பட்ட சமன் பெரேரா எனும் ரோயல் பீச் சமன் உள்ளிட்ட தரப்பினர் குடாவெல்ல அசேலவின் கொலை தொடர்பில் சந்தேக நபர்களாக தங்காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். நீண்ட காலமாக விளக்கமறியலில் இருந்த சமன் உள்ளிட்ட தரப்பினருக்கு பிணை வழங்கப்பட்டு பல சந்தர்ப்பங்களில் வழக்கு விசாரணைகளுக்காக தங்காலை நீதிமன்றத்திற்கு வந்து சென்றார்கள். இதனை அறிந்து கொண்ட கொஸ்கொட சுஜீ சமன் பெரேரா எனப்படும் ரோயல் பீச் சமனை பழிவாங்கத் தீர்மானித்தான்.
அன்று 22ஆம் திகதி ரோயல் பீச் சமன் உள்ளிட்ட ஐவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரி அந்த ஜீப்பிலேயே தப்பிச்சென்றது பெலியத்தை திசையிலாகும். பெலியத்தையிலிருந்து ஹக்மனை ஊடாக கம்புறுபிட்டிக்குச் சென்ற ஜீப் நகரில் தரித்து நின்றது துப்பாக்கிதாரி ஜீப்பிலிருந்து இறங்கிக் கொள்வதற்காகும். அவனது புகைப்படமும் சீசீடீவி கெமராவில் பதிவாகியுள்ளதோடு, புகைப்படம் தெளிவானதாக இல்லை.
இராணுவ விஷேட படையணியிலிருந்து தப்பி வந்துள்ள அவன், கடுவலை சமயங்கின் கூட்டத்தில் இருந்த ஒருவனாகும். அந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் அகுரஸ்ஸையில் இறங்கியதன் பின்னர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சமன் எனப்படும் அளுத்கமையைச் சேர்ந்த நபருடன் தனது வீட்டுக்குச் சென்ற சமன் குமார துப்பாக்கியை தனது வீட்டிலே மறைத்துக் கொண்டார்.
கயான் குமார வீரசிங்க தமிழில் : எம். எஸ். முஸப்பிர்