இந்தியாவின் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு இந்தியப் பிரதமர் அண்மைக் காலமாக அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க அடிக்கடி வந்து போகிறார். நாட்டின் பிரதமர் என்ற முறையில் வந்து போவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம். மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு மாதத்தில் வர இருக்கும் சூழலில் வந்து போவது தான் அவதானிக்கப்பட வேண்டியதாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தென் மாநிலங்களின் மீது இல்லாத அக்கறை இப்போது வரக்காரணம் என்ன? பாரதிய ஜனதா கட்சிக்கு தென்மாநிலங்களில் முக்கியத்துவம் இல்லை என்பதே முக்கிய காரணம். இந்தி பேசும் வடமாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு முழு ஆதரவு இருக்கிறது, இந்த ஆதரவை வைத்து மூன்றாவது முறையும் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடிய வாய்ப்பும் நிறைய இருக்கிறது. ஆனால் தென்மாநிலங்களின் ஆதரவுடன் அதிக இடங்களை வென்று, கூடுதல் பலத்துடன் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே பிரதமரின் அரசியல் கணக்காக இருக்கிறது.
கூடுதலாக தற்போது அயோத்தியில் இராமர் கோயிலை கட்டியுள்ளதை வைத்து, மத அடிப்படையில் உணர்வுபூர்வமாகவும் ஆதரவு திரட்ட முயற்சி செய்து வருகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள லேபாக்ஷி வீரபத்ரர் கோயிலுக்குச் சென்று பிரதமர் வழிபாடு நடத்துகிறார். புராணக் கதைகளின் படி சீதையைக் கடத்திய இராவணனால் படுகாயமடைந்த ஜடாயு கழுகு விழுந்த இடமே லேபாக்ஷி. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இராமரைப் புகழ்ந்து தெலுங்கில் பாடப்பட்ட சிறப்புப் பாடல்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டதுடன் இராமாயணத்தைத் தழுவிய பொம்மலாட்ட நிகழ்வையும் கண்டு ரசித்துள்ளார்.
பிரதமரின் கோடீஸ்வர நண்பர் என்று ராகுல் காந்தி விமர்சிக்கும் அதானியை வைத்து அண்மையில் காங்கிரஸ் ஆட்சியமைத்த தெலுங்கானா மாநிலத்தில் ரூ 12.400 கோடி முதலீடு செய்திருப்பது அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி குழுமம், இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. பிரதமரின் மறைமுக ஆதரவு நிறுவனம் என காங்கிரஸ் கட்சியால் விமர்சனம் செய்யப்பட்ட அதானி குழுமம், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த ஒரு மாத காலகட்டத்திலேயே ரூ 12.400 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பதன் பின்னனியிலும் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என்று விமர்சனம் எழுத்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் திறப்பதற்கும், ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்கும் என பிரதமர் மோடி தமிழ் நாட்டுக்கு இரண்டு முறை வந்து போயிருக்கிறார். இரண்டாவது முறையாக வந்தபோது, ஜனவரி 22 ஆம் திகதி இராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு இராமாயண காவியத்தில் முக்கியத்துவம் பெற்ற ஸ்ரீரங்கத்திற்கும், இராமேஸ்வரத்திற்கும் சென்று வழிபாடு செய்துள்ளார். இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினரும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும். கோயில்களை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஏற்கனவே சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்து விளம்பரம் தேடுவதாக தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இவர்களை நகைச்சுவையாக விமர்சனம் செய்திருந்தார்.
இது பற்றி கவலைப்படாமல் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமை, நடிகை குஷ்பு போன்றவர்கள் கோயில்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர், நரேந்திர மோடியின் இந்தப் புனிதப் பயணத்தை முன்வைத்து அவருடைய கடவுள் பத்தியை பாராட்டி பலரும் பொதுவெளியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர். பிரதமரின் கேரளப் பயணம்தான் அங்கே பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்யும் மாநிலம். அங்கே பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில்இந்துத்துவ தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சி, அண்மைக் காலமாக தன்னை அனைவருக்குமான கட்சியாக முன்னிறுத்த முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கேரளத்தில் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
கேரளாவில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ஜே அல்போன்ஸ், காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி. முன்னாள் டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸ் ஆகியோர் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியில் கிறிஸ்தவர்களின் முகமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களைக் கவர்வதற்காக சிநேக யாத்திரை என்ற பெயரில் கடந்த டிசம்பர் மாதம் தொடர் இயக்கத்தை பாரதிய ஜனதா நடத்தியது.
அதையொட்டி அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன். சீரோ மலபார் கிறிஸ்தவப்பிரிவின் முன்னாள் தலைவர் கர்தினால் ஜோர்ஜ் ஆலஞ்சேரி, வராப்புழா லத்தீன் ஆர்ச் டயோசீஸ் தேவாலையத்தின் பேராயர் ஜோசப் களத்திபரம்பில் ஆகியோரைச் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த மாத இறுதியில் பிதமர் நரேந்திர மோடி அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில், பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் அளித்த விருந்தில் பாதிரியார்கள் பங்கேற்றதை கேரள கலாசாரத்துறை அமைச்சர் சஜி செரியன் கடுமையாக விமர்சித்திருந்தார். மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பாஜக அரசு அளித்த விருந்தில் கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொண்டது முறையல்ல என்று தனது கருத்தை தெரிவித்திருந்தார். கேரள மாநிலத்தில் அரசியலும் மதமும் எப்போதுமே கைகோர்த்து செயல்பட்டு வந்திருக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வெற்றிகளுக்குப் பின்னால். கிறிஸ்தவர்கள் பின் துணையுடன் கூடிய கேரள காங்கிரஸ் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் முக்கியமான காரணிகள் என்று சொல்லலாம். காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரைத் தங்களுடன் இணைத்துக் கொள்கிறது என்றால். மார்க்சிஸ்ட் கட்சி ஜாதிய ரீதியிலான வாக்கு வங்கியால் தன்னை வலிமைப்படுத்திக் கொள்கிறது. உயர் ஜாதி நாயர் பிரிவினரின் அமைப்பான என்எஸ்எஸ் எனப்படும் நாயர் சர்வீஸ் சொசைட்டியும் ஈழவர்களின் அமைப்பான ஸ்ரீநாராயண தர்ம பரிபான சங்கம் எனப்படும் எஸ் என் டி – பியும் தேர்தல் வெற்றி தோல்விகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமய நம்பிக்கைகளைப் பாதுகாக்க அரசியல் சாசனம் சிறப்பு உரிமைகளை வழங்கி இருக்கிறது. அதனை பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் விமர்சித்து வருகின்றன. இந்துக்களை மதமாற்றம் செய்ய சிறுபான்மையினர் பிரசாரம் செய்வதாகக் குறை கூறியும் மக்களை பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரிக்கக் கூடாது என்றும் பிரசாரம் செய்துதான் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களின் ஆதரவை பாஜக பெற்றிருக்கிறது. இதை வைத்தே பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத ரீதியான வேறுபாடுகளை மீறி கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் கோவா, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயம், போன்ற மாநிலங்களில் பாஜக வென்றிருக்கிறது. அதே போல வட மாநிலங்களில் இஸ்லாமியர்களிடையேயும் கூட பிரதமர் மோடிக்கு செல்வாக்கு ஏற்படுத்தும் முயற்சியிலும் முனைந்திருக்கிறது. கேரளத்தில் கிறிஸ்தவ வாக்கு வங்கியை குறிவைத்து பாஜக காயை நகர்த்த முற்பட்டிருப்பது கடுமையான விமர்சனங்களையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துவதில் வியப்பில்லை. காங்கிரஸின் அசைக்க முடியாத வாக்கு வங்கி என்று கருதப்பட்ட கிறிஸ்தவர்கள், இடது ஜனநாயக முன்னணியையும் பாஜகவையும் நோக்கி நகர்வது அந்தத் கட்சியை அதிர்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சிறுபான்மையினர் என்கிற போர்வையில் எல்லா சலுகைகளையும் பெற்று முஸ்லிம்கள் வளர்ந்து வருவதை கேரளத்தில் கிறிஸ்தவ சமுதாயம் அச்சத்துடன் பார்க்கத் தொடங்கி இருக்கிறது. முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களை உள்ளடக்கி தங்களுக்குத் தனியாக மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் கோரிக்கை மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்து ஊக்குவிக்கிறது என்கிற கருத்து கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகரித்து வந்திருப்பதன் விளைவுதான் அதைக் கட்டுக்குள் கொண்டுவர பாஜகவுடன் கிறிஸ்தவர்கள் சமரசம் செய்து கொள்ள முன்வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கேரளத்தைப் பொறுத்தவரை சுமார் 15 சதவீத வாக்குகளை பாஜக பெற்று வருகிறது. ஆனால், அக்கட்சியால் அங்கு எந்த ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. அதற்கு கேரளத்தில் மக்கள் தொகை பகுப்பே காரணம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அங்கு இந்துக்கள் 54.7 சதவீதம், முஸ்லிம்கள் 26 சதவீதம், கிறிஸ்தவர்கள் 18.4 சதவீதம் உள்ளனர்.
மாநில மக்கள் தொகையில் சுமார் 45 சதவீதத்துக்கும் மேல் சிறுபான்மையினர் உள்ளதால் பாஜக வால் அங்கு வெல்ல முடியவில்லை. மத்திய கேரளமான எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆலப்புழா, கோட்டையம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த மாவட்டங்களில் மட்டும் 42 தொகுதிகள் உள்ளன. தவிர மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் பரவலாக உள்ளார். ஏற்கனவே உள்ள இந்து ஆதரவு வாக்குகளுடன் கிறிஸ்தவர்களின் ஆதரவும் கிடைத்துவிட்டால் பல தொகுதிகளில் வென்று விட முடியும் என்று பாஜக திட்டமிடுகிறது. பிரதமார் நரேந்திர மோடியின் கேரளப் பயணத்தின் பின்னணியும் இதுதான். பிளவுபடும் காங்கிரஸ் வாக்கு வங்கியால் பயனடையப் போவது பாரதிய ஜனதா கட்சியா அல்லது மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது முன்னணியா என்பதை வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தான் தெரிவிக்கும். பிரதமரின் தென்மாவட்டப் பயணத்தின் நோக்கமும் எந்தளவுக்கு கைக்கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.