சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த முறை வெளியான முதல் தோற்றம் சூர்யாவை ஓர் அரசன் போல சித்தரித்திருந்தது. அது பீரியட் படத்துக்கான நியாயத்தை சேர்த்திருந்தது. ஆனால் தற்போதைய போஸ்டரில் மற்றொரு சூர்யாவின் தோற்றம் கவனம் பெற்று வருகிறது. காரணம், ஈர்க்கும் ஹெர்ஸ்டைலுடன் கூடிய நிகழ்காலத்தையொத்த லுக், படம் இரு வேறு காலங்களில் நடப்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஃபேன்டஸி தன்மையுடன் கூடிய இந்த போஸ்டரை சூர்யா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.