இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதமே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி இரண்டாவது மாநாடு சேலம் மாநகரில் இன்று ஜனவரி 21இல் நடைபெறுகிறது. ஏற்கனவே டிசம்பர், 17, மற்றும் 24 திகதிகளில் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு, மிக்ஜாம் புயல் தென்மாவட்டங்களில் பெய்த அதிக மழையால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஜனவரி 21 உறுதிப் படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெறுகிறது.
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இளைஞரணி மாநாட்டை திமுக நடத்துவதால் மக்களவை தேர்தலுக்கு எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே தமிழ்நாட்டில் அரசியல் மட்டத்தில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சேலம் இளைஞரணி மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரையில் அதிரட்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்திருப்பது மக்களவைத் தேர்தலுக்கான முன்னெடுப்பாகவே பார்க்க முடிகிறது
திமுகவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விடயம் ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு அமைச்சர்கள் தண்டனைப் பெற்றிருப்பதுதான். அமுலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, திமுக மத்திய அரசாங்கத்தை விமர்சிக்கும் போக்கில் மென்மையை கடைப்பிடிப்பதையும் அவதானிக்க முடிகிறது. இன்னொரு அமைச்சரான பொன்முடிக்கு தண்டனை வழங்கியும் மேல்முறையீட்டுக்காக நீதிபதி வாய்ப்பு வழங்கியிருப்பதல் அவர் வெளியில் இருக்கிறார்.
மிக்ஜாம் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரக்கணக்கில் நிவாரணம் வழங்கியதாலும் பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கியதாலும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதமாக அமையும் என்று நம்பப்படுகிறது. ஆனால் எந்தளவுக்கு நன்மை தரும் என்று உறுதியாக சொல்லமுடியாது.
தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட ெமாடல் ஆட்சி ஊழல் ஆட்சியாக மாறிவிட்ட. அதற்கு இரண்டு அமைச்சர்கள் தண்டனை பெற்றிருப்பதே சாட்சி என்று, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை திமுக எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும். ஏனென்றால் தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலை மாறக்கூடும்.
இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகு, தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது, ஆனால், தேர்தல் நேரத்தில் இது சரியாக இருக்குமா? என்ற ஐயப்பாடும் இருக்கிறது. காரணம் உதயநிதி துணை முதலமைச்சரானால் வாரிசு அரசியலை முன்னிலைப்படுத்திகொண்டுவந்து விட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கக்கூடும். இது மக்கள் மத்தியிலும் சலசலப்பை உண்டாக்கலாம். இதேபோல திமுக மூத்த அமைச்சர்கள் மத்தியிலும் முணுமுணுப்பு ஏற்படலாம் என்பதால், இப்போதைக்கு அது தள்ளிப்போடப்படலாம்,
திமுகவின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தற்போது அக் கட்சிக்குஎடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த ஒ.பன்னீர்செல்வம் ஒரங்கட்டப்பட்டுள்ளார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இது திமுகவுக்கு சாதகமாக அமையலாம். ஏனென்றால், அதிமுக கட்சிக்குள்ளேயே இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, இவர்களை நம்பி எப்படி வாக்களிப்பளிப்பது என்று மக்கள் சிந்திக்கக்கூடும். இதனால் எதிர்ப்பு இல்லாமல் திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
அதே நேரத்தில் பாஜக எடுத்துவரும் முன்னெடுப்புகளால் திமுக நிறைய போராட வேண்டியிருக்கும். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழலை பாஜக சரியானபடி பயன்படுத்திக்கொள்ளவே பார்க்கும். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒ.பன்னீர்ச்செல்வம், அமமுக கட்சித் தலைவர் டிடிவி.தினகரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்னும் திமுக மீது அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி ஒரு அணி உருவாக்கப்படலாம். அப்படியொரு அணி உருவானால் திமுகவுக்கு சரியான எதிரணியாகவே இருக்கும். இதில் அதிமுகவின் நிலை பரிதாபத்துக்குரியதாகலாம்.
ஏனென்றால் அதிமுக கட்சியினருக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆளுமைமிக்க தலைவராகத் தெரியலாம். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது வினாக்குறியானது. திமுகவை எதிர்த்து நல்ல கூட்டணி அமையாதது வரும் மக்களவைத் தேர்லில் திமுகவுக்கு எதிராக நல்ல கூட்டணி அமையாமல் இருப்பதற்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி சொல்வதிலும் உண்மை இருப்பதை அவதானிக்க வேண்டும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வதையும் புறந்தள்ளிவிட முடியாது. தமிழகத்தில் தற்போது வடமாநிலங்கள், தென்மாநிலங்கள் என்று அரசியல் மேலோங்கி வருகிறது. இதை வைத்து நீண்ட காலம் அரசியல் செய்துவிட முடியாது. திமுக-வைப் பொறுத்தவரையில் ஜாதி, குடும்பம் இவற்றை வைத்துத் தான் அரசியல் செய்கிறது என்று அண்ணாமலையின் குற்றச்சாற்றை திமுக கவனமாக எதிர்கொள்ள வேண்டும். திமுக பற்றி பாஜக ஒரு ஆவணக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தக் காணொலியில் திமுக என்ற கட்சி எப்படிப்பட்டது என்பதைக் காட்ட முயற்சி செய்துள்ளதாகவும், இதேபோல 11 காணொலி நாடாக்களை வெளியிட இருப்பதாகவும், தமிழக அரசியலை சுத்தம் செய்யும் வரை விட மாட்டோம் என்றும் அண்ணாமலை அறிவித்திருப்பதை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதையும் தமிழக மக்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
திமுகவுக்கு இப்படியான நெருக்கடிகள் பல இருந்தாலும், 50 வருடம் அரசியல் அனுபவமுள்ள கட்சியான திமுக தனது அரசியல்வியூகங்கள் மூலம் அனைத்தையும் முறியடித்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்பதற்கான நம்பிக்கையும் தொண்டர்களிடம் இருக்கிறது
பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த தமிழ் நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடுபட்டுச் சமதளத்திற்குக் கொண்டுவந்து சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. மதவெறிக்கு இடந்தராத மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சரின் சூளுரைக்கு மக்கள் செவி சாய்க்கலாம். இது திமுக இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகு எதிரொலிக்கலாம். திமுகவுக்கு திருப்புமுனையாகவும் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது.