சிம்பாப்வேயுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி அடுத்து ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு அடுத்து பங்களாதேஷுடன் விளையாடிவிட்டே டி20 உலகக் கிண்ணத்திற்கு போகப்போகிறது. அதாவது உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இலங்கை அணியின் நிலையை முழுமையாக சரிபார்ப்பதற்கு வலுவான அணி ஒன்றை எதிர்கொள்ளப்போவதில்லை என்பது தான் சுருக்கம்.
சிம்பாப்வேயுக்கு எதிராக இலங்கை அணி டி20 தொடரை வெல்லும் என்று முன்னதாகவே பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் இலங்கை இந்தத் தொடரை இலகுவாக வென்றதாக எடுத்துக் கொள்ள முடியாது. முதல் போட்டியில் கடைசி பந்து வரை போராடியே இலங்கை அணியால் வெல்ல முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. மூன்றாவது போட்டியிலேயே இலங்கையால் இலகுவாக வெற்றியீட்ட முடிந்தது.
டி20 அணித் தலைவராக வனிந்து ஹசரங்க செயற்பட்ட முதல் தொடர் இதுவென்பதோடு மூன்று ஆண்டுகளின் பின் அஞ்சலோ மத்தியூஸ் டி20 போட்டிகளுக்கு அழைக்கப்பட்ட முதல் தொடரும் இதுதான்.
என்றாலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பலவீனமான அணியாக இருக்கும் சிம்பாப்வேயுக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்தியதாக இந்தத் தொடரை எடுத்துக் கொள்ள முடியாது. சிம்பாப்வே அணி சரிக்கு சமமாக போட்டியிட்டது. அது சிம்பாப்வே அணியின் திறமையாக இருக்கும் அதேநேரம் இலங்கை அணியின் சில பலவீனங்களும் காரணமாக இருந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் ஆரம்ப வரிசை சற்று தடுமாற்றம் கண்டது. முதல் இரு போட்டிகளிலும் பத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பெரேரா மூவரும் ஓட்டங்கள் பெறவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படும் குசல் பெரேரா முதல் வரிசையில் களமிறக்கப்பட்டு ஓட்டங்கள் குவிக்காத நிலையில் மூன்றாவது போட்டியில் நீக்கப்பட்டார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 83 ஓட்டங்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோது ஆரம்ப வரிசை ஓட்டங்களை சேகரித்தது.
என்றாலும் மத்திய வரிசையில் மத்தியூஸின் வருகை மற்றும் தசுன் ஷானக்க ஓட்டங்கள் பெற்றதன் காரணமாக வலுவாக இருந்தது. இது இலங்கை அணிக்கு சாதகமான ஒன்றாகக் குறிப்பிடலாம். கடந்த காலங்களில் இலங்கை மத்திய வரிசையே தடுமாற்றம் கண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் முழு பலத்துடன் இலங்கை பந்துவீச்சு வரிசை இருந்தது. துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷங்க, மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்கவுடன் அஞ்சலோ மத்தியூஸும் ஓரிரு ஓவர்களை வீசுவதால் எதிரணியை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தது.
இரண்டாவது டி20 போட்டியில் பந்துவீச்சை சரியாகக் கையாளாததே தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. கடைசி ஓவருக்கு 20 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது துஷ்மன்த சமீர மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகிய இரு சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களும் தமது நான்கு ஓவர்களையும் பூர்த்தி செய்திருந்தார்கள்.
பந்துவீச அழைக்கப்பட்ட மத்தியூஸ் முதல் பந்தை நோபோல் வீசி சிக்ஸரை விட்டுக்கொடுத்தது, ஆட்டத்தை திசைதிருப்பியது. பொதுவாக மத்தியூஸ் பவர் பிளே ஓவர்கள் மற்றும் மத்திய ஓவர்களிலேயே நன்றாக பந்து வீசி வருகிறார். அதனை கருத்தில் கொண்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தால் முடிவு மாறியிருக்கக் கூடும்.
இலங்கை அணி அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் ஆடப்போகிறது. அடுத்த மாதம் நடைபெறப்போகும் இந்தத் தொடர் இன்னும் ஐந்து மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்திற்கு முக்கியமானதாக இருக்கும்.