வெளிநாட்டு மாணவர்கள் பல துறைகளிலும் கல்வி கற்பதற்கான வாய்ப்பை சவூதி அரேபியா வழங்குகின்றது.
வெளிநாட்டு மாணவர்கள் தனது நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை சவூதி அரேபியா விசாலப்படுத்தியுள்ளது. உலகெங்கிலுமுள்ள திறமையான மாணவர்களுக்கு சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “சவூதி அரேபியாவில் கல்வி கற்றல்” எனும் தொனிப் பொருளிலாலான செயலமர்வொன்றை சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சவூதி ஆரம்பித்திருந்தது. இதன் மூலம் சவூதி அரேபியா வெளிநாட்டு மாணவர்களுக்கு தனது நாட்டில் கல்வி கற்கும் சந்தர்ப்பத்தை பாரியளவில் வழங்கவிருக்கின்றமை தெளிவாகின்றது.
பீ ஏ, எம் ஏ, கலாநிதி ஆகிய கற்கை நெறிகளில் இதுவரை சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த 1,400.000 மாணவர்கள் சவூதி பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றிருக்கின்றனர். தற்போதும் உலகின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் 74 ஆயிரம் மாணவ மாணவிகள் அங்கு கல்வி கற்று வருகின்றனர்.
இலங்கையில் இருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் அங்கு கல்வி கற்கின்றனர்.
இவர்களுள் சட்டம், பொருளியல், மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு பீடம், வரலாறு, சமூகவியல், வணிக முகாமைத்துவம் போன்ற பீடங்களில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களும் உள்ளனர்.
ஆரம்பத்தில் எமது நாட்டு அரபுக் கல்லூரிகளில் கல்வி பயின்ற மாணவர்களே பெரும்பாலும் அங்கு கல்வி கற்று வந்தனர். ஆனால் தற்போது பாடசாலைகளில் உயர்தரம் வரை கல்வி கற்ற சில மாணவர்கள் கூட தமது மேற்படிப்பை சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களில் முழுமையான புலமைப் பரிசில்களுடன் தொடர்கின்றனர். இதற்காக சவூதி பாரிய ஏற்பாடுகளை செய்திருக்கின்றமை உண்மையில் பாராட்டத்தக்க விடயமாகும்.
20 க்கும் அதிகமான சவூதி அரேபிய பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குகின்றன. பொறியியல்துறை உட்பட பல பீடங்களில் கற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
அவ்வாறான பல்கலைக்கழகங்களில் அல் இமாம் முஹம்மது பின் சுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இது சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பல்கலைக்கழகமாகும். 1953 இல் ஷரீஆ கற்கைகளுக்கான பீடமாக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் கல்வி முன்னேற்றத்தில் படிப்படியாக வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு பீடங்கள் உள்வாங்கப்பட்டதுடன் அதனது கிளைகளாக இயங்கும் வகையில் பல கலைக் கல்லூரிகளும் தொடராக ஆரம்பிக்கப்பட்டன.
உள்நாட்டில் 70 கல்லூரிகளும், இந்தோனேசியா மற்றும் ஜிபூட்டி போன்ற வெளிநாடுகளில் ஐந்து கல்லூரிகளும் என பல கலைக் கல்லூரிகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இதன் மூலம் அல் இமாம் முஹம்மது பின் சுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உலகில் மிகவும் முக்கியமானதும் பழமையானதுமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அத்தோடு நின்றுவிடாது பொருளியல் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்கு சேவை செய்யும் நோக்கில் 1978 ல் இஸ்லாமியப் பொருளியல் பீடமும் ஆரம்பிக்கப்பட்டது. அதுபோல் ஊடகம் மற்றும் தொடர்பாடல் பீடம், பொருளாதாரம் மற்றும் நிர்வாக அறிவியல் பீடம், மருத்துவ பீடம், கணனி மற்றும் தகவல் அறிவியல் பீடம்,பொறியியல் பீடம், மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு பீடம் போன்ற சமகாலத்திற்குத் தேவையான மிக முக்கியமான பீடங்களும் ஆரம்பிக்கப்பட்டு கம்பீரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுபோன்ற பல்கலைக்கழகங்களில் இலங்கை நாட்டு மாணவர்களும் கல்வி கற்பதற்கு பாரிய வாய்ப்புக்களை சவூதி அரேபிய அரசாங்கம் வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அஷ்ரப் ஆப்தீன் ரியாதி விரிவுரையாளர் தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கல்லூரி.