இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்தின் மூலமாக இலங்கையில் வெங்கடாலபதி ஆலயம் கட்ட வேண்டும் என்ற பல நாட் கனவு நனவாக உள்ளது. அதற்கான இடம் கிடைத்துள்ளதாகவும் அதனை விரைவில் கட்டவுள்ளதாகவும் இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள திருப்பதி அறக் கட்டளை நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மேற்படி ஆலயம் கட்டுவது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம் பெற்றது. இந்த ஊடக மாநாட்டில் இந்தியாவிலிருந்து வருகை தந்த ரி.எஸ்.ரி அறக் கட்டளையின் கா.சசிகுமார், சாயி சமர்ப்பண அறக்கட்டளையின் ஜெகத் ராம்ஜி, அதன் அங்கத்தவர் பி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ரி.எஸ்.ரி அறக் கட்டளையின் கா.சசிகுமார் மேற்குறித்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 2023 இல் தீபாவளியன்று மூவாயிரம் மலையக குடும்பங்களுக்கு வேஷ்டி, சட்டை, புடவைகள் என்பன வழங்கி இருந்தோம் இது இந்திய இலங்கை நல்லெண்ணம் மேம்பட வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டது. அதேபோல் 2024 இல் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு நோட் புக், பேனா, பென்சில், பாதணிகள், யுனிபோர்ம் என்பன சுமார் ஐயாயிரம் குழந்தைகளுக்கு சாய் சமர்ப்பணம் அறக்கட்டளை மூலமாகவும் ரி.எஸ்.ரி. அறக் கட்டளை மூலமாகவும் வழங்கவுள்ளோம். இந்திய இலங்கை நல்லுறவை மேம்படுத்துவதற்காகவே இதனைச் செய்கிறோம்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த ஆண்டு முதல் முறையாக இலங்கைக்கு வந்துள்ளோம். இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்தின் மூலமாக இலங்கையில் வெங்கடாலபதி ஆலயம் கட்ட வேண்டும் என்பதற்காக முதலில் கொழும்பில் இடம் ஒதுக்கினார்கள். அது சரிவர நடைமுறைப்படுத்தவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கதிர் காமத்தில் இடம் தருவதாக சொன்னார்கள் அதுவும் சரிவரவில்லை. இந்த 2024 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் என்ற நல்ல எண்ணத்தில் முன்னேஸ்வர தேவஸ்தான சுவாமிகள் அருளால் புத்தளம் மாவட்டம் முன்னேஸ்வரம் தேவஸ்தானம் அருகிலேயே அந்த ஆலயத்திற்கு சொந்தமான இடங்களை இந்தியாவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு அறக்கட்டளை மூலமாக வழங்க உள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானம் மூலமாக நிதியை ஓதுக்கி அங்கு மிகப் பெரிய வெங்கடாசலபதி ஆலயம் கட்டலாம் என்று திருப்பதி தேவஸ்தாக கமிட்டி முடிவு செய்து அவர்களின் ஆலோசனையின் பெயரில் நாங்கள் இந்த இடத்தை பார்வையிடுவதற்காக வந்தோம்.
அந்த இடத்தை பார்வையிட்டோம் அவர்களும் முன்னேஸ்வரம் தேவஸ்தான அறக் கட்டளையும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு இடம் தருவதாக உறுதியளித்துள்ளார்கள் என்றார்.
(கொழும்பு தினகரன் நிருபர்)