அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக நாடு தயாராகி வருகிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கனவு நனவாகி உள்ளது. உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடி மற்றும் அனைத்து தொடர்புள்ளவர்களும் அதை நிறைவேற்றுவதில் ஆற்றிய பங்கை பாராட்ட வேண்டிய நேரம் இது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள கதை சுவாரசியமானதும், மர்மங்கள் நிறைந்ததும் ஆகும்.
கடந்த 2002-ஆம் ஆண்டு கோடை காலத்தில் அப்போதைய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், பெங்களூரு ஆசிரமத்துக்கு என்னை சந்திக்க வந்திருந்தார். ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி சர்ச்சை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியை சந்தித்துப் பேசுவதற்காக காஞ்சிபுரத்துக்குச் சென்று விட்டு அங்கிருந்து வந்திருந்தார். சங்கராச்சாரியார் மற்றும் முக்கிய முஸ்லிம் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு நிகழ்ந்த சந்திப்பு இது.
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், ராமர் கோயில் கட்டுவதற்கான வழியை உடனடியாகத் தீர்மானிக்க வேண்டும் என்று அசோக் விரும்பினார். இதுவே அவரது ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்தது. வாஜ்பாய் ஒரு கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வந்த அந்த சூழலில் அவரது சில கோரிக்கைகள் நடைமுறைக்கு மாறானதாகத் தோன்றியது.
சுவாரசியமான விஷயம் என்னவெனில், அயோத்தி சர்ச்சையில், சாகும் வரை உண்ணாவிரதப் பிரசாரத்தின் போது அசோக் சிங்காலுக்கு வாஜ்பாய் வலுக்கட்டாயமாக உணவளித்தார். அதன் பிறகு அசோக், வாஜ்பாயுடன் பேசுவதில்லை. எனவே, இப்போது ராம ஜென்ம பூமி விவகாரத்தில் நிரந்தரமாக பிரச்சினையைத் தீர்க்க சட்டம் கொண்டு வர வாஜ்பாயை வற்புறுத்துமாறு என்னைக்கேட்டுக் கொள்வதற்காக அவர் ஆசிரமத்துக்கு வந்திருந்தார். ‘‘அது ஆட்சி கவிழ்வதற்கு வழிவகுத்தாலும் எனக்கு கவலை இல்லை’’ என்று அசோக் கூறினார்.
அசோக் 76 வயதானவர். கோயில் கட்டப்படுமா தன் வாழ்நாளில் அதைப் பார்க்க முடியுமா என்று கேட்டார். குறைந்தது இன்னும் 14 ஆண்டுகளுக்கு இது நடக்காது என்று நான் உள்ளுணர்வாக உணர்ந்தேன். அதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்; உங்கள் அர்ப்பணிப்புடன், அனைத்தும் சாத்தியமாகும் என்று நான் அவரிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. நான் சொன்னதை ஓரளவு நம்பி அசோக் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.
மறுநாள் காலை தியானத்தின் போது, பாழடைந்த தேவி கோயில் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் ஓர் குளம் எனக்கு தெரிந்தது. அந்த நேரத்தில் நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் இருந்து ஒரு வயதான நாடி சித்தர் ஆசிரமத்திற்கு வந்து என்னைச் சந்திக்க விரும்பினார். அவர் பழங்கால பனை ஓலைகளைப் படிக்கும் போது, “குருதேவ், ராம ஜென்ம பூமி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரு சமூகங்களையும் ஒன்று சேர்ப்பதில் நீங்கள் ஒரு பங்கு வகிப்பீர்கள் என்று நாடியில் எழுதப்பட்டுள்ளது” என்று ஒரு மென்மையான அதிகாரத்துடன் கூறினார். மேலும், “ஸ்ரீராமரின் குலதெய்வமான தேவகாளிக்குக் கட்டப்பட்ட கோயில் கடுமையான புறக்கணிப்பில் சிக்கித் தவிப்பதை நாடி ஓலைகள் வெளிப்படுத்துகின்றன, அதை மீட்டெடுக்காவிட்டால், அயோத்தியில் உள்ள ராமர்கோயிலைச் சுற்றியுள்ள வன்முறை மற்றும் சண்டைகள் ஒரு முடிவுக்கு வராது, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று கூறினார்.
நாடி சித்தரோ நானோ அப்படி ஒரு கோயில் இருப்பது பற்றி அறிந்திருக்கவில்லை. சில ஆதாரங்கள் மூலம், அயோத்தியில் காளி கோயில்கள் இருப்பதைப் பற்றி கண்டுபிடிக்க முடிந்தது. உண்மையில் 2 காளி கோயில்களை கண்டுபிடித்தோம்.முதலாவது, நகரின் மையத்தில் சோட்டி தேவகாளி மந்திர் என்றும், 2-வது, சற்று தொலைவில், தேவகாளி மந்திர் என்றும் அழைக்கப்பட்டது.
தேவகாளி கோயில் இடிந்த நிலையில் இருந்தது. அதன் மத்தியிலுள்ள குளம் ஒரு குப்பை கொட்டும் இடமாக காணப்பட்டது. டெல்லி மற்றும் லக்னோவில் உள்ள எங்கள் தன்னார்வலர்களிடம் கோயிலை புதுப்பித்தல் மற்றும் குளத்தை புதுப்பிக்கும் பணியை துவங்குமாறு கேட்டுக் கொண்டேன். செப்டெம்பர் மாத மத்தியில், அவர்கள் அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.
செப்டெம்பர் 18-ம் திகதி ஒரு குழுவினருடன் அயோத்தியைச் சென்றடைந்தேன். ஹனுமான் கர்ஹி, ஸ்ரீ ராம் ஜன்மஸ்தான் மற்றும் பிற புனிதத் தலங்களுக்குச் சென்ற போது, நகரத்தின் குறுகிய பாதைகள் மற்றும் குப்பைகள் நிறைந்த பாதைகள் புறக்கணிப்பின் அப்பட்டமான நிலையை எடுத்துக் காட்டின. மக்களிடையே ஓர் அச்ச உணர்வு நிலவி இருந்தது. நான் சென்ற இடமெல்லாம், இந்த நீண்ட கால மோதலால் எத்தனை சாதுக்கள் மற்றும் துறவிகள் உயிரிழந்தனர் என்பதைப் பற்றி மக்கள் சோகமான கதைகளைக் கூறினர்.
சரியான ஆசிரமங்கள் அல்லது குடும்பம் அல்லது இருப்பிடம் இல்லாத இந்த சாதுக்களுக்காக யாரும் குரல் கொடுக்கத் துணியவில்லை. அவர்களின் அவலக் கதைகளைக் கேட்கும் போது மனம் வேதனையடைந்தது. இவையெல்லாம் ஊடகங்களில் இடம் பெறாத கதைகள்.
கடந்த 2002-ம் ஆண்டு செப்டெம்பர் 19-ஆம் திகதி காலை தேவகாளி கோயிலின் மறு கும்பாபிஷேகம் நடைபெற்றது. எங்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த பண்டிதர்கள் குழு என் முன்னிலையில் அதனை நடத்தினார்கள். நான் புனித அக்னியில் பூர்ணாஹுதியை அர்ப்பணித்த போது, இந்தக் கோயிலின் வயதான பூசாரியின் கண்களில் மகிழ்ச்சி மற்றும் நன்றியினால் கண்ணீர் வழிவதைக் கண்டேன்.தேவகாளி தன் அனைத்து மகிமையினாலும் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
நான் முன்னர் ஒதுக்கித் தள்ளி விட்ட எனது தியானத்தில் தோன்றிய விஷயம் மற்றும் நாடிசித்தரின் கணிப்பு ஆகியவற்றை அன்று அங்கு வந்திருந்த டொக்டர் பி.கே.மோதியிடம் விவரித்தேன். விநோதமாக, கோயிலில் அன்று நிகழ்ந்த பூஜைக்குப் பிறகு, வகுப்புவாத வன்முறையால் யாரும் ரத்தம் சிந்தவில்லை என்றும் கலவரம் நடந்ததில்லை என்றும் கூறினார். ஒரு தீர்க்க தரிசனம் நிறைவேறியது. அன்று அசோக் சிங்காலும் உடனிருந்தார், ராமர் கோயில் பிரச்சினைக்கு இறுதித் தீர்மானத்தை நோக்கி வேகம் பெற இன்னும் 14 ஆண்டுகளாவது ஆகும் என்று எனக்கும் அதே உள்ளுணர்வு முன்னறிவிப்பு இருந்தது.
வருடங்கள் கடந்தன. 2017-ஆம் ஆண்டு, இரு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களாலும், பின்னர் உச்ச நீதிமன்றத்தாலும் தூண்டப்பட்டு, ராமஜென்ம பூமி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கான எனது முயற்சிகளை மீண்டும் தொடங்கினேன். இறுதியில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது, அந்த நிலத்தை கோயில் கட்டுவதற்கும், 5 ஏக்கர் மசூதி கட்டுவதற்கும் ஒதுக்கியது. 500 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த மோதல் அமைதியான தீர்வை எட்டிய ஒரு முக்கியமான சந்தர்ப்பம் அதுவாகும்.
பெரும்பாலும், ஒரு வெளிப்படையான மொத்த நிகழ்வின் அடிப்படையானது ஓர் நுட்பமான அம்சத்தைக் கொண்டுள்ளது. வெளிப்படுவதற்கு முன் நுட்பமான இடத்தில் அத்தகைய நுண் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. மொத்த எல்லைக்குள் நாம் காரண மற்றும் விளைவு இயக்கவியலை வழிநடத்த முனைகிறோம். எப்போதாவதுதான் அதைத் தாண்டி நம் உணர்வை விரிவுபடுத்துகிறோம்.
நாம் அவ்வாறு செய்தால், நுட்பமான மண்டலத்தின் சக்திகள், பௌதிக மண்டலத்தின் விளைவுகளின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்தும் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம். இது, நாம் வாழும் இந்த புதிரான பூமியின் மற்றொரு மர்மம்.