எனக்குள் என்னையே
தொலைத்தேன்
ஒரு நாள் அதைத் தேடி
அலைந்தேன்
எனக்குள் இருந்த பாவம் எங்கே
நான் சுமந்த நன்மைகள் எங்கே
மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும்
மந்த நிலை
நெகிழ்ச்சியும் நெருக்கடியும்
இல்லாதவொரு புதிய நிலை
துவக்கம் முடிந்ததா?
முடிந்ததில் துவங்குமா?
நேசம் துறவறம் பூண்டதோ
துறவறம் நேசிக்கத்
தொடங்கியதோ?
நாடகம் வீதிக்கு வந்ததோ?
வீதியின் நாடகம்
விதிமீறல் பெற்றதோ?
நிமிர்ந்த நிலையில் தூக்கம்
உறங்கும் நிலையில் விழிப்பு
சாமானியன் சீக்காளி ஆகிறான்
சீக்காளி குணமாகிப் போகிறான்
மொழி வனவாசம் சென்றது
மௌனம் வாசத்தைத்
தொலைத்தது
பாழ் பிடித்த கரிய இரவொன்றில்
அடங்காத் தாகத்துடன்
இதயவொலி இருமிக்
கொண்டே இருக்கிறது
குழிவிழுந்த கண்களால்
பஞ்சடைத்த பார்வைக்கொண்டு
தனிமையில் உடைந்து
மூச்சிரைக்கும்
முனங்கலோடு
மரணங்கொத்தும் பறவையைத்
தடாவித் தேடத் தொடங்குகிறது
முதுமையின் தள்ளாட்டம்!