கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லரும், அதில் இடம்பெற்றுள்ள வசனமும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள படம் ‘ரகு தாத்தா’. பெரும் வரவேற்பை பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார்.
இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தி திணிப்பு விவகாரத்தை மையமாக கொண்டு படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் இந்தியில் சொல்லப்படும் வார்த்தையை புரிந்துகொண்டு பலரும் அதன்படி செயல்பட, கீர்த்தி சுரேஷ் மட்டும் ‘தமிழ்ல சொல்லுங்க சார்’ என உறுதியாக நிற்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் இந்தி திணிப்பு வலுவாக எதிர்க்கப்படுகிறது.
இந்தி எக்ஸாம் எழுதுனாதான் எனக்கு புரமொஷன் கிடைக்குமா? அப்டினா எனக்கு புரமோஷனே வேணாம்’, வசனம் ‘இந்தியை திணிக்காதே’ முழக்கம், ‘இதையெல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால் இந்தி தெரியாது போயா’ போன்ற வசனங்கள் மூலம் அழுத்தமான அரசியலை படம் பதிவு செய்கிறது என்பது புரிகிறது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.