ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம், ‘சிங்கப்பூர் சலூன்’. இதில், சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ்கனகராஜ், ஜீவா கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். கோகுல் இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வரும் 25-ம் தேதி வெளியிடுகிறது. படம் பற்றி நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது:
லாக்டவுன் நேரத்தில் இயக்குநர் கோகுல் ஒரு கதை சொன்னார். பிடித்திருந்தது. சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. அடுத்து சில மாதங்கள் கழித்து வேல்ஸ் நிறுவனம் மூலம் ‘சிங்கப்பூர் சலூன்’ கதை வந்தது.அந்தக் கதையுடன் என்னை ‘கனெக்ட்’ பண்ணிபார்க்க முடிந்தது. ஆனால், இது பெரிய படம் என்பதால் தயக்கம் இருந்தது. தயாரிப்பாளர் நம்பிக்கைக் கொடுத்தார்.
கதிர் என்கிற இளைஞனுக்கு, தான் ஒருஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசை.அந்த ஆசைக்கு வருகிற தடைகளை உடைத்துஅந்த இடத்துக்கு அவன் எப்படி செல்கிறான் என்பது கதை. அதை கமர்சியலாக காமெடியுடன் சேர்ந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கோகுல். இது பெரிய படம். இந்தப் படத்துக்காக, கத்திரிகோலை கையால் சுத்துவது, எப்படி பார்க்க வேண்டும்? முடியை எப்படி பிடிக்க வேண்டும்? என்கிற விஷயங்களைச் சில ஹேர்ஸ்டைலிஸ்ட் சொல்லிக் கொடுத்தனர். கதையில் சமத்துவத்தைப் பற்றி இயக்குநர் பேசியிருக்கிறார். இதில், மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல் என்ற இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மீனாட்சி சவுத்ரி நடிக்க வரும்போது புதுமுகமாக வந்தார். அடுத்து மகேஷ்பாபு படத்துக்குச் சென்றார். இப்போது, விஜய் படத்தில் நடித்து வருகிறார். அவர் இதில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவ்வாறு ஆர்ஜேபாலாஜி கூறினார்.