அவுஸ்திரேலியாவில் ஒட்டகங்களே கிடையாது. 1840ஆம் ஆண்டுக்கு பின் அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் பயணம் செய்வதற்கு வசதியாகவும் பொருட்களை எடுத்துச்செல்லவும் ஒட்டகங்கள் தேவைப்பட்டன. இதற்காக இந்தியாவிலிருந்து 1840-இல் 6,000 அரேபிய டிரோம்டாரிஸ் வகை ஒட்டகங்களையும் 1,000 மத்திய ஆசிய இரு திமில்கொண்ட பேக்டேரியன் ஒட்டகங்களையும் இறக்குமதி செய்தது அப்போது ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசு. இவற்றில் இரு திமில்கள் கொண்ட ஒட்டகங்கள் கடும் வெப்பப் பகுதியான வட அவுஸ்திரேலியப் பகுதிகளில் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போயின. ராஜஸ்தான், அரேபியா போன்ற வெப்பநிலை கொண்ட வடக்கு அவுஸ்திரேலியாவில் ஒரு திமில்கொண்ட இந்திய ஒட்டங்கள் அதிகமாக வளர்ந்திருக்கின்றன.
அவுஸ்திரேலியா மட்டுமல்ல, அமெரிக்காவிலும் கூட ஒட்டக இறக்குமதி நடந்தது. 1850களில் நடந்த இந்த இறக்குமதியால் அதிகம் பலனடைந்தவர்கள் கலிஃபோர்னியா, அரிசோனா போன்ற வரண்ட நிலப்பகுதிகளில் வசித்த மக்களே. அமெரிக்க ஆர்மியில் குதிரைப்படை மாதிரி சிறிது காலம் ஒட்டகப்படை கூட இருந்தது. ஆனால், வெளியிலிருந்து வந்த ஒட்டகங்களை படை வீரர்களுக்குப் பிடிக்கவில்லை, ஒட்டகங்களும் அவர்களோடு ஒட்டவில்லை. நாளடைவில் இந்தப்படை கலைக்கப்பட்டுவிட்டது.